சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 435 – எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 18 மார்ச் 2020

நடி­கர்­கள் : விக்­ரம், சாரா அர்­ஜுன், அனுஷ்கா ஷெட்டி, அமலா பால், நாசர், சந்­தா­னம் மற்­றும் பலர். இசை : ஜி.வி. பிர­காஷ் குமார், ஒளிப்­ப­திவு : நீரவ் ஷா, எடிட்­டிங் : ஆண்­டனி, திரைக்­கதை, இயக்­கம் : ஏ.எல். விஜய்.

கிருஷ்ணா (விக்­ரம்) ஆறு வயது சிறு­வ­னுக்­கு­ரிய மன­வ­ளர்ச்­சி­யு­டன் வாழும் நபர். ஊட்­டி­யில் ஒரு சாக்­லேட் தொழிற்­சா­லை­யில் வேலை பார்த்து மகிழ்ச்­சி­யாக வாழும் கிருஷ்­ணாவை முத­லாளி விக்­டர் (கிருஷ்­ண­கு­மார்) அக்­க­றை­யோடு கவ­னித்­துக் கொள்­கி­றார். கிருஷ்ணா ஒரு நாள் தான் தந்­தை­யாக போகும் மகிழ்ச்­சி­யான செய்­தியை அனை­வ­ரி­ட­மும் தெரி­விக்­கி­றான். அன்று இரவு பெண் குழந்­தையை பெற்ற அவ­னது மனைவி பானு­மதி உடல்­ந­லக்­கு­றை­வால் இறந்­து­போ­கி­றாள். இறப்பை புரிந்து கொள்ள முடி­யாத கிருஷ்ணா தன் மனைவி இறை­வ­னி­டம் சென்று விட்­ட­தாக கருதி தன் மக­ளுக்கு ‘நிலா’ என பெய­ரிட்டு கண்­ணும் கருத்­து­மாக வளர்க்­கி­றான். நிலா புத்­தி­சா­லிக் குழந்­தை­யாக வளர்­கி­றாள். கிருஷ்ணா மன­வ­ளர்ச்சி குறை­பா­டுள்ள தன் மற்ற நண்­பர்­க­ளின் உத­வி­யு­டன் நிலாவை பள்­ளி­யில் சேர்க்­கி­றான்.

பள்ளி வாழ்க்­கைக்கு பழ­கும் நிலா தன் மேல் அக்­கறை காட்­டும் பள்ளி தாளா­ளர் ஸ்வேதா ராஜேந்­தி­ர­னு­டன் (அமலா பால்) நட்­பா­கி­றாள். பள்ளி விழா­வில் நிலா­வு­டன் கிருஷ்­ணாவை சந்­திக்­கும் ஸ்வேதா­வுக்கு நிலா தனது அக்­காள் பானு­ம­தி­யின் குழந்தை என்­பது தெரி­ய­வ­ரு­கி­றது. நிலாவை கிருஷ்­ணா­வி­டம் தர மறுக்­கும் ஸ்வேதா தன்னை மக­ளாக எண்ணி வளர்த்த அக்­கா­ளின் மகளை தானே வளர்க்க முடிவு செய்­கி­றாள். கிருஷ்­ணா­வுக்கு ஆத­ர­வாக நண்­பர்­க­ளும், விக்­ட­ரும் ஸ்வேதா­வி­டம் வாக்­கு­வா­தம் செய்­கின்­ற­னர். அங்கு வரும் ஸ்வேதா­வின் தந்தை ராஜேந்­தி­ரன் (சச்­சின் கெடே­கர்) தனது பேத்­தி­யை­யும், மரு­ம­க­னை­யும் தன்­னு­டனே அழைத்­துச் செல்­வ­தாக கூறு­கி­றார். விக்­ட­ரும் சம்­ம­தித்து அனுப்பி வைக்­கி­றார்.

கிருஷ்ணா மீதான காத­லுக்­காக தன்னை பிரிந்த மகள் பானு­ம­தி­யின் பிரி­வி­னால் வருந்­தும் ராஜேந்­தி­ரன் கிருஷ்­ணாவை வெறுக்­கி­றார். சென்­னைக்கு மிக தொலை­வி­லேயே கிருஷ்­ணாவை ஏமாற்றி நடு­வ­ழி­யில் இறக்­கி­விட்டு நிலா­வோடு செல்­கின்­ற­னர். நிலாவை தேடி அலை­யும் கிருஷ்ணா நீதி­மன்­றம் வந்து சேர்­கி­றான். அங்கு கேசுக்­காக காத்­தி­ருக்­கும் லாயர் வினோத் (சந்­தா­னம்) கிருஷ்­ணாவை லாயர் அனு­ராதா ரகு­நா­த­னி­டம் (அனுஷ்கா ஷெட்டி) அழைத்­துச் செல்­கி­றான். கிருஷ்­ணா­வின் நிலை தெரிந்­த­தும் அவ­னி­ட­மி­ருந்து விலகி ஓடு­கின்­ற­னர். அங்கு வரும் விக்­டர் மூல­மாக நடந்த உண்­மை­களை தெரிந்து கிருஷ்­ணா­வின் கேசை எடுத்­துக்­கொள்­கின்­ற­னர்.

எதிர்­த­ரப்­பில் ராஜேந்­தி­ரன் சார்­பாக சீனி­யர் லாயர் பாஷ்­யம்(நாசர்) ஆஜ­ரா­கி­றார். ஒரு கேசி­லும் தோற்­காத அவ­ரி­டம் ஜூனி­யர்­க­ளாக சேர முயற்­சித்த அனு­வும், நன்­பர்­க­ளும் அவ­ரைக் கண்டு நடுங்­கு­கின்­ற­னர். கேஸ் நடந்து கொண்­டி­ருக்­கும் போதே கிருஷ்ணா நிலாவை சந்­திக்க விடா­மல் தடுப்­பது, கிருஷ்­ணாவை கடத்­து­வது, சாட்­சியை கடத்­து­வது என குழப்­பங்­கள் நடக்­கி­றது. நிலா, கிருஷ்­ணா­வின் களங்­க­மில்லா அன்பை அனை­வ­ரும் புரிந்து கொள்­கின்­ற­னர். இறு­தி­யில் கோர்ட்­டில் வாதம் நடந்து கொண்­டி­ருக்­கும்­போது சைகை பாஷை­யில் பேசிக்­கொள்­ளும் கிருஷ்­ணா­வை­யும், நிலா­வை­யும் கண்டு நீதி­பதி முதல் அனை­வ­ரும் மனம் நெகிழ்­கின்­ற­னர். இரு­வ­ரும் சேர்­கின்­ற­னர்.

இர­வில் தூங்­கிக் கொண்டு இருக்­கும் நிலாவை ஸ்வேதா­வி­டம் கொடுத்து விட்டு திரும்­பு­கி­றான் கிருஷ்ணா. கார­ணம் கேட்­கும் அனு­வி­டம், நிலா அங்கு பொரு­ளா­தார ரீதி­யாக நன்­றாக வள­ர­வும், வளர்ந்­த­தும் மருத்­து­வ­ரா­க­வும் முடி­யும் என்று கூறு­கி­றான். ஊட்­டிக்கு திரும்பி விக்­ட­ரின் சாக்­லேட் பேக்­ட­ரி­யில் பணி­பு­ரி­கி­றான்.