திருமங்கலம் ஓடு தொழிற்சாலையில், காலை, 7:30 மணிக்கு, அழைப்பு சங்கு ஒலிக்கும்; ஊழியர்கள் பணிக்கு செல்வர்; மாணவ, மாணவியர் பள்ளிக்கு புறப்படுவர்.
பள்ளியில், 5ம் வகுப்பு படித்தான் குமரன். அவனை அழைத்த அந்த ஊர் பெரியவர், 'தமிழில் கடிதம் எழுதி தர முடியுமா...' என்றார்; விருப்பத்துடன் ஒப்புக் கொண்டான்.
காகிதத்தை தந்து, 'நான் சொல்வதை தவறில்லாமல் எழுது...' என்றார். கடிதம், பத்து வரிகள் கூட இல்லை. எழுதியதை வாங்கி, பிழைகளை சுட்டிக்காட்டி, 'இதோ பார்... வல்லினத்திற்கு பதிலாக, மெல்லினம் போட்டிருக்கே... இந்த இடத்தில், ஒற்றெழுத்து வராது... பன்மையை பார்த்து எழுதணும்...' என்று அறிவுரைத்தார்.
அந்த அறிவுரைகளை கவனமாக கேட்டான். பாடங்கள் எழுதிய போதும், அந்த தவறுகள் ஏற்படாத வண்ணம் கவனித்து வந்தான்.
அடுத்தடுத்த நாட்களில், அதே பள்ளி மாணவர்கள் சிலரை அழைத்து, கடிதம் எழுதக் கேட்டார். குமரனின் நண்பர்களும் அதில் இருந்தனர். கடிதத்தில் ஏற்பட்டிருந்த பிழைகளை திருத்தி சுட்டிக் காட்டினார்.
கையெழுத்து கிறுக்கலாகவும், நேர்க்கோட்டில் இல்லாததையும் சொன்னார். அவற்றை சரி செய்யும் விதமாக, 'தவறு இன்றி சீராகவும், நிதானமாகவும் எழுதணும்...' என்று அறிவுரைத்தார்.
நாளடைவில், குமரனைத் தவிர, மற்றவர்கள் சாக்கு போக்கு கூறி, கடிதம் எழுதும் பயிற்சிக்கு வராமல் நழுவினர்.
ஆனாலும், அவ்வப்போது அழைத்து பயிற்சி அளிக்க தவறவில்லை பெரியவர்.
அவரது அறிவுரை கேட்டதால், பிழைகளை திருத்திக் கொண்டான் குமரன்; கையெழுத்தும், மணியாக மாறியது!
பள்ளி ஆண்டு போட்டியில், தவறின்றி எழுதுவது, அழகிய கையெழுத்து என, போட்டிகள் நடந்தன. அவற்றில் வென்ற குமரனைப் பாராட்டி பரிசு வழங்கி கவுரவித்தது பள்ளி நிர்வாகம்!
'பெரியவர் தந்த பயிற்சியால் தான் பரிசு கிடைத்தது...' என, பெருமையாக கூறினான் குமரன். மற்ற சிறுவர், சிறுமியர் தவறை உணர்ந்தனர்; பின், பெரியவரை தேடிப் போய் பயிற்சியை தொடர்ந்தனர். சிறப்பாக எழுதவும், படிக்கவும் கற்றனர். வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது.
குழந்தைகளே... பெரியோரின் அறிவுரையை ஏற்பதுடன், முறையாக பயிற்சி செய்தால், எல்லா வற்றிலும் வெற்றி நிச்சயம்.
- – என்.கிருஷ்ண மூர்த்தி