சுவையான இடியாப்பம் - உப்பு சமையல்

பதிவு செய்த நாள் : 12 மார்ச் 2020 10:00

தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி - 500 கிராம், வெங்காயம் - 4, பச்சை மிளகாய் - 10, உளுந்தம் பருப்பு - 3 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எலுமிச்சம்பழச்சாறு - சிறிதளவு.

செய்முறை:

புழுங்கல் அரிசியை ஊறப்போட்டு ஒரு மணிநேரத்திற்குப் பிறகு எடுத்து நிழலில் உலரப் போடவேண்டும். அது நன்கு உலர்ந்ததும் எடுத்து மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளவேண்டும். அரைத்த மாவை வறுத்து சல்லடையால் சலித்துக் கொள்ள வேண்டும்.

அதை ஒரு பாத்திரத்தில் கொட்டித் தேவையான அளவு வெந்நீர் ஊற்றிக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளுங்கள். அவ்வாறு பிசைந்த மாவை இடியாப்பக் குழலில் போட்டு இடியாப்பங்களாகப் பிழிந்து அவற்றை ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.

பிறகு இடியாப்பங்களை ஒரு பெரிய தட்டில் உதிர்த்துக்கொள்ளவேண்டும். எலுமிச்சப்பழச் சாறில் உப்பைப் போட்டுக் கரைத்து அதை உதிர்த்த இடியாப்பங்கள் மீது தெளிக்கவேண்டும்.

அடுப்பில் இருப்புச் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகையும் உளுந்தம்பருப்பையும் போடுங்கள். பிறகு நறுக்கிய வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் போட்டு வதக்குங்கள். - கடைசியாக, உதிர்த்து வைத்திருக்கும் இடியாப்பங்களை அதில் கொட்டி நன்றாகக் கிளறி இரண்டு நிமிடங்களில் இறக்கிச் சுடச்சுடப் பரிமாறுங்கள்.