தைரியம் கொடுத்த பெரியவர்!
வாடியிருந்த எங்கள் முகத்தில் சந்தோஷ மலர்ச்சி ஏற்பட்டது. இன்றைய உணவுக்கு இறைவன் வழிசெய்து விட்டான் என நினைத்துக்கொண்டோம். அமரன் வெளியே போய் விசாரித்த மனிதரை அறைக்கு அழைத்து வந்தான்.
அவர்தான் முதன்முதலில் சென்னையில் இசை நிகழ்ச்சியில் எங்களுக்கும் எங்கள் இசைக்கும் இரையளித்தவர். அவர் பெயர் நீலகண்டன்.
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரனின் மாமனார் பாடகி ஷோபா சந்திரசேகரின் தந்தை. நடிகர் விஜயின் தாத்தாதான் அவர்.
அவர்தான் சென்னையில் எங்களை அரங்கேற்றினார். அவர் இப்போது இல்லை. கஷ்ட காலத்தில் அவர் அளித்த வாய்ப்பை மறக்க முடியாதது.
அன்று சிவா விஷ்ணு கோயிலின் பின்புறம் உட்கார்ந்து எனக்குத் தைரியம் கொடுத்த அந்தப் பெரியவரை நாங்கள் வெற்றி பெற்ற நேரங்களில் நினைத்துக் கொள்வேன். அவரை பலமுறை தேடியிருக்கிறேன் என் கண்ணில் படவில்லை. 'தெய்வம் நல்லவர் ரூபத்தில் வந்து நல்லது சொல்லுமோ...' என்கிறார் ராஜாவின் அண்ணன் பாஸ்கர்.
அன்று தாத்தா, இன்று பேரன்கள்!
தந்தையின், தாத்தாவின் கனவும் ஆசையும் பிள்ளைகள் பேரன்கள் மூலம் நிறைவேறிவிடுகிறது.
அந்நாளில் கிராமங்களில் திருவிழா என்றாலே மிக மகிழ்ச்சிதான். பொங்கல், கோயில் திருவிழா போன்று விசேஷ தினங்களில் கிராமங்களில் உற்சாகம் பரவி கிடக்கும்.
கரகம், நாடகம், பாட்டு என்று ஊர்முழுக்க திருவிழா கோலம் பூண்டிருக்கும். பண்ணைபுரத்தில் பங்குனி மாதத்தில் நடக்கும் திருவிழாவில், கேரளாவில் கங்காணியாக வேலைபார்த்துக் கொண்டிருந்த ராமசாமியும் வந்து கலந்துகொள்வார். நாடகங்களில் நடிப்பார், பாடுவார் கலைகளில் ஆர்வம் கொண்டிருந்தார்.
ராமசாமிக்கு ஊரில் தனி மரியாதை இருந்தது. அந்தக் காலத்திலேயே காரைக்குடி செட்டிமார்கள் வீடுபோல பெரிய தூண்கள், வராண்டாக்களுடன் பண்ணைபுரத்தில் வீடு கட்டியவர் ராமசாமி.
கேரளாவில் வெள்ளைக்கார துரையுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தவர். பிறகு தான் கிறிஸ்தவராக மதம்மாறி ராமசாமி டேனியல் என மாற்றிக்கொண்டார். அப்போதே அவருக்கு ஏலக்காய் தோட்டம் எல்லாம் இருந்தது.
அன்று அவர் நாடகம், பாட்டு, நடிப்பு என ஆர்வம் கொண்டிருந்தார்.
இன்று அவரது பேரன்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர்களாகவும் பேத்தி பவதாரிணி பாடகியாகவும் இருக்கிறார்கள்.
கங்கை அமரனின் மகன்களான வெங்கட் பிரபு, பிரேம்ஜி போன்ற பேரன்கள் நடிப்புத் துறைக்கு வந்திருக்கிறார்கள். ஆக, அன்று தாத்தாவின் உணர்வில் இருந்த கலை இன்று பேரன்களின் உணர்வுகளில்.
ஒரே அறையில்!
எங்கள் வாழ்க்கையில் 1969-ம் ஆண்டு மறக்க முடியாதது. எங்கள் வாழ்க்கை சென்னையில் தொடங்கியது.
இளையராஜா, பாரதிராஜா, நான், பாஸ்கர் ஆக நாலு பேரும் ராயப்பேட்டையிலுள்ள 67, முத்து முதலி தெரு வீட்டு மாடியில் ஒரே அறையில் இருந்து வந்தோம்.
சின்ன ரூம்தான், எங்களுக்குள் எந்த வேறுபாடுமின்றி சேர்ந்து இருந்தோம். பல நாடகங்களுக்கு இசையமைப்பு செய்து வந்த நேரம் அது” என்கிறார் இசை யமைப்பாளரும் கவிஞருமான கங்கை அமரன்.