கல்லூரி மாணவர்கள் பகுதி நேர வேலை பார்க்க அனுமதி: கேரள அரசு ஒப்புதல்

பதிவு செய்த நாள் : 05 மார்ச் 2020 19:00

திருவனந்தபுரம்,

கல்லூரி மாணவர்கள் பகுதி நேர வேலை பார்ப்பதற்கு ஊக்குவிக்கும் திட்டத்திற்கு கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 18 முதல் 25 வயதான மாணவர்கள் கல்வியுடன் தங்கள் திறமைகளை வளர்த்து கொள்ள பகுதி நேர வேலை பார்ப்பதற்கு ஊக்குவிக்கப்படுவார்கள்.

புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கேரள அரசு இந்தத் திட்டத்தைக் கொள்கை முடிவாக ஏற்றுக்கொண்டது என இன்று வெளியான அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி நிறுவன கவுன்சில்கள், தனியார் நிறுவனங்கள், பொதுப்பணி துறை ஆகியவற்றில் 90 நாட்களுக்கு பகுதி நேர பணி வழங்கப்படும்.

மாணவர்கள் படிக்கும் வயதிலேயே வேலை செய்யும் கலாச்சாரத்தை உருவாக்க இந்த திட்டம் உதவும்.

பகுதி நேர வேலை பார்க்கும் மாணவர்களுக்கு அவர்களுக்கு வேலை வழங்கும் நிறுவனமே ஊதியத்தை வழங்கும்.

இந்த திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 25 வயதான மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இதன் மூலம் மாணவர்கள் இளம் வயதிலேயே பணி அனுபவம், திறன் மேம்பாடு ஆகியவற்றை பெற முடியும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.