மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் எழுதும் வாலிப கவிஞர் வாலி – 34

பதிவு செய்த நாள் : 15 மார்ச் 2020

 வாலியும், கே.ஆர்.ஆரும் இருவரும் பார்த்த  படம் வீணை எஸ். பாலசந்தர் இயக்கிய  `அவன் அமரன்’ படம். இதில் கே. ஆர். ராமசாமியும், ராஜசுலோசனாவும் நடித்திருந்தார்கள்.

 போதி மரமும் வேண்டாம்; புளிய மரமும் வேண்டாம். புத்தி சொல்ல `எழும், விழும்’ என்கிற நியதி சூரியனுக்கே இருக்கும்பொழுது மானிடனுக்கும் ஒரு கிழக்கும் மேற்கும் இருக்காதா என்ன?

 `வால் நீண்ட கரிக்குருவி

 வலமிருந்து இடம் போனால்

 கால் நடையாய்ச் சென்றவர்கள்

 கனக தண்டிகை ஏறுவரே!’

 என்று ஒரு பழம்பாடல் இருக்கிறது. அந்த பாடலில் அடுத்த வரிகள் கனக தண்டிகை ஏறிய வரும் கால் நடையாய்ச் செல்ல நேரும் என்பதையும் சுட்டிக் காட்டாமலில்லை.

ஆக. காலசக்கரம் மேலும் கீழுமாகச் சுழுலு வதை பட்டறிவைக் கொண்டு, மனிதன் கண்டு கொள்ளக் கூடும். வாழ்க்கை ஒரு ஓவியமாக வேண்டுமாயின், ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். நேர்க்கோடுகள் ஓவியமாகுமா என்ன?

 குட்டையாகத் தேங்கி நிற்பது கொண்டாடப்பட வேண்டிய விஷயமல்ல. பள்ளத்தில் இறங்கி, மேடுகளில் ஏறி – நதி போல நடக்கின்ற வாழ்க்கையைத்தான் வரலாறு குறித்துக் கொள்ளுகிறது.

 `ஒரு மனிதன்

 விழாமலே வாழ்ந்தான்

 என்பது பெருமையல்ல

 விழுந்த போதெல்லாம்

 எழுந்தான்

 என்பதுதான் பெருமை’

 இப்படி சொன்னான் ஒரு ஆங்கிலக் கவிஞன்.

திரையுலகில் எழுந்த வர்கள் விழுந்ததையும், விழுந்தவர்கள் எழுந்ததையும் வாலி கண்டிருக் கிறார். இதன் காரணமாகவே, அவர் தன் மனத்தை அடி நாட்களிலிருந்தே சமணப்படுத்தி வைத்திருந்தார். ஒரு நாள் ஒரு சிறுவன் வாலியிடம் சின்னக் கடிதம் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தான். பிரித்துப் படித்தார்.

` கடிதம் கொண்டு வரும் இந்தப் பையன் வசம் ஐம்பது ரூபாய் கொடுத்தனுப்ப வேண்டுகிறேன் – மிகவும் சிரமத்தில் இருக்கிறேன்’

கடிதத்தைப் படித்தவுடன், கீழே கையொப்பமிட்டிருந்தவரின் பேரைப் பார்த்ததும் திடுக்கிட்டேன். பணம் கொடுத்து, வந்த பையனை அனுப்பி விட்டு நீண்ட சிந்தனையில் ஆழ்ந்து போனார்.

` எப்படிப்பட்ட எழுத்தாளர் ; தமிழ் சினிமா செய்த தவத்தால் ஜனித்த இந்த மாமேதைக்கு இப்படியொரு சிரமமா? எவருடைய பெயரை விளம்பரத்தில் பார்த்தாலே – நல்ல தமிழைக் காதாரக் கேட்கலாம் என்று சாரி சாரியாக மக்கள் கியூவில்  நின்றார்களோ – அந்தப் பெயருக்குரியவர் இப்போது ஐம்பதுக்கும் நுாறுக்கும் அடுத்தவரை எதிர்பார்த்து நிற்கிறாரே? என்று வாலி வருத்தப்படுகையில் அவர் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் கசிந்தன.

`கண்ணீரைத் துடைக்கலாம்;

களங்கத்தைத் துடைக்க முடியாது

 வைகையைத் தாண்டுவது சுலபம்

 வாழ்க்கையைத் தாண்டுவது சுலபமல்ல

கணவனுக்கு வழங்க முடியாத

 அழகையும் இளமையையும்

காலத்திற்கு வழங்கிவிட்டேன்.

 மேற்கண்ட உரையாடல்கள் இன்னமும் உயிரோடிருக்கின்றன. இவ்வளவு உயிரோட்டமுள்ள  உரையாடலை அந்நாளில் வெள்ளித் திரையில் எழுதி வாலியைப் போன்ற இளைய நெஞ்சங்களில் தமிழை விதைத்த புண்ணியவான், இன்று பொருளாதார நெருக்கடியில் விழி பிதுங்கிக் கொண்டிருப்பதை எண்ணும்பொழுது – வாலி இதயத்தில் அப்பிக் கிடந்த மிச்சம் மீதமுள்ள அகந்தையையும்  தானே அலம்பிவிட்டுக் கொண்டு அடக்கத்தைப் பாலபாடமாக பயிலத் தொடங்கினார் வாலி.

ஒரு சிறுவன் மூலம் வாலியிடம் ஐம்பது ரூபாய் கேட்டு கடிதம் கொடுத்தனுப்பியவர் , ` கதர்’ என்னும் பத்திரிகையை ஆதி நாட்கள் நடத்திய தணிகாசலம்.

தணிகாசலம் என்று சொன்னால் புரியாது `இளங்கோவன்’ என்று சொன்னால் தான் தமிழ் மக்களுக்குப் புரியும்.

`எனக்கு வளமைதான் புதிதே தவிர, வறுமை புதிதல்ல... என்கிற வாக்கியத்தை வாலி தன் உள்ள சுவரிலே எப்போதோ ஒட்டி வைத்துவிட்டார். அவருடைய முன்னேற்றத்திற்கு இறைவன் அருள்தான் காரணமே தவிர, ஏனைய மக்களைக் காட்டிலும் தான் மெத்தப் படித்தவன் என்பதல்ல என்பதை உணர்ந்தவர் வாலி. தன்னைவிட தமிழ் கற்றோர் ஏராளம் என்பதில் எள்ளளவும் வாலிக்கு சந்தேகமில்லை. புகழ் வெளிச்சம் அவர் மேல் பரவியிருப்பது பரம்பொருளின் கொடையேயல்லாது தன் செயல் ஏதுமில்லை. பெற்றதாய்தான் வாலிக்கு பரம்பொருள்.

காரைக்குடி கம்பர் விழாவில் , கவியரங்கத் தலைமையை வாலி ஏற்க நேர்ந்த பொழுது, கம்பனடி பொடியார்கள் தன் இருகரம் பற்றி அழைத்துச் சென்று, வாலியை மயிலாசனத்தில் இருத்தினார்.

உடனே வாலி பாடினார்

 `இம்மாசனம் அலங்கரிக்கும் இப்பெரிய பாட்டரங்கின்

 சிம்மாசனம் எனக்களித்தீர்; சிறப்புற்றேன்; எல்லாமென்

 அம்மா செய்த தவமல்லால் அடியேனின் சிற்றறிவிற்கு

 அம்மாவோ ! அம்மம்மாவோ ! அத்துணை ஏற்றமில்லை!’

புகழ் வாய்ந்த கவிஞர் பெரு மக்களாகிய ம.வே. பசுபதி. சொ. சொ.மீ. சுந்தரம், குருவிக்கரம்பை சண்முகம் அரு. நாகப்பன், வா. மு.சேதுராமன், வைரமுத்து, பொன்மணி வைரமுத்து;மு. மேத்தா.

நா. காமராசன், அப்துல் ரகுமான், மரிய தாஸ்; தங்க. அன்புவல்லி, தமிழ்வேள், நாமக்கல் ராமராஜன், இளந்தேவன், பாவலர் மணி சித்தன், என்று நிறையத் தமிழ் கற்று நிறைகுடமாய விளங்கு

கின்ற நல்லோரெல்லாம், கவியரங் கங்களில் வாலி தலைமையை ஏற்றுப் பாடியிருக்கிறார்கள். இது அவர் பெருந்தன்மைக்குச் சான்றே தவிர தன் புலமையல்ல என்று நினைப்பவர் வாலி.

பாட்டரங்கிலேயே, மேற்சொன்ன கவிஞர் பெருமக்களைச் சுட்டிக் காட்டி வாலி பாடினார்.

 ` நேரசையும், நிரையசையும் நன்குணர்ந்து – பாட்டுத்

 தேரசைய வடம்பிடிக்கத் தெரிந்தவர்கள் நீங்கள்! யானோ

 நூலறிவும் நுண்ணறிவும் நீரறிந்த அளவில்ஓர்

 காலறிவும் வாய்க்காமல் கவியரங்கத் தேறி நின்றேன்.

 இது, அவையடக்கம் என்ற பெயரால், பொய் யாகப் புனைதுரைத்த பனுவல் அல்ல; உள்ளத்தில் உள்ளதை உள்ள படியே ஓதிய உண்மை.

`என் படங்களுக்கு வாலிதான் பாட்டெழுத வேண்டும்’ என்று எம்.ஜி.ஆர்., தயாரிப்பாளர் களுக்குக் கட்டளையிட்ட போதே,  வாலியின் தலையில் கொம்பு முளைத்திருக்க வேண்டும். முளைக்கவில்லை; வாலி முளைக்கவும் விடவில்லை. இது, ஆண்டவன் தீர்ப்பு என்று அமைதி காத்தார். இந்த மனப்பக்குவம் ஒன்றே இறுதிவரையில் எல்லாரும் பிரியமானவனாக வாலியை வைத்திருந்தது. வெற்றியில் விறைப்பதும், தோல்வியில் துவளுவதும் வாலிக்கு ஒவ்வாத விஷயங்கள்.

அவர் திரையுலக வாழ்க்கையில் எத்துணையோ முறை தொய்வு ஏற்பட்டிருக்கிறது. அப்போ தெல்லாம். கடவுள் பக்தி ஒரு கவசம் போல் அவரைக் காத்து நின்றிருக்கிறது. இறைவன் எவரை யேனும் அனுப்பி, வாலியை கைத் தூக்கிவிடச் செய்திருக்கிறான்.

அவர் புகழைப் பனிப்படலம் மூடியிருந்த பொழுது, அதை ஒரு நொடிப்பொழுதில் நீக்கி அதை மீண்டும் வெளிச்சத்தில் நிறுத்தியவர்

ஒருவருண்டு.                                        

 (தொடரும்)