சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் ஸ்டார்ட் அப் கள்

பதிவு செய்த நாள் : 16 மார்ச் 2020

சேமிப்பு என்றவுடன் பலருக்கு பணம் மட்டுமே ஞாபகத்திற்கு வரும். பணம் மட்டும் சேமித்தால் போதும் என்பதுதான் நம்மில் பெரும்பான்மையோருக்கு ஒரு எண்ணம். ஆனால் பணம் சேமிப்பு என்பது நம்முடைய வளர்ச்சிக்கு மட்டும் வலு சேர்க்கும்.  ஆனால் நாட்டின் வளத்தை மனதில் நினைத்து பார்த்தால் இன்னும் பல சேமிப்புகளும் உங்கள் மனதில் தோன்ற வேண்டும். அது தான் தனி நபருக்கும் நன்மை சேர்க்கும், நாட்டிற்கும் நன்மை சேர்க்கும்.  அவை நீர், மின்சாரம், எரிபொருள், சுற்றுச்சூழல், உணவு, நேரம் போன்றவையும் ஆகும்.

இவ்வகை சேமிப்புகளை செய்வது ஒரு சிரமமான காரியம் அல்ல. நம் தினசரி வாழ்க்கையில் சில பழக்கவழக்கங்களை தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலம் மேற்கண்ட சேமிப்புகளை திறமையாக கையாள முடியும்.  அப்படி கையாளும் போது அது வீட்டிற்கும் உபயோகமாக இருக்கும், நாட்டிற்கும் உபயோகமாக இருக்கும்,  உங்கள் தொழிலுக்கும்  உபயோகமாக இருக்கும்.

எரிபொருள் சேமிப்பின் முக்கியவத்தை உணர்த்த பல ஸ்டார்ட் அப்-கள்  தற்போது வந்துள்ளன. அவை வாய் வழியாக சேமிப்பை சொல்லி விட்டுப் போகும் ஸ்டார்ட் அப்-கள் அல்ல. உங்களுடன் சேர்ந்து களப்பணியும் ஆற்றுகின்றன என்பது குறிப்பிடதக்கது.

777 கோடி மக்கள் வசிக்கும் இந்த உலகத்தில் 50 சதவீதத்திற்கும் மேலான மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர். இதனால் இந்த நகர்ப்புறங்களில் வருடத்திற்கு 1100 கோடி டன்கள் கழிவுகளை வெளியேற்றப்படுகின்றன. இந்தக் கழிவுகளின் குப்பை மலைகளை பல நகரங்களிலும் ஊருக்கு வெளியே நீங்கள் பார்த்திருக்கலாம். இவை எந்த உபயோகமும் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உள்ள 4000 நகரங்கள் தூக்கியெறியும் குப்பை கழிவுகள் பல கோடி  டன்களாகும்.

ஆனால் இந்தக் குப்பை மலைகளில் மிகப்பெரிய எரிசக்தியான மீத்தேன் இருப்பது நம்மில் பலருக்குத் தெரிந்தும், அதை பயன்படுத்தாமல் இருக்கிறோம். மீத்தேன் (Methane) என்பது CH4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். இயற்கை வாயுவின் பெரும்பகுதி மீத்தேன் வாயுவாகும்.

மேலும் இந்த தூக்கி எறியப்படும் குப்பைகளில் 50% ஆர்கானிக் பயோகிரேடபுள் உரமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

இவற்றை மனதில் வைத்து களமிறங்கி இருக்கிறது ஒரு ஸ்டார்ட்அப். கார்பன் லைட்ஸ் (Carbon Lites) என்ற இந்த ஸ்டார்ட்அப் பெங்களூரில் இயங்கி வருகிறது. இதன் வேலை என்ன தெரியுமா? பெங்களூரில் உள்ள ஐ.டி. பார்க்குகள், ரெசிடென்சியல் காம்ப்ளக்ஸ், ரெஸ்டாரண்ட்ஸ் ஆகியவைகளில் இருந்து வெளியேற்றபப்டும்  குப்பைகள் எல்லாவற்றையும் தினசரி சேகரிப்பது, பின்னர் அவற்றிலிருந்து மீத்தேன் வாயுவை பிரித்தெடுப்பது, பின்னர் அதை சமையலறையில் நீங்கள் உபயோகிக்கும் சிஎன்ஜி ஆக மாற்றுவது. அப்படி மாற்றப்படும் சிஎன்ஜி சிலிண்டர்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது.  இது நீங்கள் வாங்கும் சிஎன்ஜி கியாஸை விட 10 முதல் 15 சதவீதம் வரை விலை குறைவாக இருக்கிறது.  ஆர்கானிக் உரமாக  குப்பைகள் மாற்றப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. தொடர்ந்து நிலங்களுக்கு போட்டு வரும் கெமிக்கல் உரங்களுக்கு மாற்றாக இருக்கும் இந்த ஆர்கானிக் உரங்கள்  விளைநிலங்களுக்கு நல்ல பாதுகாப்பையும், விளைச்சலையும் தருகின்றன

இது தவிர இவர்கள் 30 கிலோ கியாஸ் சிலிண்டர்-யையும் கொண்டு வந்திருக்கிறார்கள். இதன் பயன் என்ன என்று கேட்கிறீர்களா? இவற்றை வாகனங்களில் பொருத்துவதன் மூலமாக, அந்த வாகனங்கள் 220 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டதாக இருக்கின்றன.

இந்த செயல்பாடுகளுக்காக இந்த ஸ்டார்ட்அப் பல விருதுகளை பெற்றுள்ளது. மேலும் விபரங்களை இவர்களுடைய  இணையதளத்தில் (www.carbonlites.com) சென்று பார்க்கவும்.

இது தவிர உலகளவில் பல எரிபொருள் சேமிப்பிற்காக பல ஸ்டார்ட் அப்-கள் வந்திருக்கின்றன. இவைகளைப் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. அவற்றை https://www.energystartups.org என்ற இணையதளத்தில் காணலாம்.

இந்திய அளவில் எரிபொருள் சேமிப்பில் சிறந்து விளங்கும் மற்ற ஸ்டார்ட் அப்-கள் www.igrenenergi.com, www.zenatix.com, www.reconnectenergy.com, www.tessol.in ஆகியவை ஆகும்.