மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் எழுதும் வாலிப கவிஞர் வாலி – 35

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2020

அந்த ஒருவர் இயக்குனர் ஏ.சி. திருலோகசந்தர்.  அவர் தயாரித்து இயக்கிய ` பாபு’ திரைப்படம் மூலமாகத் தான் வாலி புனர் வாழ்வு பெற்றார். அந்த கறுப்பு வெள்ளைப் படம் பல வண்ணப்படங்களை விழுங்கி வெற்றி உலா வந்தது.

 தன்னுடைய படங்களுக்கு வாலிதான் பாடல் எழுதவேண்டுமென்று  முன்மொழிந்த இயக்குனர்கள் இருவர். ஒருவர் கிருஷ்ணன் பஞ்சு. இன்னொருவர் ஏ.சி. திருலோகசந்தர்.

 திருலோகசந்தர் சொந்தமாகத் தயாரித்து இயக்கிய படங்களைத் தவிரவும், அவர் பிறருக் காகை இயக்கிய பெருவாரியான படங்களுக்கும் வாலியையே பாட்டெழுத அழைத்தார்.

வாலி இத்தனைக்கு திருலோகசந்தரின் நெருங்கிய நண்பரல்ல. இருப்பினும் அவர் ரசனைக்கு ஒத்து எழுத்தாளனாக, வாலியை அவர் இனக் கண்டுகொண்டார்.

 திருலோகசந்தர் தரமான படங்களை இயக்கி, இமாலய வெற்றி பெற்றவர். எம்.ஜி.ஆர் படத்தைக் கூட தான் நினைத்தப்படி வடிவமைத்தவர் அவர்.  எம்.ஏ. பட்டதாரியாகயிருந்தும் ஆங்கில நாவல் களையே பெரிதும் நேசித்துப் படித்து புளகாங்கிதம் அடைவராக இருந்தும் – தமிழ்ப் பாடல்களின் நயங்களை வெகுவாக ரசித்து பாராட்டும் தேர்ந்த ரசனை அவரிடத்தில் இருந்தது.

பாட்டுத் தேவையான விவரங்களைச் சொல்லிவிட்டு படைப்பாளியின் சிந்தனைக்கு முழு சுதந்திரம் கொடுத்துச் செயல்படும் அவரது பாங்கைப் பக்கம் நின்று பார்த்தவர் வாலி.

அவர் உள்ளமும், உருவத்தைப் போல் உயரமாகவே இருந்தது. வெற்றியை அவர் தோளோடு நிறுத்திக் கொண்டாரேயல்லாது, தலைக்குக் கொண்டு செல்ல வில்லை.

`உங்க பாட்டு நம்ம படத் தோட வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம்‘ என்று உளமார உலகறி யக் கூவுவார்.  வாலியின் உச்சி எத்துணையோ முறை அவரால் குளிர்ந்து போயிருக்கிறது.

வேறு சில இயக்குனர்கள் போல், படத்தின் வெற்றிக்கு பாடலும் ஒரு காரணம் என்பதை ஜீரணிக்க முடியாமல் தனக்குப் பின்னால் தானே ஒரு ஒளி வட்டத்தை வரைந்து கொண்டு, அவர் தான்  தோன்றித்தனமாக அலைந்ததில்லை.

பாட்டின் துணை கொண்டு புகழேணியில் ஏறிவிட்ட பிறகு, `என் படத்திற்கு பாட்டு இருப்பது, ஒரு சடங்கு போல ‘என்றெல்லாம் நாத்தழும்பேறப் பேசிநெஞ்சைப் போலியாக நிமிர்த்தி நின்ற நாலாந்தர இயக்குனர்களை வாலி அறிவார். இவர்களெல்லாம், தாய்ப் பாலியே தண்ணீர் கலந் திருந்தது  என்று கூசாமல் சொல்லக் கூடிய குறை மதியாளர்கள். திருலோகசந்தர், இந்த அபத்தங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். வெற்றியை அனைவரோடு பகிர்ந்து கொள்ளும் விசால மனம் படைத்தவர்.

 அவரை பார்த்து வாலி வாழ்க்கையில் கற்றுக் கொண்டது பதட்டமின்மை. பதட்டமும், பரபரபுமல்லவோ உயர்ந்த ரத்த அழுத்தத்தின் தாய் தந்தை.

சினிமாவில் வாலி சந்திக்க நேர்ந்த ஒவ்வொரு பிரமுகரிடமிருந்து ஒவ்வொரு நல்ல விஷயத்தை வாலி கிரகித்துக் கொண்டார். இந்த விஷயங்களை அவரை, எதையும் விருப்பு வெறுப்பின்றி பார்க்கும் கண்ணோட்டத்திற்குப் பழக்கின.

 சில நல்ல விஷயங்கள் பற்றி பாடல்கள் எழுத நேருகையில், அந்த அனுபவம் கூட பாடலாசிரியனை நெறிப்படுத்த உதவுகிறது.

திருலோகசந்தர், `விஸ்வரூபம்‘ என்ற படத்தை, சிவாஜியை வைத்து இயக்கிக் கொண்டிருந்த நாளில், அந்தப் படத்தின் காட்சியொன்றிற்குப் பாடல் எழுதுவதற்கான சூழலை வாலிக்கு விளக்கிச் சொன்னார்.

கதையில், சிவாஜி மிகப் பெரிய தனவந்தர். ஆனால், அவ்வளவாக தெய்வ நம்பிக்கை இல்லாதவர். மனைவி ஒரு நாள் கோயிலுக்குப் போக விரும்புகிறாள். மனைவியைக் காரில் கொண்டு போய்க் கோயில் வாசலில் இறக்கிவிட்டு கோயிலுக்கு வெளியே, தரிசனம் முடிந்து திரும்பி வரும் மனைவிக்காகக் காத்திருக்கிறார்.

 அப்போது – கோயில் வாசலில் பூவிற்கும் ஒரு வயதான பெண்மணி – சிவாஜியிடம் மல்லிகைப்பூவை வாங்கி மனைவிக்குச் சூட்டும்படி வேண்டுகிறாள்.

அந்தப் பெண்மணியில் வேண்டுக் கோளைத் தட்ட முடியாமல் சிவாஜி நான்கு முழும் மல்லிகைப்பூ வாங்கி – எவ்வளவு பணம் தரவேணும் என்று கேட்பார்.

` இரண்டு ரூபாய் ‘ என்று அந்தப் பெண்மணி சொல்ல,  சிவாஜி ஒரு நூறு ரூபாய் தாளை எடுத்து அவளிடம் நீட்டுகிறார்.

 ` சில்லறையில்லையே ‘ என்று அந்த அம்மையார் சொல்ல,

` வேண்டாம், நூறு ரூபாயையும் நீயே வைத்துக் கொள்’ என்கிறார் சிவாஜி.

 அதற்கு, அந்தப் பெண்மணி, `எனக்குத் தேவைரெண்டு ரூபாதாங்க.. சில்லரையில்லாட்டி பரவால்லே நாளைக்கு கொண்ணாந்து குடுங்க’ என்கிறாள்.

 சிவாஜி, அதிர்ந்து போகிறார். `கேவலம், ஒரு பூக்காரியிடம் கடன் பட்டுவிட்டோமே  இது என்ன கோடீஸ்வர வாழ்க்கை, என்று சிந்தனை வயப்படுகிறார். அப்போது, இது போல் வாழ்நாள் பூராவும் திருப்பி அடைக்க முடியாத கடன்கள் தனக்கு எவ்வளவோ இருப்பதாக உணர்ந்து கொள்கிறார். பாடல் இந்த இடத்தில் ஆரம்பமாகிறது.

மேற்சொன்ன சூழலை திருலோகசந்தர் வாலியிடம் சொன்ன வுடன் வாலி ஒரு பல்லவியை எழுதி அவரிடம் நீட்டினார்.

 நான்

 பட்ட கடன் எத்தனையோ

 பூமியில் பிறந்து – அடை

 பட்ட கடன் எதுவுமில்லை

 ஆயிரம் இருந்து ! செல்வம்

 ஆயிரம் இருந்து.

 பல்லவியைப் படித்துவிட்டு, திருலோகசந்தர் பரவசப் பட்டுப் போனார். எம்.எஸ். வி அவர்கள் நொடிப் பொழுதில் அற்புதமாக அதற்கு இசையமைத்தார்.

 ஒரு மனிதன் பிறந்த கடனை தாயிடமும், வளர்ந்த கடனைத் தந்தையிடமும், கற்பித்த கடனை ஆசானிடமும், காலமெல்லாம் பேணிக் காக்கும் வாழ்க்கை நலம் என்னும் கடனை – மனைவியிடமும் பெற்று – கடசையில் ஒருநாள் எந்தக்  கடனையும் தன்னிடம் உள்ள கோடிக்கணக்கான பணத்தைக் கொண்டு அடைக்க இயலாது – கடனாளியாகவே இறந்து போகிறான் என்பதை அந்தப் பாடலில் வாலி வரிசைப் படுத்தி சொல்லியிருந்தார்.

இன்றளவும் வாலி எழுதிய பாடல்களில், அவருக்கு மிகுந்த மனத்திருப்தியை அளித்த பாடல் இது. இதைப் படைக்கின்ற வாய்ப்பை வாலி வழங்கியவர் திருலோகசந்தர்.

‘மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள்’

‘மல்லிகை என் மன்னன் மயங்கும்

 பொன்னான மலரல்லவோ’

‘இதோ, எந்தன் தெய்வம் முன்னாலே

 ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’

‘மலரே! குறிஞ்சி மலரே’

 இப்படி எவ்வளவோ பாடல்களை வாலி எழுதவும் அவற்றால் வாலியின் திரையுலக வாழ்க்கை மேம்படவும் திருலோகசந்தர் காரணமாக இருந்திருக்கிறார்.

 வழக்கமாகத் திருலோகசந்தர் படத்திற்கு விஸ்வநாதன் தான் இசையமைப்பார்.

 ஒரு முறை வாலி திருலோகசந்தரின் புதுப் படத்திற்கு பாட்டெழுத அவர் அலுவலகம் சென்றார்.

அது 1976 வருட சமயம்.

 அவரது அலுவலக ஒரு வீட்டு மாடியில் இருந்தது. வாலி மாடிப்படியில் ஏறும்பொழுது, திருலோகசந்தரின் தயாரிப்பு நிர்வாகி கிருஷ்ணசாமி எதிரே வந்தார்.

 அவரிடம் ‘விஸ்வநாதன் வந்துவிட்டாரா?’ என்று கேட்டார் வாலி.

(தொடரும்)