குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பு மனுக்கள் விசாரணையில் பங்குகொள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையம் மனு

பதிவு செய்த நாள் : 04 மார்ச் 2020

புதுடெல்லி

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் கலந்துகொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் என ஐநா மனித உரிமைகள் ஆணையர் மனு செய்துள்ளார்.

அவரது மனுவின் விவரம்:

உச்சநீதிமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணையின் போது, சர்வதேச மனித உரிமைகள் சட்டம் அவற்றின் நிபந்தனைகள் தரநிலைகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியம். எனவே தான் மூன்றாவது தரப்பாக இந்த விசாரணையில் பங்கு கொள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 ஐநா மனித உரிமைகள் ஆணையம் உலக நாடுகளில் மனித உரிமைகளை மேம்படுத்தவும் மனித உரிமைகளை பாதுகாக்கவும் தேவையான இடங்களில் வாதாடவும் உலக நாடுகளினால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகும்.

 மற்ற நாடுகளில் மத அடிப்படையில் சிலர் தண்டனைக்கு ஆளாக கூடாது என்று குடியுரிமை சட்டத்திற்கு திருத்தம் இந்தியாவில் இயற்றப்பட்டு இருக்கிறது.

 இந்த கருத்து பாராட்டுவதற்கு உரியதாகும். ஆனால் இந்த நாடுகளிலும் இஸ்லாமியர்களின் பல பிரிவுகள் குடியுரிமை பெறுவதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். அஹமதியா, ஹஜரா, ஷியா இனத்தவர் மற்ற இனத்தவர்கள் பாதுகாக்கப்படுவது போல பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும் .

குடியுரிமை திருத்த சட்டம் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் தொடர்பான முக்கிய பிரச்சினைகளை எழுப்பி உள்ளது.

 அந்த பிரச்சனைகளை இடம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் விஷயத்தில் எப்படி பொருத்திப் பார்ப்பது என்றும் சிஏஏ சட்டம் குறிப்பிட்டுள்ளது. மேலும் சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உரிமை உண்டு.. ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்தவர் என்ற வகையில் பாரபட்சம் கூடாது என்ற விதிகள் இந்தியாவில் மனித உரிமைகள் காப்பு விதிகளுக்கு எப்படி பொருந்தி வருகிறது என்பது குறித்தும் பரிசீலிக்க வேண்டியுள்ளது.

 பல சர்வதேச சட்டங்கள், விதிகள் இங்கு பரிசீலனைக்கு உரியதாக அமைந்துள்ளன. அனைவருக்கும் சட்டத்தின்முன் சம பாதுகாப்பு என்ற விதியை இந்தியா போற்றி வந்துள்ளது.

 நாடுகள் தங்களுக்கான குடியேற்ற கொள்கைகளை வகுக்கலாம். இது அந்த நாடுகளின் உரிமை ஆகும்.

 மனித உரிமை மீறலின் போதும் அவர்கள் வசிக்கும் நாடுகளில் சீர்செய்ய முடியாத அளவுக்கு மனித இழப்புகள் ஏற்படும் என்ற நிலையிலும் இடம் பெயர்வோருக்கான நடவடிக்கைகளை வகுக்கவும் உரிமை உள்ளது.

 சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் அனைவருக்கும் சட்டத்தின் மூலம் சம பாதுகாப்பு என்ற அடிப்படை விதிகள், குடியுரிமை தொடர்பான நிர்வாக நடவடிக்கைகளில் மீறப் படக் கூடாது. இந்தியாவின் அரசியல்அமைப்புச்  சட்டத்துக்கு  குடியுரிமை திருத்த சட்டம் பொருந்தி வருகிறதா?

 சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு பொருந்தி வருகிறதா?  என்பதை மதிப்பிடுவதில்  இந்திய நீதிமன்றத்துக்கு உதவ ஐநா மனித உரிமைகள் ஆணையம் விரும்புகிறது .

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள், சர்வதேச மனித உரிமைகள் சட்டம், நிபந்தனைகள் ,தரநிலைகள் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்,

மேலும் எந்தெந்த இனங்களை இந்திய அரசு இந்தியாவுக்குள் வரவேற்கிறதோ அந்த இனங்களுக்கும் இந்த அடிப்படை நீதிகள் பின்பற்றப்படுவது அவசியமாகும். 

2011ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 58.5 லட்சம் பேர் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தோர் ஆக வந்துள்ளனர் என குறிப்பிடுகிறது இவர்களில் 4.7 லட்சம் பேர் 2002ம் ஆண்டு 2006 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவிற்குள் வந்தவர்கள் இவர்கள் அனைவரும் முறையான இடம்பெயர்ந்தவர்கள் ஆக கருத முடியுமா? அல்லது முறையற்ற இடம்பெயர்வு எனக்  கருதலாமா?  இதில் எந்த முடிவுக்கு வருகிறது என்று உறுதி செய்ய முடியவில்லை.

இனம், குடி. மதம். தேசம். இவை எதுவாக இருந்தாலும் குடிபெயர்வோருக்கு மனித உரிமைகள் உண்டு. அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் சார்பில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.


கட்டுரையாளர்: க. சந்தானம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation