இனி அனைவரும் ருசியான பால் பாசந்தி சமைக்கலாம்

பதிவு செய்த நாள் : 10 மார்ச் 2020 10:00

தேவைப்படும் பொருள்கள்:

பால் - 1 லிட்டர், சர்க்கரை - 150 கிராம், பனீர் - 200 கிராம், கோவா - 50 கிராம், முந்திரிப் பருப்பு - 50 கிராம், ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி, குங்குமப்பூ - சிறிதளவு.

செய்முறை: 

சில இனிப்பு வகைகளைத் தயாரிக்க பனீர் பயன்படுத்தப்படுகிறது. முதலில் பனீரை எவ்வாறு தயாரிக்கவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியமாகும்.

ஒரு கிலோ பனீர் தயாரிக்க இரண்டரை லிட்டர் பாலும் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சம்பழச் சாறும் வேண்டும். அவற்றின் மூலம் பனீரைத் தயாரிக்கும் முறையைக் கவனிப்போம்.

ஒரு சுத்தமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வையுங்கள். அது கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வையுங்கள். அதில் எலுமிச்சம் பழச்சாறை ஊற்றி நன்கு கலக்கி ஆறவிடுங்கள்.

மற்றொரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துக் கொதிக்க விடுங்கள். அடுப்பு சிறு தீயாக எரியட்டும். பாலில் ஏடு படியாதவாறு தொடர்ந்து கிளறிவிட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.

பால் நன்கு கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து ஆறவிடுங்கள். பால் இலேசான சூட்டிற்கு ஆறியதும் எலுமிச்சம்பழச் சாறு கலந்த நீரைச் சிறிது சிறிதாக ஊற்றித் தொடர்ந்து கிளறிவிடுங்கள். அந்த நீரை முழுவதுமாகக் கலந்ததும் பாத்திரத்தை அப்படியே வைத்துவிடுங்கள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு பார்த்தால் பால் திரிந்து கெட்டியாக அடியில் தங்கிவிடும். மேலே தெளிவான நீர் காணப்படும். ஒரு சுத்தமான மெல்லிய துணியில் அந்த நீரைச் சுத்தமாக வடிகட்டி எடுத்துவிட வேண்டும். அடியில் இருக்கும் கெட்டியான பாலே பனீர் ஆகும்.

அதை மற்றொரு மெல்லிய துணியில் கொட்டி மூட்டை போல் கெட்டியாகக் கட்டிச் சுவரில் ஓர் ஆணியில் மாட்டித் தொங்க விடுங்கள். பனீரில் தங்கியிருக்கும் சிறிதளவு நீரும் சுத்தமாக வடிந்துவிடும்.

அவ்வாறு நீர் வடிந்ததும் பனீரை ஓர் அகலமான தட்டில் கொட்டிக் கையால் அதை உடைத்துவிட்டு மிருதுவாக்கிக் கொள்ள வேண்டும். இப்போது பனீர் தயார்!

இனி, பால் பாசந்தியை எவ்வாறு தயாரிக்கவேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

ஒரு பெரிய மைக்ரோவேவ் பாத்திரத்தில் அரை லிட்டர் பாலை ஊற்றி அதில் பனீரைப் போட்டுக் கலக்கிவிடுங்கள். பிறகு கோவாவை உடைத்துப் போட்டு, சர்க்கரையையும் கொட்டிக் கலக்கி ஓவனில் மைக்ரோ உயர்வில் ஐந்து நிமிட நேரம் வைக்கவேண்டும்.

அதன்பின் மீதமுள்ள அரை லிட்டர் பாலையும் ஊற்றி மைக்ரோ நடுத்தரத்தில் மேலும் பத்து நிமிடம் வைத்திருக்க வேண்டும். அப்போது தொடர்ந்து கலக்கிவிட்டுக் கொண்டே இருங்கள்.

பின்னர் நறுக்கிய முந்திரிப்பருப்பு, குங்குமப்பூ, ஏலக்காய்த் தூள் ஆகியவற்றைப் போட்டுக் கலக்கி ஓவனிலிருந்து எடுத்து மூன்று நிமிடத்திற்குப் பிறகு பரிமாறுங்கள்.

சமைப்பதற்கு தேவைப்படும் நேரம் : 15 நிமிடம்.