சுவையான பால் பணியாரம் எளிமையாக சமைக்கலாம்

பதிவு செய்த நாள் : 09 மார்ச் 2020 10:00

தேவையான பொருள்கள்:

பச்சரிசி - 400 கிராம், உளுந்தம் பருப்பு - 300 கிராம், பால் - 1 லிட்டர், சர்க்கரை - 200 கிராம், எண்ணெய் - 500 கிராம், உப்பு - ஒரு சிட்டிகை, ஏலக்காய் - 10.

செய்முறை:

பச்சரிசியையும் உளுந்தம் பருப்பையும் சுத்தம் செய்து, இரண்டையும் ஒன்றாகத் தண்ணீரில் போட்டு ஊற வைக்கவேண்டும். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அவற்றை எடுத்துக் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து மிருதுவாக ஆட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாவு கெட்டியாக இருக்கவேண்டியது அவசியம். அதனால் மாவை ஆட்டும் போது அதிகமாகத் தண்ணீர் சேர்க்கக்கூடாது. மாவை எண்ணெயில் போடும்போது வெடிக்காமல் இருப்பதற்காக அதனுடன் ஒரு சிட்டிகை அளவு உப்பைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மாவை, நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றுங்கள். அது காய்ந்ததும் மாவு உருண்டைகளைப் போட்டுப் பொன்னிறமாக வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தை வைத்து அதில் ஒரு லிட்டர் பாலுடன் அரை லிட்டர் தண்ணீரைச் சேர்த்து ஊற்றுங்கள். பால் நன்றாகக் காய்ந்து வரும்போது சர்க்கரையைப் போட்டு, ஏலக்காய்களையும் தட்டிப்போடுங்கள்.

பால் சுண்டக் காய்ந்ததும் அதில் வறுத்தெடுத்த பணியாரங்களை இளஞ் சூட்டில் இருக்கும் போதே போடவேண்டும். பாலில் பணியாரங்கள் அதிக நேரம் ஊறக்கூடாது. பத்து நிமிடங்கள் ஊறினால் போதும். இந்தப் பால் பணியாரம் மிகவும் சுவையாக இருக்கும்.

பசும்பாலிற்குப் பதிலாகத் தேங்காயப் பாலைப் பயன்படுத்தியும் இதைத் தயாரிக்கலாம். அவ்வகையில் எவ்வாறு தயாரிக்கவேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

அதற்கு ஒரு முழுத் தேங்காய் வேண்டும். அதை உடைத்துத் தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள். அதை மிக்ஸியில் போட்டு அரைத்துப் பிழிந்து பால் எடுத்துக் கொள்ளுங்கள்.

தேங்காய்ப் பாலுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதில் சர்க்கரையைப் போட்டு, ஏலக்காயையும் தட்டி போடவேண்டும். பிறகு அதை அடுப்பில் வைத்து இலேசாகச் சூடாக்கி இறக்கிவைத்து, அதில் வறுத்து வைத்திருக்கும் பணியாரங்களைப் போட்டு, அவை ஊறியதும் பரிமாற வேண்டும்.