தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்கியது

பதிவு செய்த நாள் : 02 மார்ச் 2020 12:36

சென்னை,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (மார்ச் 2), பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு துவங்கியது. தமிழ்நாட்டில் மொத்தம் 8 லட்சத்து, ஆயிரத்து 401 மாணவர்கள் பொதுத்தேர்வினை எழுதுகின்றனர்.

மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் 2020ம் ஆண்டு கல்வியாண்டிற்கான பிளஸ் 2 தேர்வுகளை இந்த ஆண்டு மாணவர்கள் எழுதுகின்றனர். அதன்படி, மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.

தேர்வுகள் காலை 10:00 மணிக்கு துவங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். 

வினாத்தாளை வாசிக்க கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தேர்வுக்கு செல்லும் முன்னதாக மாணவ, மாணவிகள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் ஆசி பெற்று தேர்வு மையத்திற்கு சென்றனர்.

மார்ச் 24ம் தேதி தேர்வுகள் முடிவடைகிறது. 

ஏப்ரல் 24-ம் தேதி ரிசல்ட் வெளியாகும். 

அதிக மதிப்பெண் பெறுபவர்கள் மேல்படிப்புக்கு செல்ல முடியும்.

மு.க. ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாடு, புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 வாழ்வில் அடுத்த கட்ட உயர்வுக்கான தேர்வை நம்பிக்கையுடன் சந்தித்து வெல்லவும், உங்கள் எதிர்காலக் கனவுகள் நிறைவேறவும் அன்பும், அக்கறையும் கொண்ட வாழ்த்துகள் என்றும் தனது டுவிட்டர் பதிவில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.