உங்களது ஜாதகத்தின் ரகசியம்….

பதிவு செய்த நாள் : 15 மார்ச் 2020

உங்களது ஜாதகத்தின் ரகசியம்….

இப் பூவுலகில் மனிதராகப் பிறந்த அனைவருக்குமே தங்களது ஜாதகத்தின் மிக முக்கியமான, ரகசியங்களை அறிந்துகொள்ளும் ஆர்வம் இயற்கையிலேயே அமைந்துள்ளது.

அதிலும், வேலை தேடுவோர், திருமணத்திற்கு பெண், மாப்பிள்ளை தேடுவோர், புதிய வீடு கட்டுவதற்காகக் காத்திருப்போர், நில புலன்களில் விவசாயம் செய்வோர், வியாபாரம் செய்வோர், சொத்து வைத்துக்கொள்வோர் அனைவரும் முதலில் சம்பந்தப்பட்ட, அல்லது தங்களது ஜாதகத்தை குடும்ப ஜோதிடரிடம் காண்பித்து அவரது கருத்தை அறிந்த பின்தான் எந்த வேலையையும் தொடங்குவார்கள்.
வருடத்திற்கு ஒரு முறை, குரு பெயர்ச்சி, பிறகு சனி பெயர்ச்சி, பிறகு ராகு - கேது பெயர்ச்சி, சூரிய சுக்கிர பெயர்ச்சி எல்லாம் இவர்களிடம் மேலும் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகின்றன.
ஏதாவது பிரச்சினை வந்துவிட்டால், நான் பிறந்த நேரம், என் தலைவிதி, என்ன செய்வது… என புலம்பி தள்ளிவிடுவார்கள்.

கவலையை விடுங்கள், நீங்கள் பிறந்த போது உங்களது லக்கினம், ராசி, திசை இதை சற்று தெரிந்துகொண்டால் உங்கள் நிலமையை கொஞ்சம் நீங்களே ஊகித்து விடலாம். உங்களுக்கு காதல் கை கூடுமா, திருமணம் உடனே அமையுமா, மறு பிறப்பு உண்டா, சொத்து சுகம் உண்டா, வம்பு வியாஜியங்களில் வெற்றி கிட்டுமா, அரசியலில் கலக்கலாமா என்பன போன்ற சந்தேகங்கள் எல்லாம் உங்களை விட்டு சற்றே ஓடிவிடும்.

முதலில் உங்கள் ஜாதகம் பற்றி தெரிந்துகொள்ள தேவை ஜாதகக் குறிப்பு தான். இதில் லக்கினம், ராசி, நட்சத்திரம், கிரகங்கள், நவாம்ச கட்டம், தசா புக்தி கணிப்புகள், ஆகியவை உள்ளடக்கியிருக்கும்.

லக்கினம் - தெரிந்து கொள்வது எப்படி

உங்களது ஜாதகத்தில் மிகவும் முக்கியமான இடம் லக்கினம்தான். லக்கினம்தான் அனைத்து கணிப்புகளுக்கும் அடிப்படை, இந்த லக்கினம் இருக்கும் கட்டத்தை எப்படி தெரிந்துகொள்வது.

நீங்கள் பிறந்த நேரம்தான் லக்னம்”. இது 12 ராசிகளில் எந்த கட்டத்தில் வேண்டுமானாலும் அமையலாம். ராசியுடன் சேர்ந்தும் அமையலாம்.

சூரியன் 

லக்கினம் கட்டத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்னால் உங்களது ஜாதகத்தில் சூரியனுடயை இருப்பிடத்தை பார்க்க வேண்டும்.

நீங்கள் எந்த மாதத்தில் பிறந்தீர்களோ அந்த கட்டம் அல்லது ராசியில்தான் சூரியன் இருக்கும்.

உதாரணத்திற்கு மேஷம் ராசி சித்திரை மாதம் (ஏப்ரல் 14ம் தேதி புது வருடப் பிறப்பு), கடகம் ராசி ஆடி மாதம், கன்னி ராசி புரட்டாசி, (தமிழ் மாதத்திற்கு இணையான ஆங்கில மாதத்தின் தேதி பக்கத்தில் தரப்பட்டுள்ளது). அந்த மாதத்தில் அல்லது அந்தக் கட்டத்தில் சூரியன் அமர்ந்துள்ள ராசி.

உதாரணத்திற்கு நீங்கள் காலை 10:00 மணி அளவில் பிறந்திருந்தால், அன்றைய சூரிய உதய நேரம் காலை 6 மணியிலிருந்து 2:00 மணி நேரத்தை கூட்டிக்கொண்டு கணக்கிட்டால் நீங்கள் பிறந்த நேரம் எந்த கட்டத்தில் நிற்கிறதோ அதுதான் லக்னம். (சூரியன் அமைந்துள்ள கட்டத்திலிருந்து கடிகாரச் சுற்று முறையில் எண்ண வேண்டும், ஒரு நாளைக்கு 24 மணி நேரம், 12 ராசிக்கும் 2 மணி நேரமாக வகுத்து விடுங்கள்).

நீங்கள் காலையில் பிறந்திருந்தால் சூரியன் கட்டத்திற்கு முன்னாலும், இரவில் பிறந்திருந்தால் சூரியன் கட்டத்திற்கு பின்னாலும் லக்னம் அமைந்திருக்கும்.

ராசி கட்டம் (சந்திரன்)

நீங்கள் பிறந்த தினத்தில் என்ன நட்சத்திரம் உள்ளது என்பதை பாருங்கள். அந்த நட்சத்திரம் எந்த ராசி தொகுப்பில் உள்ளதோ அது தான் ராசி கட்டம். சந்திரன் (மனதுகாரகன் – மனம் ஓரிடத்தில் நில்லாமல் கற்பனையிலேயே காலத்தை கழித்துவிடும்) எந்த கட்டத்தில் உள்ளதோ அங்கிருந்துதான் ராசி எண்ணப்படுகிறது. ராசி 12 கட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் அமையலாம். 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்கள்.

சரம், ஸ்திரம், உபஜெய ராசிகள் என ராசிகள் 3 வகைப்படும்.

சர ராசி = மேஷம், கடகம், துலாம், மகரம்,

ஸ்திர ராசி = ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்

உபஜெய ராசி = மிதுனம், கன்னி, தனுசு, மீனம் (ஜாதகத்தின் நான்கு மூலையிலும் உள்ள கட்டங்கள் உபஜெய ராசி ஆகும்)

புதன், சுக்கிரன், செவ்வாய்

சூரியன் அமைந்துள்ள கட்டத்திலோ அல்லது 2 கட்டம் முன்னாலோ, அல்லது 2 கட்டத்திற்கு பின்னாலோ தான் புதன், சுக்கிரன், செவ்வாய் அமைந்திருக்கும்.

சூரியனுடன் புதன் சேர்ந்திருந்தால், புத ஆதித்யா யோகம்

குருவுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால் குருமங்கள யோகம்

ராகு – கேது

ராகுவும் கேதுவும் 7 கட்டங்களுக்கு எதிர் எதிரே அமைந்திருக்கும்.

ராகு கேதுவுடன் பிற கிரகங்களும் அமைந்திருக்கலாம். அல்லது தனித்தும் அமைந்திருக்கலாம்.

தங்களது ராசி கட்டத்தில் அமைந்துள்ள ராகு கேதுவை வைத்து பெயர்ச்சியின் பலன்களை அறிந்துகொள்ளலாம்.

சனி 

ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடங்கள் சஞ்சரித்து சனி பெயர்ச்சியாகும். சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை. ஒருவருடைய வெற்றி தோல்வியை தருபவர் சனி. ஜாதகத்தில் அவர் அமைந்துள்ள ராசியைப் பொறுத்தே அது அமையும் (உச்சம், நீச்சம்). ராசிக்கு இரண்டாம் இடத்தில் சனி அமைந்துவிட்டால், எந்த வகையான பிரச்சனை அல்லது போராட்டம் இருந்தாலும், இறுதியில் இந்த ஜாதகத்தாருக்குத்தான் வெற்றி நிச்சயம்.

அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி என ஒரு ஜோதிடப் பழமொழியும் உள்ளது.

குரு

ஒருவரது படிப்பு எப்படி உள்ளது என்பதை தெரிந்துகொள்ள குருவை பார்க்க வேண்டும். ஜாதகத்தில் குரு பார்வை சரியாக இருந்தால் கோடி புண்ணியம் என்பார்கள்.

தேவ குருவோ, அசுர குருவோ ஒருவருக்கு குரு சரியாக அமைந்துவிட்டால் அவரை யாராலும் மிஞ்சமுடியாது.

ஒருவருடைய ஜென்ம ஜாதகத்தில் ஒன்பதாம் இடத்தில் குரு இருந்தால் தந்தையுடன் சேர்ந்திருக்க முடியாது. அதனால் ஓடிப்போனவருக்கு ஒன்பதில் குரு என ஒரு ஜோதிடப் பழமொழியும் உள்ளது.

பிற செய்திகள்

கேந்திரம்: ராசி லக்கினத்தில் இருந்து 1, 4, 7, 10 ம் வீடுகள்

திரிகோணம்: ராசி லக்கினத்தில் இருந்து 5, 9 ம் வீடுகள்

வர்கோத்தமம்: ஒரு கிரகம் இராசியிலும் அம்சத்திலும் ஒரே இராசியில் காணப்படுதல் வர்கோத்தமம் எனப்படும்.

வக்கிரம்: ஒரு கிரகம் பின் நோக்கிச் செல்வது வக்கிரம் என அழைக்கப்படும்.

கிரகப் பார்வை: ஒவ்வொரு கிரகமும் தன் ஸ்தானத்தில் இருந்து 7ம் இடத்தைப் பார்க்கும். அத்துடன்
விசேஷப் பார்வையாக:
குரும், 9 ம் இடத்தையும்
செவ்வாய்: 4 ம், 8 ம் இடத்தையும்
சனி3 ம், 10 ம் இடத்தையும் பார்க்கும்.

இவைதான் கிரகப் பார்வையின் பலன்களைக் கட்டகளாகும்.

ராசி, ல உங்கள் உள்ளங்கையில்

உலகம் உள்ளங்கையில் இருக்கிறது என்பார்கள் அது போல, உங்களது இடது கையை மேலே காண்பித்துள்ளவாறு ரேகைகளை கட்டங்களைப் போல் சரி செய்துகொள்ளுங்கள். முதல் கட்டம் மீன ராசி என ஒரு கற்பனை செய்து கொண்டு ஒவ்வொரு ராசியாக எண்ணிப் பாருங்கள். உங்கள் ஜாதகத்தில் எந்த இடத்தில் ராசி, ல, கிரகம் அமைந்துள்ளது என உங்களுக்கே தெரிவிடும். (இது கற்பனை படம்தான், சற்று யோசித்தால் நீங்களே மிக எளிதாக புரிந்துகொள்வீர்கள்)

தங்களது கிரகங்களின் பலன்களையும், ராசிகளின் பலன்களையும் எனது ஆசான் சத்தியபுரி ஜோதிட மாமணி மு. திருஞானம் அவர்கள் தனித்தனியே எழுதியுள்ளார். சந்தேகம் இருந்தால் அவற்றை நமது சைட்டிலேயே நீங்கள் (ஜாதகம் கிளிக் செய்யுங்கள், கிரகங்கள் வரிசையை பாருங்கள்) பார்த்துக்கொள்ளுங்கள்

சுருக்கமாகவும், மிக எளிதான அடிப்படையான விஷயங்களை நான் எழுதினாலும் இந்தக் கட்டுரையும் சற்றே நீண்டு விட்டது. அலுப்பு தட்டினாலும் மீண்டும் ஒரு தரம் படியுங்கள். உங்கள் மனதில் உள்ளவாறு உங்களது லைக் அல்லது கமெண்ட் போடுங்கள்.

மீண்டும் உங்களை வேறொரு கட்டுரை வாயிலாக சந்திக்கிறேன்.

பழையவலம் பா. ராமநாதன்.

 


கட்டுரையாளர்: பழையவலம் பா. ராமநாதன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation