கச்சத்தீவு திருவிழா: ராமேஸ்வரத்தில் இருந்து பக்தர்கள் படகில் புறப்பட்டனர்

பதிவு செய்த நாள் : 06 மார்ச் 2020 12:11

ராமேஸ்வரம்,

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் இருந்து தமிழ்நாடு பக்தர்கள் படகில் கச்சத்தீவுக்கு புறப்பட்டனர்.இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இங்குள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படும். ராமேஸ்வரம் கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெடுந்தீவு பங்குத்தந்தை தேவாலயம் முன்புள்ள கொடிமரத்தில் அந்தோணியாரின் உருவம் பதித்த கொடியை இருநாட்டு மக்கள் முன்னிலையில் ஏற்றுகிறார். 

அதைத்தொடர்ந்து மரத்தாலான பெரிய சிலுவையை இருநாட்டு மக்களும் சுமந்துவர ஆலயத்தை சுற்றி 11 இடங்களில் சிலுவைப்பாதை திருப்பலி பூஜை மற்றும் பிரார்த்தனை நடைபெறுகிறது.

விழாவில் பங்கேற்பதற்காக சில மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பெயர் பதிவு நடைபெற்றது. இதில் ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்துகொள்ள பெயர் பதிவு செய்தனர்.

அவர்களில் பல்வேறு ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு ஆண்கள் 2,291 பேரும், பெண்கள் 492 பேரும், சிறுவர்-சிறுமிகள் 98 பேர் என மொத்தம் 2,881 பேருக்கு கச்சத்தீவு விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

இன்று மாலை கச்சத்தீவில் விழா தொடங்குவதை யொட்டி ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து அதிகாலை 6:00 மணி முதல் பொதுமக்கள் குவிந்தனர். அங்கு அவர்களது உடமைகள் சோதனை செய்யப்பட்டன. தொடர்ந்து பாதுகாப்பு கவச உடை வழங்கப்பட்டது.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் டிஐஜி ரூபேஸ்குமார் மீனா மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் ஆகியோர் பாதுகாப்பு தொடர்பாக  நேற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

பக்தர்கள் கச்சத்தீவுக்கு உணவு, தின்பண்டங்கள், குறிப்பிட்ட அளவு இந்திய பணம் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. போதை வஸ்துகள் கொண்டு செல்லக்கூடாது என எச்சரிக்கப்பட்டது.

1 படகில் 35 பேர் வீதம் 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கச்சத்தீவுக்கு புறப்பட்டு சென்றனர்.

கச்சத்தீவுக்கு செல்லும் பக்தர்களை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

கச்சத் தீவுக்கு செல்லும் விசைப்படகுகளுக்கு முன்னும், பின்னும் இந்திய கப்பல்கள் பாதுகாப்புக்கு சென்றன.

நாளை மதியம் ராமேஸ்வரம் பக்தர்கள் திரும்புகின்றனர்.

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவை யொட்டி 350-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.