சிறுகதை: மயக்கமென்ன உந்தன் மவுனமென்ன! – தி. வள்ளி, திருநெல்வேலி.

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2020

டீ போட்ட பாத்திரத்தையெல்லாம் கழுவி, கவிழ்த்து விட்டு, அடுப்பு மேடையை துடைத்துவிட்டு மரகதம் ஹாலுக்கு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்தாள்.

‘‘என்னங்க! பேப்பர் படிக்க ஆரம் பிச்சாச்சா? அந்த பேப்பர்ல அப்படி என்ன தான் இருக்குமோ? காலையிலே வந்த பேப்பரை இன்னும் படிச்சு முடிக்கலே....’’ என்றாள் எரிச்சலுடன்.

‘‘உனக்கு எரிச்சல் என்பேர்லயா? இல்லே பேப்பர் பேர்லயா?’’ என்றார் ரத்தினம் கிண்டலாக.

‘‘எப்படித்தான் நிம்மதியா இருக்கீங் களோ? நீங்க வயசு வந்த பொண்ணை வச்சுக்கிட்டு இன்னும் கல்யாணம் கூடி வரமாட்டேன்ங்குதேன்னு நான் கவலைப்பட்டுக்கிட்டு இருக்கேன். உங்களுக்கு ஏதாவது கவலை இருந்தாத்தானே?’’

‘‘இப்ப என்ன செய்ய சொல்ற...?’’

‘‘அந்த கல்லிடைக்குறிச்சி பையன் வீட்ல வந்து பார்த்துட்டு போயி 10 நாளாச்சு. நல்ல குடும்பம். பையனும் கண்ணுக்கு லட்சணமா இருக்கான். நல்ல வேலையிலே இருக்கான். இதைவிட என்ன வேணும் உங்க பொண்ணுக்கு? பிடிச்சிருக்குன்னு டக்குன்னு சொல்ல மாட்டேன்ங்கிறாளே... நீங்களும் உங்க மககிட்ட பேச மாட்டேன்ங்கிறீங்க...’’

‘‘மரகதம்! நீ ஒரு விஷயம் புரிஞ்சுக்கணும். அந்த காலம் வேற, இந்த காலம் வேற. திடீர்னு ஒரு நாள் எங்கப்பா என்கிட்ட வந்து ‘சேரன்மாதேவி கவர்ன்மென்ட் ஸ்கூல் ஹெட்மாஸ்டர் மூத்த பொண்ணு மரகதத்தை உனக்கு பார்த்திருக்கேன். தை மாசம் கல்யாணம் வச்சுக்கலாம்னு சொல்லிட்டேன்’ன்னு சொன்னாரு. அப்ப நான் வேலைக்கு போய் முழுசா ஒரு மாசம் கூட ஆகலே. ஒரு ஆறு மாசம் போகட்டும், நான் நல்லா கால் ஊனிக்கிறேன்னு சொல்ல நினைச்சாலும் அவரை எதிர்த்து பேசுற தைரியம் இல்லை. நம்ம இரண்டு பேருமே கல்யாணத்தன்னைக்குத்தான் ஒருத்தரையொருத்தர் பார்த்தோம். அது ஒரு காலம். அப்பா, அம்மா பேச்சே வேதவாக்கு. நமக்குன்னு தனிப்பட்ட கருத்து இருந்ததில்லை. இருந்தாலும் அதுக்கு மதிப்பு கொடுப்பார் யாருமில்லை. இப்ப காலம் அப்படி இல்லை மரகதம். வித்யா நல்லா படிச்சிருக்கா. வேலைக்கு போறா. அவளுக்கு எது வேணுமோ அதை தேர்ந்தெடுக்கிற உரிமை இருக்குன்னு நினைக்கிறா. அது நாம தப்புன்னு சொல்ல முடியாது.’’

‘‘எது எப்படியோ, அவளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்க்கிற பொறுப்பு நமக்கிருக்கே? இந்த மாப்பிள்ளை வீடும் நல்லவங்க. அதனாலதான் பதில் கேட்டு நம்மளை நெருக்கலை. இந்த இடத்தை சொன்னதே உங்க பிரண்ட் நட்ராஜ் அண்ணன். அவர் வந்து கேட்டா என்ன பதில் சொல்ல போறீங்க... அதையாவது முடிவு பண்ணிக்கோங்க. வித்யா சீக்கிரமா முடிவு சொன்னா நல்லது. இவ தானும் குழம்பி, நம்மளையும் குழப்புவா...’’

‘‘வித்யாகிட்ட நான் பேசிட்டேன். அவ ஒரு வாரத்திலே தன் முடிவை சொல்றதா சொல்லியிருக்கா. ஒண்ணு மட்டும் தெளிவா இருக்கேன். என் மகளுக்கும் அந்த பையனுக்கும் பூரண சம்மதம் இருந்தால் மட்டுமே கல்யாணம். இதை நட்ராஜ்கிட்டயும் தெளிவா சொல்லிட்டேன்.’’

காலிங் பெல் ஒலிக்க மரகதம் கதவை திறக்க எழுந்தாள். வித்யா வந்து விட்டாள் போல என நினைத்தபடி கதவை திறக்க, வெளியே நட்ராஜ் நின்றிருந்தார். ஒரு நிமிடம் ‘திக்’கென்றிருந்தது. வித்யா பதில் சொல்லாத நிலையில் இவரிடம் என்ன சொல்வது என்ற நினைப்பு ஓடியது. சமாளித்துக் கொண்டு...

‘‘வாங்கண்ணே!’’ என்று வரவேற்றாள்.

‘‘என்னப்பா ரத்தினம்! எப்படி இருக்கே?’’ என்றவாறு உள்ளே வந்தவர் பொதுப்படையான விஷயங்களை பேச ஆரம்பித்தார். மரகதத்திற்கு அதுவே பெரிய ஆறுதலாக இருந்தது.

‘‘நீங்க பேசிக்கிட்டு இருங்க... காபி எடுத்துட்டு வர்றேன்...’’ என்று எழுந்தவளை...

‘‘மரகதம்! முதல்ல உட்காரு. காபியெல்லாம் பிறகு பார்த்துக்கலாம். ஒரு முக்கிய விஷயம் சொல்லணும்.’’

‘ஒரு வேளை அந்த பையனுக்கு வித்யாவை பிடிக்கவில்லையோ...’ பலவாறாக எண்ணம் ஓடியது மரகதத்திற்கு.

‘‘அது வந்து.... அன்னைக்கு பார்த்துட்டு போனாங்களே கல்லிடைக்குறிச்சி குடும்பம்....’’ அவர் இழுக்க ரத்தினத்திற்கு பொறுக்க முடியவில்லை.

‘‘சொல்லுப்பா! விஷயம் எதுவானாலும் பரவாயில்லை. அந்த பையனுக்கு வித்யாவை பிடிக்கலையா?’’

‘‘அதெல்லாம் இல்லப்பா... அவங்க சைடுல ஓகேதான். அவங்க எல்லோருக்குமே நம்ம வித்யாவை பிடிச்சிருக்கு. உங்க பதிலைத்தான் எதிர்பார்த்துக்கிட்டு இருந்தாங்க.’’

‘‘அப்ப ஏன் தயங்கறே? என்ன விஷயம்ப்பா...?’’

‘‘அதுக்குள்ளே ரத்னம், அந்த பையனோட அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். ஐசியுவிலே அட்மிட் பண்ணி மூணு நாளாச்சு...’’

‘‘ஐயையோ...’’ பதறினார்கள் மரகதமும், ரத்தினமும்.

‘‘இப்ப எப்படி இருக்காரு நட்ராஜ்?’’

‘‘பயப்படாதேப்பா. இப்ப பரவாயில்லை. இன்னைக்கு காலையிலே ரூமுக்கு ஷிப்ட் பண்ணிட்டாங்க...’’

சற்றே யோசித்த ரத்தினம்...

‘‘மரகதம் கிளம்பு... நாம போயி பார்த்திட்டு வந்திடுவோம்’’ மரகதம் தயங்க...

‘‘இதோ பாரு.... கல்யாணம் நடக்குமா, நடக்காதாங்கிறது எல்லாம் வேற விஷயம். அந்த குடும்பம் நமக்கு அறிமுகமாயிட்டாங்க. அந்த மனுஷன் நல்லவர். கண்டிப்பா அவரை போய் பார்த்துட்டு வரணும் கிளம்பு. வித்யா இப்போ வந்திடுவா. வந்ததும் சொல்லிட்டு கிளம்பிடுவோம்.’’

வித்யா அதே நேரத்தில் உள்ளே வர, ரத்தினம் விஷயத்தை கூறியபோது, அவளும் அதிர்ந்து போனாள். பின் அப்பாவிடம் ‘‘அப்பா... நானும் உங்களோடு வர்றேன்...’’ என்றாள் தீர்மானமாக. கல்யாண விஷயத்தில் சற்று குழம்பிக் கொண்டிருந்தாலும் ஏதோ ஓர் உணர்வு அந்த பெரியவரை போய் பார்க்கத் துாண்டியது.

நால்வரும் ஆஸ்பத்திரியை அடைந்தார் கள். நர்சிடம் அனுமதி பெற்று உள்ளே போக, அந்த பையன் விவேக் அப்பாவை தோளில் சாய்த்து கிண்ணத்தில் இருந்த கஞ்சியை ஸ்பூனால் ஊட்டிக் கொண்டி ருந்தான். அவர்களை கண்டதும்,

‘‘வாங்க அங்க்கிள்.... வாங்க ஆண்ட்டி உட்காருங்க. அம்மா இதோ வந்திடுவாங்க. நர்ஸ்கிட்ட ஏதோ கேட்க போனாங்க’’ என்றான்.

அவர்களை நாற்காலியில் அமரச் செய்தான். வித்யாவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தன் வீட்டிற்கு அழகாக, நீட்டாக டிரஸ் பண்ணிக் கொண்டு வந்த மாப்பிள்ளையாக இல்லை விவேக். கவலை, கண்களில் துாக்கமின்மை, சோர்வாக தெரிந்தான் விவேக். அவன் அம்மாவும் வந்துவிட எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். பேச்சின் நடுவே விவேக் அம்மா...

‘‘பாவம் விவேக்! நைட் அவன்தான் கண்முழிச்சு அப்பாவை பார்த்துக்கிறான். பகல்ல நான் பார்த்துக்கிறேன். வீட்ல போய் நிம்மதியா கொஞ்ச நேரம் துாங்கிட்டு வான்னு சொன்னா கேக்க மாட்டேங்கிறான்’’ என்றாள்.

‘‘நீங்க பேசிக்கிட்டு இருங்க’’ என்றவன் கீழே போய் கேண்டீன்ல எல்லோருக்கும் காபி வாங்கி வந்தான். வித்யா அவனுக்கு உதவி செய்ய, டம்ளரில் காபியை ஊற்றி எல்லோருக்கும் கொடுத்தாள்.

‘‘தேங்க்ஸ்...’’ என்றவனை பார்த்து புன்னகையோடு தலையாட்டினாள். அந்த அரை மணி நேரமும் அப்பாவின் அருகில் அமர்ந்து கவனித்துக் கொண்டாள். எல்லோரும் விடைபெற்று கொண்டு கிளம்பி வீடு வந்து சேர்ந்தனர்.

மரகதம் இரவு டிபன் வேலையில் மூழ்க, ரத்தினம் வாக்கிங் போய்விட்டார். வேலை பார்க்கும் போது மரகதம், நீட்டாக டிரஸ் பண்ணிக் கொண்டு வந்த போதே வித்யா சம்மதம் சொல்ல தயங்கினாள். இன்னைக்கு சோர்ந்து போய் சாதாரணமாக தெரிஞ்ச பையனை எங்கே ஒத்துக்க போறா என்று நினைத்தாள். இரவு டின்னர் ரெடியாக, மகளையும், கணவனையும் சாப்பிட அழைத்தாள்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த அப்பாவை பார்த்து, ‘‘அப்பா....’’

‘‘என்ன வித்யா?’’

‘‘உங்ககிட்ட தனியா பேசணும்...’’

‘‘சும்மா சொல்லும்மா உங்கம்மாவும் தெரிஞ்சுக்கிடட்டும்...’’

‘‘அது வந்துப்பா.... விவேக்கையே பேசி முடிச்சிடுங்கப்பா..... ஆனா ஒண்ணு. கல்யாணத்தை மட்டும் அவசரப்படுத்தாதீங்க... அந்த அங்க்கிள் முழுசா நல்லா குணமாகட்டும்’’ என்றாள் தெளிவாக.

புறத்தோற்றத்தை விட மகள் எதிர்பார்த்த ஏதோவொன்றை அந்த பையனிடம் கண்டுகொண்டதே அவள் சம்மதிக்க காரணம் என்று புரிந்து கொண்டார். அது எதுவென்று அவருக்கும் புரிந்தது. எதுவும் புரியாமல் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள் மரகதம்.

 ***