மஞ்சளும், நேனோ தொழில்நுட்பமும்!

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2020

மஞ்சளின் மருத்துவ குணம் பற்றி சொல்ல வேண்டியதில்லை. மஞ்சளில் உள்ள, 'குர்குமின்' என்ற வேதிப்பொருள்தான் பல நோய்களை வராமல் தடுக்கவும், நோய்களை குணமாக்கவும் உதவுகிறது.

ஆனால், உணவாக உட்கொள்ளப்படும்போது, குர்குமினை நம் உடல் எடுத்துக்கொள்ளும் அளவு மிகக் குறைவுதான்.இதை எப்படி அதிகப்படுத்துவது என, தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

அமெரிக்கா, கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் நடந்த இந்த ஆய்வில், குர்கு மின் செறிந்த நேனோ துகள்களை உட்கொள்ளும் போது, வழக்கமான உணவு வடிவில் செலுத்தப்படுவதைவிட, 117 சதவீத அளவிற்கு குர்குமினை, மனித உடல் எடுத்துக்கொள்வது கண்டுபிடிக்கப்பட்டது.

விலங்குகள் மீது செய்த இந்த ஆய்வின் முடிவைப் போலவே, மனித உடலும் அதிக அளவில் குர்குமினை எடுத்துக்கொள்ளுமானால், இதய நோய்கள், புற்று நோய்கள் மற்றும் அல்சைமர்ஸ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.


ஒரு பவுண்ட் எடை அதிகரிப்பால், வேலை இழப்பு

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் பணியாற்றும் பெண்ணின் எடை ஒரு பவுண்ட் அதிகரித்த காரணத்தால், வேலையிலிருந்து நீக்கியுள்ளனர்.

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களில் வேலை பார்க்கும் பணிப்பெண்களின் எடை 132 பவுண்ட் (59.8 கிலோ) மட்டுமே இருக்க வேண்டும். இந்த நிறுவனத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றும் இனா மெலிசா ஹசீம் என்ற பெண்ணுக்கு எடை சரிபார்த்த அன்று, அவரது எடை 60.3 கிலோ என பதிவாகியிருந்தது. அதாவது அதிகபட்ச அளவை விட 1 பவுண்ட் அதிகம். இந்த உடல் எடை அதிகரிப்பை ஏற்றுக் கொள்ள மறுத்த மலேசியன் ஏர்லைன்ஸ் நிர்வாகம், கடந்த 2017ம் ஆண்டு இனா மெலிசா ஹசீம் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அவர் தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஆனால் மலேசிய நீதிமன்றம், இந்த வழக்கை வேலைவாய்ப்பின்மை சட்டத்திகீழ் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. பயணிகளின் பாதுகாப்பை கருதி விமான ஊழியர்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.    

உலகின் முதன்மை விமான சேவை நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த 2015 முதல் பல கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இனா மெலிசா ஹசீம் விவகாரத்தில் உடல் எடையை குறைத்துக் கொள்ள அவருக்கு 18 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவரை பரிசோதித்த போது உடல் எடை குறையவில்லை என்பது தெரியவந்த பிறகே, வேலையில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.