ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 18–3–2020

பதிவு செய்த நாள் : 18 மார்ச் 2020

தைரியம் கொடுத்த பெரியவர்!

வாடி­யி­ருந்த எங்­கள் முகத்­தில் சந்­தோஷ மலர்ச்சி ஏற்­பட்­டது. இன்­றைய உண­வுக்கு இறை­வன் வழி­செய்து விட்­டான் என நினைத்­துக்­கொண்­டோம். அம­ரன் வெளியே போய் விசா­ரித்த மனி­தரை அறைக்கு அழைத்து வந்­தான்.

அவர்­தான் முதன்­மு­த­லில் சென்­னை­யில் இசை நிகழ்ச்­சி­யில் எங்­க­ளுக்­கும் எங்­கள் இசைக்­கும் இரை­ய­ளித்­த­வர். அவர் பெயர் நீல­கண்­டன்.

 இயக்­கு­நர் எஸ்.ஏ. சந்­தி­ர­சே­க­ர­னின் மாம­னார் பாடகி ஷோபா சந்­தி­ர­சே­க­ரின் தந்தை. நடி­கர் விஜ­யின் தாத்­தா­தான் அவர்.

அவர்­தான் சென்­னை­யில் எங்­களை அரங்­கேற்­றி­னார். அவர் இப்­போது இல்லை. கஷ்ட காலத்­தில் அவர் அளித்த வாய்ப்பை மறக்க முடி­யா­தது.

அன்று சிவா விஷ்ணு கோயி­லின் பின்­பு­றம் உட்­கார்ந்து எனக்­குத் தைரி­யம் கொடுத்த அந்­தப் பெரி­ய­வரை நாங்­கள் வெற்றி பெற்ற நேரங்­க­ளில் நினைத்­துக் கொள்­வேன். அவரை பல­முறை தேடி­யி­ருக்­கி­றேன் என் கண்­ணில் பட­வில்லை. 'தெய்­வம் நல்­ல­வர் ரூபத்­தில் வந்து நல்­லது சொல்­லுமோ...' என்­கி­றார் ராஜா­வின் அண்­ணன் பாஸ்­கர்.

அன்று தாத்தா, இன்று பேரன்­கள்!

தந்­தை­யின், தாத்­தா­வின் கன­வும் ஆசை­யும் பிள்­ளை­கள் பேரன்­கள் மூலம் நிறை­வே­றி­வி­டு­கி­றது.

அந்­நா­ளில் கிரா­மங்­க­ளில் திரு­விழா என்­றாலே மிக மகிழ்ச்­சி­தான். பொங்­கல், கோயில் திரு­விழா போன்று விசேஷ தினங்­க­ளில் கிரா­மங்­க­ளில் உற்­சா­கம் பரவி கிடக்­கும்.

கர­கம், நாட­கம், பாட்டு என்று ஊர்­மு­ழுக்க திரு­விழா கோலம் பூண்­டி­ருக்­கும். பண்­ணை­பு­ரத்­தில் பங்­குனி மாதத்­தில் நடக்­கும் திரு­வி­ழா­வில், கேர­ளா­வில் கங்­கா­ணி­யாக வேலை­பார்த்­துக் கொண்­டி­ருந்த ராம­சா­மி­யும் வந்து கலந்­து­கொள்­வார். நாட­கங்­க­ளில் நடிப்­பார், பாடு­வார் கலை­க­ளில் ஆர்­வம் கொண்­டி­ருந்­தார்.

ராம­சா­மிக்கு ஊரில் தனி மரி­யாதை இருந்­தது. அந்­தக் காலத்­தி­லேயே காரைக்­குடி செட்­டி­மார்­கள் வீடு­போல பெரிய தூண்­கள், வராண்­டாக்­க­ளு­டன் பண்­ணை­பு­ரத்­தில் வீடு கட்­டி­ய­வர் ராம­சாமி.

கேர­ளா­வில் வெள்­ளைக்­கார துரை­யு­டன் நெருக்­க­மாக பழக ஆரம்­பித்­த­வர். பிறகு தான் கிறிஸ்­த­வ­ராக மதம்­மாறி ராம­சாமி டேனி­யல் என மாற்­றிக்­கொண்­டார். அப்­போதே அவ­ருக்கு ஏலக்­காய் தோட்­டம் எல்­லாம் இருந்­தது.

அன்று அவர் நாட­கம், பாட்டு, நடிப்பு என ஆர்­வம் கொண்­டி­ருந்­தார்.

இன்று அவ­ரது பேரன்­கள் கார்த்­திக் ராஜா, யுவன் சங்­கர் ராஜா இசை­ய­மைப்­பா­ளர்­க­ளா­க­வும் பேத்தி பவ­தா­ரிணி பாட­கி­யா­க­வும் இருக்­கி­றார்­கள்.

கங்கை அம­ர­னின் மகன்­க­ளான வெங்­கட் பிரபு, பிரேம்ஜி போன்ற பேரன்­கள் நடிப்­புத் துறைக்கு வந்­தி­ருக்­கி­றார்­கள். ஆக, அன்று தாத்­தா­வின் உணர்­வில் இருந்த கலை இன்று பேரன்­க­ளின் உணர்­வு­க­ளில்.

ஒரே அறை­யில்!

எங்­கள் வாழ்க்­கை­யில் 1969-ம் ஆண்டு மறக்க முடி­யா­தது. எங்­கள் வாழ்க்கை சென்­னை­யில் தொடங்­கி­யது.

இளை­ய­ராஜா, பார­தி­ராஜா, நான், பாஸ்­கர் ஆக நாலு பேரும் ராயப்­பேட்­டை­யி­லுள்ள 67, முத்து முதலி தெரு வீட்டு மாடி­யில் ஒரே அறை­யில் இருந்து வந்­தோம்.

சின்ன ரூம்­தான், எங்­க­ளுக்­குள் எந்த வேறு­பா­டு­மின்றி சேர்ந்து இருந்­தோம். பல நாட­கங்­க­ளுக்கு இசை­ய­மைப்பு செய்து வந்த நேரம் அது” என்­கி­றார் இசை யமைப்­பா­ள­ரும் கவி­ஞ­ரு­மான கங்கை அம­ரன்.