கொரோனா வைரஸ் எதிரொலி: டில்லியில் ஆரம்ப பள்ளிகள் மார்ச் 31ம் தேதி வரை மூட அரசு உத்தரவு

பதிவு செய்த நாள் : 05 மார்ச் 2020 18:48

புதுடில்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் டில்லி அரசு மாநிலத்தில் உள்ள ஆரம்பப் பள்ளிகள் அனைத்தையும் மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 30 ஆக உயர்ந்துள்ள நிலையில் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன.

தலைநகர் டில்லியில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக டில்லியில் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டில்லியில் உள்ள அனைத்து ஆரம்ப பள்ளிகளும் (அரசு பள்ளிகள், அரசு சார்ந்த பள்ளிகள், தனியார் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள் ) மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும் என டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.