கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 221

பதிவு செய்த நாள் : 09 மார்ச் 2020

சவுந்தர ராஜாவா, தியாகராஜா பாகவதருக்கு கூஜாவா?

டி.எம்.எஸ்­சின் தந்தை, மீனாட்சி அய்­யங்­கார். அவ­ரு­டைய முதல் மனை­விக்­குப் பிறந்த நாரா­யண அய்­யங்­கார், சவு­ராஷ்­டிரா சமூ­கத்­தி­னர் இடையே மது­ரை­யில் நல்ல செல்­வாக்­கு­டன் வாழ்ந்து கொண்­டி­ருந்­தார். தன் தந்­தை­யைப் போலவே அவ­ரும் புரோ­கி­தர் தான். ஆனால் வச­தி­யான சவு­ராஷ்­டிர  குடும்­பங்­க­ளுக்கு  ஜோதி­ட­ரா­க­வும், திரு­மண புரோ­கி­த­ரா­க­வும் இருந்த நாரா­யண அய்­யங்­கார் மூலம் பல சவு­ராஷ்­டிர பிர­மு­கர்­கள் டி.எம். சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு அறி­மு­க­மா­னார்­கள். அப்­ப­டித் தெரிந்­த­வர்­தான் பி.ஏ.பி.கே.  அழ­கர்­சாமி என்­ப­வர்.

தியா­க­ராஜ பாக­வ­தர் நடித்த வெற்­றிப் படங்­க­ளான  நவீன சாரங்­க­த­ரா­சை­வை­யும், அசோக்­கு­மா­ரை­யும் தயா­ரித்த முரு­கன்  டாக்­கீû­­­ஸச்  சேர்ந்­த­வர் அழ­கர்­சாமி (மதுரை பி.ஏ.பி.குப்­பு­சாமி  அய்­ய­ரால், எஸ்.எம்.எஸ். சுந்­த­ர­ராம அய்­ய­ரை­யும் அவர் சகோ­த­ரர் எஸ்.எம்.எஸ்.சீதா­ராம அய்­ய­ரை­யும் பாகஸ்­தர்­க­ளா­கக்­கொண்டு, 1935ல் முரு­கன் டாக்­கீஸ் தோற்­று­விக்­கப்­பட்­டி­ருந்­தது).  

சவுந்­த­ர­ரா­ஜன்,  தியா­க­ராஜ் பாக­வ­த­ரின் பாடல்­க­ளைப் பாடும் போது, அழ­கர்­சாமி மனம்­விட்­டுப் பாராட்­டு­வார். அழ­கர்­சா­மி­யின் இல்­லத்­திற்கு சவுந்­த­ர­ரா­ஜன் அடிக்­கடி செல்­வது வழக்­கம்.

சவுந்­த­ர­ரா­ஜன் வீட்­டில், ‘‘ரசம் இருந்தா குழம்பு இருக்­காது,  கறி­யி­ருக்­காது.  ஒரு நாள் கீரை மட்­டும் இருக்­கும்,’’ என்ற நிலை­யி­ருந்­தது. இதி­லி­ருந்து தப்­பித்து, அழ­கர்­சா­மி­யின் வீட்­டில் அடிக்­கடி சவுந்­த­ர­ரா­ஜன் நல்ல உணவை சாப்­பிட்டு வந்­தார்.  இதற்­கி­டை­யில் ஒரு நாள், ஒரு ருசி­க­ர­மான தக­வல் கிடைத்­தது. அழ­கர்­சா­மி­யின் வீட்­டுக்­குத் தியா­க­ராஜ பாக­வ­தர் வரப்­போ­கி­றார் என்ற செய்­தி­தான் அது.

‘‘நாளை பாக­வ­தர் வர்­றா­ராமே... அவ­ரைப் பார்த்­துப் பேச சந்­தர்ப்­பம் கிடைக்­குமா?  அவ­ருக்கு முன்­னாடி  பாட முடி­யுமா... எந்­தப் பாட்­டைப் பாட­லாம்?’’  

அன்­றைய மிகப்­பெ­ரிய நட்­சத்­தி­ர­மான தியா­க­ராஜ பாக­வ­த­ரைப் பார்க்­கப்­போ­கி­றோம் என்ற பட­ப­டப்பு சவுந்­த­ர­ரா­ஜ­னைப் பற்­றிக் கொண்­டது.  பல ஆண்­டு­க­ளுக்கு முன் பாக­வ­த­ரைப் பார்த்த காட்­சி­கள் சவுந்­த­ர­ரா­ஜ­னின் மனத்­தி­ரை­யில் வந்­து­போ­யின.

மது­ரை­யில், குரு­நா­தன் கோயில் தெரு என்று சொல்­லு­வார்­கள்.  தியா­க­ராஜ பாக­வ­த­ரின் மாமா அங்கே இருந்­தார்.  பாக­வ­தர் அப்­போது பிர­ப­ல­மா­காத காலம். ஒரு பஜனை மடத்­திற்கு வந்து பாக­வ­தர் பாடி­னார். குரல்  கம்­பீ­ர­மா­க­வும் ஜிலு­ஜி­லு­வென்­றும் இருந்­தது! பாக­வ­த­ரின்  மாமா பெரிய நகை வியா­பாரி. பிர­ப­லஸ்­தர்­க­ளுக்­கெல்­லாம் வைரம் எல்­லாம் வாங்­கிக் கொடுக்­கி­ற­வர்.  ‘‘தியா­க­ரா­ஜன் நல்லா பாட­றான்... முன்­னுக்கு வரு­வான்’’, என்று அவர் அப்­போது சொல்­லிக்­கொண்­டி­ருந்­தார்.

 தியா­க­ராஜ பாக­வ­தர் திரை நட்­சத்­தி­ரம் ஆன­தும் அடுத்த தெரு­வில் பஜனை மடத்­திற்கு அவர் வந்து பாடு­கிற வைப­வங்­கள் எல்­லாம் நடக்­குமா? அவர் எங்கோ எட்­ட­மு­டி­யாத உய­ரத்­திற்­குப் போய்­விட்­டார். எத்­த­னையோ பேர் நடித்­தார்­கள். சிலர் நன்­றா­க­வும் பாடி­னார்­கள். ஆனால் எம்.கே. தியா­க­ராஜ பாக­வ­த­ருக்­குக் கிடைத்த ஸ்தானம் யாருக்­கும் கிடைக்­க­ வில்லை. பெண்மை கலந்த அவர் சாரீ­ரம் பல­ரைப் பித்­தர்­கள் ஆக்­கி­விட்­டது! அவர் நடந்து செல்­லும் மண்ணை எடுத்­துப்  பாது­காத்து வைக்­கும் அள­விற்­குப் பாக­வ­தர் பித்­துப் பர­வி­யி­ருந்­தது! இதைத்­தான் ‘நட்­சத்­திர அந்­தஸ்து’ என்­பார்­கள். மண்­ணில் மற்ற மனி­தர்­க­ளைப்­போ­லவே  இருந்து வாழ்ந்­து­கொண்­டி­ருப்­ப­வரை, ஏதோ தேவதை என்று நினைத்­து­வி­டு­கிற தற்­கா­லி­க­மான தடு­மாற்­றம்!

பாக­வ­தர் வந்த அந்த நாள், அழ­கர்­சா­மி­யின் வீட்டு வாச­லில் டாட்­ஜு­க­ளும் பியூக்­கு­க­ளும்  அன்­றைய பிர­பல விருந்­தாளி வந்­து­விட்­டார் என்று அறி­வித்­த­படி பள­ப­ளத்­தன. பாக­வ­த­ரின் அத்­தர் மணம் வீடெங்­கும் கமழ்ந்து கொண்­டி­ருந்­தது.

கூடத்­தில் சோபா­வின் நடுவே ஒளி­வட்­டம் பொருந்­திய சுந்­த­ர­பு­ரு­ஷ­னாக சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு  தென்­பட்­டார் தியா­க­ராஜ பாக­வ­தர். அவ­ரைப் பார்த்து சவுந்­த­ர­ரா­ஜன் பிர­மித்­தார். அழ­கர்­சாமி இடை­யில் அறி­மு­கம் செய்­தார். ‘‘நம்ம சமூ­கத்­துப் பையன் சவுந்­த­ர­ரா­ஜன். உங்க பரம ரசி­கன். நீங்க பாடற மாதி­ரியே, அசல் அச்சா அப்­ப­டியே பாடு­வான்,’’ என்­றார்.

தனக்கு எதிரே நின்ற இளை­ஞ­னைப் பார்த்­தார் பாக­வ­தர். நடுத்­தர உய­ரம். அகன்ற நெற்றி. தெளி­வான பார்வை. உணர்ச்­சி­வ­சப்­பட்டு நின்­றி­ருந்­தான் இளை­ஞன்.  பாக­வ­த­ரைக் கண்­டு­விட்ட பூரிப்­பில் சவுந்­த­ர­ரா­ஜ­னின் உள்­ள­மும் உட­லும் பூரித்­துக்­கொ ண்­டி­ருந்­தன. ‘ஏதா­வ­தொரு பாட்­டுப் பாடுங்க பார்ப்­போம்.’  கந்­தர்­வன் பேசிக்­கொண்­டி­ருந்­தான்!

பாக­வ­தர் பாடச்­சொன்­னால் இதைப் பாட­வேண்­டும், அதைப்­பாட வேண்­டும் என்று சவுந்­த­ர­ரா­ஜன் திட்­ட­மிட்டு வைத்­த­தெல்­லாம் எங்கோ பறந்­து­விட்­டது!

பாக­வ­த­ரின் நால­ரைக்­கட்டை சுரு­தி­யில், உம்ம்ம்...என்று இணைந்­து­கொண்டு....

‘‘சினம் காமம் பொய் களவு வஞ்ச நெஞ்­சர்’’ என்ற தொடங்­கும் ‘அசோக்­கு­மார்’ படத்­தின் ராக­மா­லி­கை­யில் சவுந்­த­ர­ரா­ஜ­னின் குரல் கூடத்தை நிரப்­பி­யது.

‘‘கருணை விண்ணே! புனித எண்­கு­ணக்­குன்றே, புத்­த­மூர்த்தி!

போதி நிழல் அமர்ந்­த­வனே அருட்­கண் பாராய்!’’ என்று தொடர்ந்­தது சவுந்­த­ர­ரா­ஜ­னின் கம்­பீ­ர­மான நாதம். நாத அலை­க­ளுக்­கி­டையே வெள்ளி மீன்­க­ளைப்­போல் பளிச்­சி­டும் அசை­வு­க­ளில் உணர்ச்­சிக் கோலங்­கள்..... தமிழ் வார்த்­தை­களை மணக்­கச் செய்­யும் உச்­ச­ரிப்பு... எல்­லாம் பாக­வ­தர் பாணி­யிலே பாக­வ­த­ரின் திருச்­ச­மூ­கத்­திலே!

தனது பாணி­யிலே பாடும் இளை­ஞ­னைப் பார்த்து முறு­வ­லித்­தார், தியா­க­ராஜ பாக­வ­தர். ‘நல்லா பாட­றாரே’ என்று அழ­கர்­சா­மியை நோக்­கிச் சொன்­ன­வர்,  ‘ஏன்பா... நீ என் கூட வர்­றியா?’ என்று சவுந்­த­ர­ரா­ஜனை மெல்­லக் கேட்­டார்!

பாடிய களைப்­பி­லி­ருந்­தும், பாராட்டு கிடைப்­ப­தால் ஓர­ள­விற்கு சுமா­ரா­கப் பாடி­விட்­டோம் என்ற மகிழ்ச்­சி­யி­லி­ருந்­தும் இன்­னும் மீண்­டி­ராத சவுந்­த­ர­ரா­ஜ­னி­ட­மி­ருந்து, ‘பெரி­ய­வங்­க­ளைக் கேட்­டுச் சொல்­றேன்ங்க’   என்ற பதில்  வந்­தது! வய­தி­லும் அனு­ப­வத்­தி­லும் பெரி­ய­வர்­க­ளுக்­குக் கொஞ்­சம் மரி­யாதை மிஞ்­சி­யி­ருந்த காலம் அது!

வாழ்க்­கை­யில் எப்­படி உயர்­வது என்ற கேள்­வி­யு­டன் பாக­வ­த­ரைச் சந்­திக்க வந்­தி­ருந்த சவுந்­த­ர­ரா­ஜன் மன­தில், பாக­வ­த­ரு­டன் ஐக்­கி­யம் ஆக­லாமா வேண்­டாமா என்ற கேள்வி பூதா­கா­ர­மாக நின்­றது.

‘‘சவுந்­த­ர­ராஜா... உனக்கு நல்ல யோகம் வந்­தி­ருக்­குப்பா... ஆனா, நீ என்­னமோ யோசனை பண்­ணிக்­கிட்­டி­ருக்கே.’’

பாக­வ­தரே தன்­னோடு வா என்று அழைத்­த­பின் யாரா­வது யோசிப்­பார்­களா என்­கிற தோர­ணை­யில் பேசி­னார், சாரங்­க­பாணி பாக­வ­தர் என்­ப­வர். பாக­வ­த­ரின்  குர­லின் ஒவ்­வொரு அசை­வை­யும் ரசித்து அவ­ரு­டன் ஐக்­கி­ய­மாகி இருந்த சவுந்­த­ர­ரா­ஜ­னுக்­கும் தன்­னு­டைய இலக்கு அரு­கில் வந்­து­விட்­டது போல் தோன்­றி­யது!

‘பணக்­கஷ்­டம் தீர்ந்து விடும். பாக­வ­த­ரு­டன் பாடிக்­கொண்டே நடிக்­க­லாம். புகழ் வரும்! வசதி வந்­து­வி­டும்!’ கற்­பனை குதி­ரைக்­குச் சிறகு முளைத்­துப் பறந்­து­கொண்­டி­ருந்­தது. இதெல்­லாம் நிஜம்­தானா? பாக­வ­தர்­தான்  என் வாழ்க்­கைக்கு விளக்­கேற்றி வைக்­கப்­போ­கி­றாரா?

நண்­ப­ரும் வழி­காட்­டி­யு­மான பாப்ஜி ஜனார்த்­த­னுக்­குத் தெரிந்­தால் நிச்­ச­யம் சந்­தோ­ஷப்­ப­டு­வார் என்று நினைத்­தார் சவுந்­த­ர­ரா­ஜன். என்ன செய்­ய­லாம் என்று முடி­வெ­டுக்க, பாப்ஜி ஜனார்த்­த­னின் வீட்­டுக்கு சவுந்­த­ர­ரா­ஜன் சென்­ற­போது, நல்ல வேளை­யாக வீட்­டில் இருந்­தார் பாப்ஜி.  ‘‘என்ன சவுந்­த­ர­ராஜா... என்ன விஷ­யம்... காலை­யி­லேயே வந்­தி­ருக்கே...’’ என்று கேட்­ட­வாறே, சூடான காபிக்கு வகை செய்­தார்.

சவுந்­த­ர­ரா­ஜன் விஷ­யத்­தைச் சொன்­ன­தும் பாப்­ஜி­யின் களை­யான முகத்­தில் சிந்­த­னை­யின் நிழல் படிந்­தது. ‘‘நம்ம சாரங்­க­பாணி பாக­வ­தர்­கிட்ட சொன்­னேன்... நீ பாக­வ­த­ரோடு போயி­டுன்னு சொல்­றார்.....’’ என்று சவுந்­த­ர­ரா­ஜன் இழுத்­தார்.

ஜனார்த்­த­னின் கூர்­மை­யான பார்வை சவுந்­த­ர­ரா­ஜனை ஊடு­ரு­வி­யது. ‘‘சாரங்­க­பாணி பாக­வ­தர் போன்னு சொல்­றார்... நீயும் போக­லாம்னு நினைக்­கி­றி­யாக்­கும் ’’ என்­றார் பாப்ஜி ஜனார்த்­தன்!

பிறகு ஒரு முடி­வுக்கு வந்­த­வ­ரா­கப் பேச ஆரம்­பித்­தார். ‘‘சரி...இப்ப நீ பாக­வ­தர் கூடப் போறேன்னு வச்­சுக்க... என்ன நடக்­கும்...? அவர் கச்­சே­ரி­யில பாடு­வாரு... அவர் படத்­தில நடிப்­பாரு. யார் உன்னை பாடச் சொல்­லப்­போ­றாங்க? நீ பாக­வ­தர் பாடுற பாட்­டுக்­க­ளைப் பாடிக்­கிட்­டி­ருப்பே... அவ்­வ­ள­வு­தானே? மத்­த­படி நீ அவ­ருக்கு கூஜா தூக்­கிக்­கிட்­டுப் போய்க்­கிட்­டி­ருப்பே. என்ன, பாக­வ­த­ரோடு இருக்­கேன்னு ஒரு பேர் இருக்­கும். ஒரு நாலு பெரிய ஆளு­க­ளோடு பழக முடி­யும். அவ்­வ­ள­வு­தான். நீ எப்போ முன்­னுக்கு வர்­றது? நீ முறையா சங்­கீ­தம் கத்­துக்­கிட்­டுப் பாடினா ஒரு காலத்­தில பாக­வ­த­ருக்கு மேலேயே ஏன் புகழ் பெறக்­கூ­டாது?’’

சவுந்­த­ர­ரா­ஜ­னின் கண்­கள் அகல விரிந்­தன. இந்த பாப்­ஜிக்கு தன் மேலே இத்­தனை நம்­பிக்­கையா! தன்­னா­லும் சொந்­தக் காலில்

நின்று ஒரு பெரிய பாட­கன் என்று புகழ் பெற முடி­யுமா? பாப்ஜி சொன்­ன­தெல்­லாம் நடக்­குமா? இல்லை, வானத்­தில் மின்­னிக்­கொண்­டி­ருக்­கிற நட்­சத்­தி­ர­மான தியா­க­ராஜ பாக­வ­த­ரோடு போகக்­கூ­டிய வாய்ப்­பும் நழுவி, ‘பழைய குருடி கத­வைத்­தி­றடி’ என்ற அன்­றாட அலைக்­க­ழிப்­புக்­க­ளோடு வாழ்க்கை தேங்­கிப்­போ­குமா?

பாப்ஜி ஜனார்த்­தன் சொல்­வது போல் நடக்­க­வேண்­டும் என்­றால் சங்­கீத சாத்­தி­ரத்தை சந்­தே­கத்­திற்கு இட­மில்­லா­மல் கற்க வேண்­டும். அதற்­கும் பணம் வேண்­டுமே.... சரி­யான சாப்­பாட்­டிற்கே வக்­கில்­லா­த­போது சங்­கீ­தம் கற்­ப­தற்கு சவுந்­த­ர­ரா­ஜன் எங்கே போவது?

நண்­பர் பாப்­ஜி­யின் மன­தில் ஒரு திட்­டம் அதற்­கும் தயா­ரா­னது.... சாரங்­க­பாணி பாக­வ­த­ரி­டம் சவுந்­த­ர­ரா­ஜன் முறைப்­படி சங்­கீ­தம் கற்­கத்­தொ­டங்­க­வேண்­டும் என்­ப­து­தான் அது. அப்­போது, ஒரு மாதத்­திற்கு சாரங்­க­பாணி பாக­வ­தர் எதிர்­பார்த்த சம்­ப­ளம் பத்து ரூபாய். அதை  பாப்ஜி ஜனார்த்­தன், பி.ஏ.பி.கே. அழ­கர்­சாமி, வி.எஸ்.எம்.மோகன்­ராம் (நிட்­டிங் கம்­பெனி), என்.எம்.என். சந்­தி­ர­சே­க­ரன் (ராயல் டாக்­கீஸ்) சுழற்சி முறை­யில் கொடுப்­பது என்று திட்­டம் தீட்­டிக் கொடுத்­தார் ஜனார்த்­தன். (ரூபாய்க்கு ஒன்­பது படி அரிசி விற்ற காலம் என்­றா­லும், இந்த  பிர­மு­கர்­க­ளுக்­குப் பத்து ரூபாய் பெரிய தொகை அல்ல. ஆனால், அவர்­கள் தனிப்­பட்ட  முறை­யில் தங்­கள் சமூ­கத்­தைச் சேர்ந்த ஒரு இளை­ஞனை முன்­னுக்­குக் கொண்­டு­வர அந்த நாளில் செய்த கூட்டு முயற்சி இன்­றைய ஸ்பான்­சர்­ஷிப்­பிற்­கெல்­லாம்  முன்­னோடி! குஜ­ராத்­தி­லி­ருந்து வந்­த­வர்­கள் ஆயிற்றே சவு­ராஷ்­டி­ரர்­கள்... வணிக முறை­கள் அவர்­க­ளுக்கு அத்­துப்­ப­டி­யாக இருப்­ப­தில் என்ன ஆச்­ச­ரி­யம்?) ஏற்­க­னவே சரளி வரிசை போன்ற அரிச்­சு­வ­டி­க­ளில் சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு பரிச்­ச­யம் இருந்­த­தால், இசை  பாடத்­தின் மிக முக்­கிய அம்­ச­மான வர்­ணத்­து­டன் ஒரு நல்ல நாள் பார்த்­துத் தொடங்­கி­னார் சாரங்­க­பாணி பாக­வ­தர்.

‘‘சங்­கீ­தத்­திலே ஏழு ஸ்வரங்­கள். ஆனால், இப்போ பார்க்க போற மோகன ராகத்­தில் அஞ்சு ஸ்வரங்­கள்­தான். ஆரோ­க­ணத்­திலே இருக்­கிற மாதிரி அவ­ரோ­க­ணத்­தி­லே­யும் அதே அஞ்சு ஸ்வரங்­கள்...சா... ரீ... கா.. . பா... தா... சா.... / சா...தா...பா... கா.. ரீ...சா’’.

படி­யில் ஏறி இறங்­கு­வ­தைப் போல் மோகன ராகம் ஏற்­கும் ஸ்வரங்­க­ளைப் பாடிக்­காட்­டி­னார் சாரங்­க­பாணி.

‘‘பாரில் உழன்று நொந்­தேன் நொந்­தேன் பாப வினை புரிந்­த­ழிந்­தேன் வந்­தேன் ’’ என்று தியா­க­ராஜ பாக­வ­தர் ‘அசோக்­கு­மா’­­­ரில் பாடி­யது சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு நினைவு வந்­தது.

‘மோகன ராகம் இரு­பத்தி எட்­டாம் மேள­கர்த்தா ராக­மான தீர­சங்­க­ரா­ப­ர­ணத்­தோட ஜன்­யம்... இதிலே ராம­நா­த­பு­ரம் சினி­வாச அய்­யங்­கார் பண்­ணி­யி­ருக்­கிற வர்­ணம்... ‘நின்னு கோரி உன்­னா­னுரா, நிகில லோக நாயகா’.  இது ஆதி தாளத்­திலே அமைஞ்­சி­ருக்கு... ஆதி தாளம்னா...எட்டு அட்­ச­ரம்...ஒரு தட்டு, ஒண்ணு ரெண்டு மூணுன்னு எண்ணி, இன்­னொரு தட்டு,  ஒரு திருப்­பல், ஒரு தட்டு, ஒரு திருப்­பல்... இது ஆதி தாளத்­தில ஒரு ஆவர்த்­தம்... இப்போ என் கூடப் பாடு...’’

சரி­யான ஸ்வரஸ்­தா­னங்­க­ளைப் பிடித்து, தாளக்­கட்­டோடு பாடும் திறமை சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு இருந்­தது.  பல்­லவி ஓர­ள­விற்கு கைவந்­த­தும்  ‘அடுத்த வகுப்­பில் அனு­பல்­ல­வி­யைப் பார்க்­க­லாம்’ என்­றார் சாரங்­க­பாணி பாக­வ­தர். ‘‘திரும்­ப­வும் அடுத்த வெள்­ளிக்­கி­ழமை இரவு வா... வாரத்­திற்கு ரெண்டு வகுப்­பு­கள் வச்­சுக்­க­லாம்,’’ என்­றார்.

சவு­ராஷ்­டிரா பள்­ளி­யில் இசை கற்­பித்­த­து­டன் சாரங்­க­பாணி பாக­வ­தர் ஒரு  ‘டைஸ்’ கடை­யும் (சாயக்­கடை) வைத்­தி­ருந்­தார்! அவ­ரது தின­சரி வேலை­கள் முடிய பத்து மணி­யா­கும். இரவு எல்­லோ­ரும் தூங்­கப்­போ­கும் வேளை­யில் சவுந்­த­ர­ரா­ஜ­னின் இசைப்­பா­டம் ஆரம்­ப­மா­கும்.  எப்­ப­டியோ சங்­கீ­தம் வந்­தால் சரி என்­பது சவுந்­த­ர­ரா­ஜ­னின் நினைப்­பாக இருந்­தது.  

இசை­யும் கலை­யும்­தான் வாழ்க்­கை­யாக அமை­யப்­போ­கி­றது என்ற எண்­ணம் வளர வளர, சவுந்­த­ர­ரா­ஜ­னின் தெய்வ பக்தி, முருக பெரு­மான் மீது அதி­க­மா­கத் திரும்­பி­யது. முருக பக்­தர்­கள் கலை உல­கில் அள­வற்ற புகழ் பெற்­றி­ருப்­ப­தாக சவுந்­த­ர­ரா­ஜன் நினைத்­தார்.

முரு­க­னையே பாடும் கே.பி.சுந்­த­ராம்­பா­ளின் பாட்டு, நாட­க­மே­டை­யி­லும் தேசிய இயக்­கத்­தி­லும்  திரை உல­கி­லும் ஓங்கி ஒலிக்­க­வில்­லையா? திருச்­செந்­தூர் கோயி­லில் முரு­கன் சன்­னி­தி­யில் தன் நாக்கை அறுத்­துக்­கொண்ட மாரி­யப்ப ஸ்வாமி­கள் பாட­க­ரா­க­வும் நடி­க­ரா­க­வும் பெயர் பெற­வில்­லையா?  வைணவ மர­பில் தோன்­றி­யி­ருந்­தா­லும் முரு­க­னையே இஷ்ட தெய்­வ­மாக சவுந்­த­ர­ரா­ஜன் வரித்­துக்­கொண்­டார்.  பாப்ஜி ஜனார்த்­தன் போன்ற நண்­ப­னும், அழகே வடி­வான தெய்­வ­மான முரு­க­னும் துணை நிற்க, கலை என்ற கோபு­ரத்­தில் தனக்­கும் ஒரு இடம் கிடைக்­கும் என்ற நம்­பிக்­கை­யில், சவுந்­த­ர­ரா­ஜன் இசைக்­க­லை­யில் விருத்­தி­ய­டைந்­தார். அவர் எடுத்த முடி­வு­கள்

சரி­யா­னவை என்­பதை வருங்­கா­லம்

காட்­டும்.

(தொட­ரும்)