பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 15–3–2020

பதிவு செய்த நாள் : 15 மார்ச் 2020

ஒரு நல்ல செய்தி  வந்திருப்பதை பார்த்தேன். நாடு முழுவதும் உள்ள பழமை வாய்ந்த திருக்கோயில்களின் நிர்வாகத்தை மத்திய தொல்லியல் துறைக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக வந்திருக்கும் தகவல்,  இதை ஏற்கனவே பா.ஜ. க அரசு செய்திருக்க வேண்டும். இந்த முடிவுக்கு திமுகவும், மதிமுகவும்,  பா.ம. க நிறுவனம் டாக்டர். ராமதாசும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

அந்த முடிவை எதிர்த்து போராடுவோம் என்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.   `ஸ்ரீரங்கநாதனையும், தில்லை நடராஜனையும் பீரங்கி வைத்து  பிளக்கும் நாள் எந்நாளோ ? பாலுக்கு பாலகன் பசித்தழுகையிலே பாழான கல்லுக்கு பாலாபிஷேகம் ஏனோ ? ஏரோட்டும் உழவரெல்லாம் ஏங்கி தவிக்கையிலே தேரோட்டம் ஏனுனக்கு தியாகராஜா ? என்றெல்லாம் கோஷம் எழுப்பி தமிழகத்தில் இந்துக்களின் ஆன்மிக உணர்வுகளை மிதித்த கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்.

இப்போது இவர்களுக்கு ஏன் இந்து கோயில்கள் மீது இத்தனை அக்கறை? அதற்கு காரணம் இருக்கிறது! தமிழகத்தில் உள்ள கோயிகளுக்கு சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருக்கின்றது. இந்த நிலங்கள் எல்லாம் பத்திரமாக இருக்கிறதா ?   யார் கையில் இருக்கிறது ? என்ற கணக்கை எடுத்தால் அதில் பல அரசியல்வாதிகள் சிக்குவார்கள்.

 பல நூறு ஏக்கர் நிலங்களை தனியார்கள் கப்ளீகரம் செய்துவிட்டார்கள். கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் தனியார் ஆக்கிரமிப்புக்கள். கடைகள். கோவில்களுகு சொந்தமான வீடுகள் எத்தனை ? அதில் இப்போது யார் குடியிருக்கிறார்கள் ? அவர்கள் கொடுக்கும் வாடகை என்ன? இதையெல்லாம் கணக்கெடுத்தால் தலை சுற்றிப்போகும்.

 1967ம் வருடம் திராவிட முன்னேற்றக் கழகம்  ஆட்சிக்கு வந்தது. அதற்கு முன் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் இந்து அறநிலையத்துறை என்கிற ஒரு இலாக்காவே தமிழக அரசில் கிடையாது. அதற்கு முன்பு கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை பல அறக்கட்டளைகள் மூலம் சமூகத்தில் நல்ல கெளரவமான அந்தஸ்தில் உள்ளவர்கள் அதை நேர்மையாக நிர்வகித்து வந்தார்கள்.

 தமிழக கோயில்களுக்கு ஏராளமான சொத்துக்கள் இருப்பதை கண்டறிந்தார்கள் அன்றைய ஆட்சியாளர்கள். அதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்து அறநிலையத்துறை. இந்தியாவில் பல மாநிலங்களில் அது போன்ற இலாக்காவே கிடையாது. பச்சையாக சொல்ல வேண்டுமானால் கோயில் சொத்துக்களை சூறையாடவே உருவாக்கப்பட்டதுதான் இந்து அறநிலையத்துறை. கோயில் கூடாது என்று சொன்னவர்கள் வசம் இந்து கோயில்கள் போனதுதான் தமிழகத்தில் நேர்ந்த மிகப் பெரிய அதிகாரப்பூர்வ கொள்ளை.

இந்து அறநிலையத்துறை என்கிற இலாக்கா உருவாக்கப் படும் வரை தமிழக கோயில்கள் வசம் இருந்த நிலங்களின் அளவு என்ன ? இப்போது கோயில்களின்  பெயரில் இருக்கும் அளவு என்ன ? இந்து அறநிலையத்துறை அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிடுமா?

 அப்படி கோயில் நிலங்கள் அபகரிக்கப்பட்டிருந்தால், அந்த நிலங்கள் யார் வசம் உள்ளது? அதை மீட்க அந்த இலாக்கா ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.கோயில் நிலங்களை ஆக்கிரமித்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அந்த தனி நபர்கள் நீதிமன்றம் சென்று ஒரு தடை வாங்கி வந்துவிடுகிறார்கள். ஆனால், அறநிலையத்துறையின் வழக்கறிஞர்கள் அந்த தடையை ரத்து செய்ய சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்.  ஒரு பொது காரியத்திற்காக ஏதாவது ஒரு காலி நிலத்தை கேட்டால், அந்த நிலத்தின் மீது வழக்கு இருக்கிறது என்கிற பதில் மட்டுமே அறநிலையத்துறையிடமிருந்து வரும்.

 தமிழகத்திலுள்ள பல கோயில்களுக்கு கோடிக்கணக்கான வருமானம் வருகிறது. அந்த வருமானத்தைக் கொண்டு இந்து அறநிலையத்துறை செய்த ஆக்கபூர்வமான பணிகள் என்ன?

 முன்பு மன்னர்களும், ஊரின் பெரிய செல்வந்தர்களும் தங்கள் சொத்துக்களின் ஒரு பகுதியை கோயில்களுக்காக எழுதி வைத்தார்கள். அந்த சொத்துக்களின் வருமானம் என்பது அந்த கோயிலில் அன்றாட வழிபாட்டிற்கு மட்டுமல்ல. ஊரின் வளர்ச்சிக்காகவும், பல தர்ம காரியங்களுக்கு பயன்படு வதற்காகவும் தான் அந்த சொத்துக்கள் கொடுக்கப்பட்டது.

உதாரணமாக பழனி முருகன் கோயிலின் ஆண்டு வரு மானம் 150 கோடி என்று சமீபத்தில் ஒரு அதிகாரபூர்வ தகவல் வந்தது. இந்த பணத்தை இந்து அறநிலையத்துறை  எப்படி செலவழிக்கிறது? வழிப்பாட்டு செலவுகள், கோயில் ஊழியர்களின்  சம்பளம், புனித ஆகம செலவுகள் போக மிச்சமிருக்கும் கையிருப்பு எவ்வளவு? அதைக் கண்டு அந்த துறை செய்த ஆக்கப்பூர்வமான பணி என்ன ?

 இந்தியா முழுவதும் திருமாலின் 108 திவ்ய தேசங்கள் அல்லது 108 திருப்பதிகள் உண்டு. இதில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் நவ திருப்பதிகள் உண்டு. அதாவது ஒன்பது கோயில்கள். இதில் ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம் போன்ற பெரிய கோயில்களைத் தவிர மற்ற ஏழு கோயில்களின் நிலை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எப்படியிருந்தது? இப்போது அந்த கோயில்கள் எப்படி  செழித்திருக்கிறது. இதற்கு காரணம் இந்து அறநிலையத்துறை யின் பங்களிப்பா? டிவிஎஸ் என்கிற தனியார் நிறுவனத்தின் அருட்கொடையால் தான் காடாக மண்டிக்கிடந்த அந்த கோயில்கள் இன்று புனருத்தாரணம் பெற்று ஜொலிக்கிறது.

 இயங்காத ஒரு இலாக்காவின் பொறுப்பில் தமிழகத்து கோயில்கள் இருக்க வேண்டிய அவசியம் என்ன ? ஒரு கோயில் உண்டாகும்போது, அங்கே ஒரு ஊர் உருவாகிறது. அங்கே வியாபாரங்கள் பெருகுகிறது. மனிதர்கள் அங்கே குடியேறுகிறார்கள். அப்படி கோவில் வருமானத்தைக் கொண்டு உருவாகும் ஊரை பராமரிக்க இந்து அறநிலையத்துறை இதுவரையில் செய்தது என்ன? நல்ல வருமானமுள்ள கோயில்களின் வருமானத்தைக் கொண்டு அந்த ஊரில் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். அந்த ஊரில் அறநிலையத்துறையே தன் செலவில் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் உருவாக்கி ஏழைக்களுக்கு கட்டணமில்லா கல்வியும், மருத்துவ வசதியும் செய்து கொடுக்கலாமா? இதனால் ஆளரவமற்ற பகுதிகள் கூட மனித குடியேற்றத்திற்கு ஏற்ற ஒரு ஊராக மாறுமே?

 இப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்பது அந்த இலாக்காவின் நோக்கம் அல்ல.  சில பல அரசியல்வாதிகளின் சுயலாபத்திற்காக ஒரு இலாக்கா ஒரு மாநில அரசிடம் இருப்பது எத்தனை விபரீதமானது.  இந்து அறநிலையத்துறை உருவான பிறகு  பல தமிழக கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகி போனதுதான் உண்மை. விரைவில் மத்திய தொல்லியல் துறை இதில் தலையிட்ட எல்லா மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்து கோயில்களை தன் வசம் மத்திய அரசு எடுத்துக் கொள்வது இந்து ஆன்மிக உணர்வுகளுக்கு  கொடுக்கப்படும் மிகப் பெரிய கெளரவம்.

இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கும்போது, நவதிருப்பதில் ஏதாவது ஒரு கோயிலைப் பற்றி தெரிந்து கொள்வோமே என்று புத்தகங்களை புரட்டினேன்.  அப்போது கண்ணில் பட்டது திருக்கோளூர் வைத்தமாநிதிப் பெருமாள்

 ராமானுஜர் வைத்த மாநிதிப்பெருமாளை தரிசிக்க திருக்கோளூருக்கு வந்தார். அவர் ஊருக்குள் நுழைந்த நேரத்தில் ஒரு பெண்மணி திருக்கோளூரை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தாள். அவளிடம் ஏதோ ஒரு தாழ்வு மனப்பான்மை நிலை கொண்டிருப்பதை அவரால் ஊகிக்க முடிந்தது. ஆகவே. அவளைக் கண்ட ராமானுஜர், `அம்மா, நான் இந்த ஊருக்குள்  ஆன்மிகப் பெருநிதியைத் தேடி வருகிறேன். நீங்களோ இந்த அற்புதத் தலத்தை விட்டு ஏதோ மனக்குறையுடன் வெளியேறுகிறீர்கள் போல தெரிகிறதே ஏன்? என்று கேட்டார். ராமானுஜரைத் தான் புறக்கணிப்பதாக  அவர் தவறாகக் கருதிக்கொண்டாரோ என்று அந்த பெண்ணுக்கு சந்தேகம். `சுவாமி, நான் மிகவும் சாதாரணமானவள். எம்பெருமானுக்கு நான் என்ன செய்துவிட்டேன். காலந்தோறும் தோன்றும் திருமாலடியார்கள்தான் எத்தனையெத்தனை அரும்பணிகள் செய்திருக்கிறார்கள். எத்தனை தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களை ஒப்பிடும்போது நான் அந்த பரந்தாமனுக்கு ஒன்றுமே செய்யவில்லையே ‘ என்று ஆரம்பித்த அந்த பெண், ராமாயணம் மகாபாரதம், பாகவதம் ஆழ்வார்களின் வரலாறுகளின் ஆகியவற்றில் குறிப்பிடப்படும் சான்றோர்கள் செய்த எண்பத்தோரு அருஞ்செயல்களைக் கவிதை வடிவில் கூறினாள்.

 அது கேட்டு வியந்து நின்றார் ராமானுஜர். திருமாலடியார்கள் செய்த தொண்டுகளை இந்த பெந்தான் எப்படி நினைவு கூர்கிறாள்? அத்தகைய சான்றோர்கள் செய்த செயல் எதையும் தான் செய்யவில்லையே என்ற ஏக்கத்தை தன்னுடைய அக்கவிதை அடிகளில்தான் எவ்வளவு உணர்வு பூர்வமாக வெளிப்படுத்துகிறாள். அதோடு, மிகச் சிறந்த திருத்தலமாகிய திருக்கோளூரில், தான் தொடர்ந்து வசிக்கத் தகுதி அற்றவள் என்றும் தன்னடக்கத்துடன் குறிப்பிட்ட அப்பெண்மனி, அதனால்தான் அவ்வூரை விட்டு வெளியேறுவதாகக் கூறினாள். வயலில் கிடக்கும் முயல் புழுக்கையைப் போல, தான் திருக்கோளூரில் பயனற்றவளாக இருப்பதாகவும் அவள் கூறியது கேட்ட ராமானுஜர் உளம் நெகிழ்ந்தார்.. அதாவது அந்த ஊரில் அத்தனை சான்றோர்கள் இருந்ததைக் கண்டு நெகிழ்ந்தார் ராமானுஜர்.                                  ***