‘எதையும் கொடுத்து பழகணும்’

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2020

கோவை மாவட்டத்தின் தெற்கு மூலையில் உள்ள அரிசிபாளையம் கிராமத்தில் இருக்கிறது ஆறுமுகம் –- தனபாக்கியம் தம்பதியின் வீடு. ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆறுமுகத்திற்கு வயது, 77; ஓய்வு பெற்ற செவிலி தனபாக்கியத்திற்கு வயது 76; மார்ச் 9, 2020ல் இவர்களின் திருமண வாழ்க்கைக்கு வயது 50.

 * கணவன் -– மனைவி உறவின் வெற்றி என்பது எதில்?

'நிறைகுறைகளை சமமா பாவிச்சு ஏத்துக்கிற புரிதல்ல இருக்கு!' -– ஆறுமுகம்.'விட்டுக் கொடுத்து விட்டுப் பிடிக்கும் லாவகத்துல இருக்கு!' -–தனபாக்கியம்.

* 'மனைவி என்பவள் மந்திரி'யாமே?

என் வாழ்க்கையில அது உண்மைதான்! யாராவது உதவின்னு வந்து நின்னா, யாரு என்னன்னு பார்க்காம கேட்டதை துாக்கிக் கொடுக்குற பழக்கம் எனக்கு! அந்த சமயத்துல, 'நீங்க அடுத்தவங்களுக்கு கொடுங்க; அதை வேண்டாம்னு சொல்லலை. ஆனா, அந்த உதவி அவங்களுக்கு அவசியப்படுதான்னு தெரிஞ்சு கொடுங்க'ன்னு என் தனம் சொன்னா! உதவிக்கான அர்த்தம் அப்போதான் எனக்குப் புரிஞ்சது.

* இந்த புரிதல் தந்த பலன்?

நிறைய இருக்கு; அதுல ஒண்ணுதான் சமீபத்திய தானம். கோவை, 'நேஷனல் பெடரேஷன் ஆப் தி பிளைண்ட் ஆப் இந்தியா' அமைப்புக்கு, பார்வை யற்ற முதியவர்களை பராமரிக்கிறதுக்கான காப்பகம் அமைக்க 32 சென்ட் நிலத்தை கொடுத்திருக்கேன். யாருக்கு உதவணும்னு தனபாக்கியம் அன்னைக்கு சொல்லிக் கொடுத்த பாடம்தான், இந்த தானத்துக்கு முக்கிய காரணம்!

* அம்மா... நீங்க என்ன சொல்றீங்க?

பணத்தை செலவு பண்ற விஷயத்துல, எனக்கும் அவருக்கும் ஆரம்பத்துல கொஞ்சம் முரண்பாடு இருந்தது. அவரோட உதவும் குணத்தை முழுமையா புரிஞ்சுக்க, வாழ்க்கை பற்றிய என்னோட கண்ணோட்டத்தை நான் கொஞ்சம் விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது. அதுக்கப்புறம்தான், என்னோட கருத்துக்களுக்கும் அவர் முக்கியத்துவம் தர ஆரம்பிச்சார்.

* உங்களோட வாரிசுகள்?

யாரும் இல்லை! இன்னைக்கு இருக்குற மாதிரி மருத்துவ வசதிகள் இல்லாத அந்த காலத்துல, இரண்டு கர்ப்பமும் குறை பிரசவமா போயிருச்சு. அந்த சமயத்துல, 'இனி ஒரு குழந்தையை தாங்குற சக்தி உனக்கு கிடையாது'ன்னு டாக்டருங்க சொல்லவும், என் கணவரும் ஏத்துக்கிட்டார். 'புள்ளகுட்டி இருந்திருந்தா இப்படி நிலத்தை துாக்கி தந்திருப்பாங்களா'ன்னு, இன்னைக்கு சிலர் பேசுறாங்க. அவங்க சொல்ற மாதிரி குழந்தைகள் இருந்திருந்தா, நிலத்தை கொடுத்திருப்போமோ இல்லையோ... ஆனா, 'எதையும் கொடுத்து பழகணும்'னு பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்திருப்போம்.