இது உங்கள் இடம்! 22–3–2020

பதிவு செய்த நாள் : 20 மார்ச் 2020

பக்திக்கும் விழிப்புணர்வு தேவை!

நானும் எனது நண்பரும் அருகில் உள்ள கணபதி கோயிலுக்கு சென்றோம். நான் பன்னீர் மட்டும் வாங்கி விநாயகரின் தலை முதல் பாதம் வரை விட்டு வழிபட்டேன். எனது நண்பர் தான் வாங்கி வந்த தேங்காயை உடைத்தார். அது பாதி உடைந்தது. மீதி உடையாமல் அப்படியே இருந்தது. அதனால், நண்பரின் முகம் வாடியது. தேங்காய் அருகில் சென்று பார்த்த போது அழுகியிருந்தது. உடனே நேரம் சரியில்லை, நிலைமை சரியில்லை என்று அழுது விட்டான். நான் சொன்னேன்.... ‘‘நிலைமை தேங்காய்க்குத்தான் சரியில்லை, தேங்காய் பக்குவமாக சரிபட அமையவில்லை. அதனால் அழுகிவிட்டது. இது உன் குற்றமு மில்லை, தெய்வ குற்றமுமில்லை’’ என்று சொல்லி சமாதானப்படுத்தினேன். பக்திக்கும் விழிப்புணர்வு தேவை.

– பாரதி சுந்தர், குறண்டி.

சுற்றுப்புற சூழலில் கவனம் வேண்டும்!

நம் பூமி வெப்பமாவது கண்டு மக்கள் பலர் அஞ்சுகிறார்கள். அறிவியலை சொல்லிக் கொண்டே போகிறார்கள். நாம் அதை காதில் வாங்கியும் வாங்காமலுமாக போய் கொண்டிருக்கிறோம். அதற்கு வழி – ஏராளமான மரங்கள்  நட்டு வளர்ப்பது தான். பூமி குளிரும். வனவிலங்குகள் எங்கெங்கும் பெருகும். மழை வரும், தண்ணீர் செழிக்கும். மரங்களை வெட்டாதிருத்தல் வேண்டும். சொல் வேறு செயல்கள் வேறு இல்லாமல் எல்லோரும் ஒற்றுமையாய் ஒரு குலமாய் அறிவுள்ளவர்கள் சொல்லும் யோசனையை அப்படியே காதில் வாங்கி செயல்பட்டால் நாடு சுபிட்சம் பெறும். மரங்கள் நடுவோம், விலங்குகளை பேணுவோம்.

– ப. மாதேவன், வெள்ளமடம்.

துரிதப்படுத்த வேண்டும்!

நெல்லை சந்திப்பு பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு ஒரு வருடம் கடந்துவிட்டது. புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி aஆமை வேகத்தில் நடைபெறுவதால் அக்கம் பக்கம் ஊர்களில் இருந்து திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு தினசரி வேலைக்கு செல்பவர்கள் செங்கோட்டை பாசஞ்சர், திருச்செந்துார் பாசஞ்சர் போன்ற பாசஞ்சரும் காலையில் 6.30 மணியிலிருந்து 7.30 மணிக்குள் அடுத்தடுத்து செல்கிறது. அக்கம் பக்கம் ஊர்களில் இருந்து டவுன் பஸ்சில் வருபவர்கள் ஈரடுக்கு மேம்பாலம் அண்ணா சிலை அருகில் இறங்கி ரயில்வே நிலையம் செல்பவர்கள் அவசர கதியில் செல்பவர்கள் நடையும் ஓட்டமுமாக ரயில்களை பிடிக்க செல்ல வேண்டி உள்ளது. எனவே பஸ் நிலைய வேலையை விரைவில் துரிதப்படுத்த வேண்டும்.

– கோஸ் பாய், மேலப்பாளையம்.

செருப்பணிந்து பொங்கலிடலாமா?

முன்பெல்லாம் தைப்பொங்கல் அங்கொன்றும் இங்கொன்றுமாக கடமைக்கு நடக்கும். குறிப்பாக, நகரங்கள் தெருவில் பொங்கலிடுவதை கவுரவக்குறைச்சலாக நினைத்த காலமுண்டு. ஆனால் இன்று பள்ளி, கல்லுாரி, பல்கலைக்கழகங்களில் வேஷ்டி, சேலை அணிந்து நமது பாரம்பரிய முறைப்படி பொங்கலிடுவது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. இதற்கு மத்தியில் சிலர் தமிழர் மரபை மறந்து செயல்பட்டது வேதனையை ஏற்படுத்தியது. பொங்கல் வைக்குமுன் காய்கறிகள், பழங்கள், கரும்பு, மஞ்சள் குழை, மாவிலை என்று அத்தனையும் மரபாக பொங்கலிடுமுன் சில துணைவேந்தர்களும், ஆசிரியர்களும் செருப்பு காலுடன் பொங்கல் பானையில் அரிசி அள்ளிப் போட்டது ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தது.... இதை மாற்றிக் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

– பா. சீமான்ஜி, வெள்ளானைக்கோட்டை.

மகிழ வைத்த மருமகள்!

பிரபல ஜவுளிக்கடையில் திருமண வீட்டார் முகூர்த்தப் பட்டு எடுக்க வந்திருந்தார்கள். மாப்பிள்ளையின் அப்பா சொன்னார்... ‘‘முகூர்த்தப்புடவை நாற்பதாயிரத்திலிருந்து நாற்பத்தைந்துக்குள் எடுங்கள்’’ என்று. பையனின் அம்மா அந்த விலையில் உள்ள கவுண்டரை நோக்கி செல்ல, மணப்பெண் மாமியாரை அழைத்தாள். ‘‘அத்தை, அவ்வளவு விலையில் வேண்டாம். பதினைந்துக்குள் எடுப்போம். போதும்’’ என்றாள். ஏன்.... என வினவிய மாமியாரிடம் சொன்னாள். ‘‘அத்தை, உங்க மகன் வெளிநாட்டில் வேலை செய்வதால், மணமான மறுவாரமே கிளம்பிவிடுவேன். எப்போதாவது வரும்போது முகூர்த்த மாதமாக இருக்கணும். நானும், கலந்துக்க சான்ஸ் வரணும். முகூர்த்த புடவை பீரோவினுள் இருப்பதற்கு எதற்கு அதிக விலையில் வாங்கணும்னு நினைக்கிறேன்.’’ மாமியார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் என எழுதியிருந்த கவுண்டரை நோக்கி செல்ல, அங்கு நின்றிருந்த அனைவருமே மணப்பெண்ணை பாராட்டினர்.

– என். கோமதி, பெருமாள்புரம்.