கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 219

பதிவு செய்த நாள் : 24 பிப்ரவரி 2020

நூற்றாண்டு காணும் கவிஞர் மருதகாசி – 1

சேலம் மாவட்­டத்­தில், தலை­வா­சல் அருகே ஆசி­யா­வின் மிகப் பிரம்­மாண்ட­ மான கால்­நடை ஆராய்ச்சி  பூங்­காவை அண்­மை­யில் திறந்து வைத்து பேசிய  முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி, ஒரு மிகப்­பெ­ரிய அறி­விப்பை செய்­தார். ‘தமிழ்­நாட்­டின் நெற்­க­ளஞ்­சி­ய­மாக வழி­வ­ழி­யா­கக் கரு­தப்­ப­டும் காவிரி டெல்டா பகு­தி­கள், பாது­காக்­கப்­பட்ட சிறப்பு வேளாண் மண்­ட­ல­மாக மாற்­றப்­ப­டும்’ என்­றார்.

தன்­னு­டைய அரசு விவ­சா­யி­க­ளுக்கு மிக­வும் ஆத­ர­வான அரசு என்று கூறிய முதல்­வர், இது­தொ­டர்­பாக ஒரு இலக்­கிய எடுத்­துக்­காட்டை கூறு­வ­து­போல்,

‘‘ஏர் முனைக்கு நேர் இங்கே எது­வுமே இல்லே

என்­றும் நம்ம வாழ்­விலே பஞ்­சமே இல்லே’’ என்ற வரி­களை குறிப்­பிட்­டார்.

முதல்­வர் முன்­வைத்த இந்த பாடல் வரி­களை இயற்­றி­ய­வர், திரைக்­க­வி­ஞர் மரு­த­காசி. நடி­கர் பி.எஸ்.வீரப்பா முதன்­மு­த­லாக தயா­ரித்த  ‘பிள்­ளைக்­கனி அமுது’ என்ற திரைப்­ப­டத்­திற்­காக மரு­த­காசி அறு­பது வரு­டங்­க­ளுக்கு முன் எழு­திய இந்­தப் பாடலை, கே.வி. மகா­தே­வ­னின் இசை­ய­மைப்­பில், டி.எம்.எஸ். பாடி­யி­ருந்­தார். படம் வெளி­வந்த கால­கட்­டத்­தில், இந்த பாடல் மிக­வும் நன்­றாக இருக்­கி­றது என்று ஒரு பிர­பல பத்­தி­ரிகை போற்­றி­யது. முதல் முறை கேட்­ட­துமே மன­தைக் கவர்ந்த மரு­த­கா­சி­யின் பாடல், சிரஞ்­சீவி பாட­லாக அமைந்­து­விட்­டது. திரைப்­பா­டல் இலக்­கி­ய­மாக மாறி­விட்­டது. சில தலை­மு­றை­க­ளுக்­குப்­பின் வந்த மாநி­லத்­தின் முதல்­வர் அதை மேற்­கோள் காட்­டும் அள­வுக்கு அது உயர்ந்து நிற்­கி­றது.

‘உழு­துண்டு வாழ்­வாரே வாழ்­வார்’ என்­றும், ‘சுழன்­றும் ஏர்ப்­பின்­னது உல­கம்’ என்­றும், திருக்­கு­றள் தொடங்கி வழி வழி­யாக வந்த தமிழ் நூல்­கள் உயிர்­க­ளுக்கு உண­வ­ளிக்­கும் பயிர்த்­தொ­ழிலை போற்றி வந்­தி­ருக்­கின்­றன என்­பது உண்­மை­தான்.

ஆனால், ‘‘பொன்னு விளை­யிற பூமி­யடா,

விவ­சா­யத்தை பொறுப்பா கவ­னிச்சு செய்­வோ­மடா’’ என்று தொடங்­கும் ‘மக்­க­ளைப் பெற்ற மக­ராசி’ படப்­பா­ட­லில் ஒரு புதுமை இருந்­தது. தமிழ்­நாட்­டின் பல ஊர்­க­ளின் பெயர்­களை இணைத்து, விவ­சா­யத் தொழி­லின் மேன்­மையை மரு­த­காசி முன்­வைத்­தார்.  பாடல் வெளி­வந்­தது முதல் இன்று வரை, விரும்­பிக் கேட்­கப்­ப­டும் அள­வில் புதுமை குன்­றா­மல் விளங்­கு­கி­றது. ஏனென்­றால், மரு­த­காசி தன்­னு­டைய

திரைப்­பாட்­டில் வளர்த்­தது, பணப்­ப­யிர் இல்லை, பண்­பாட்­டுப் பயிர்!

‘‘ மணப்­பாறை மாடு கட்டி

மாய­வ­ரம் ஏரு பூட்டி

வயக்­காட்டை உழு­து­போடு சின்­ன­கண்ணு

பசுந்­த­ழை­யப்­போட்டு பாடு­படு செல்­லக்­கண்ணு

ஆத்­தூரு கிச்­சிலி சம்பா

பாத்து வாங்கி வெதை வெதைச்சு

நாத்­தெப் பறிச்சு நட்­டுப் போடு சின்­னக்­கண்ணு

தண்­ணியை ஏத்­தம் புடிச்சு எறச்­சுப் போடு

செல்­லக்­கண்ணு’’ என்று 1957ல் பாடல் குறிப்­பி­டும் விவ­சாய நடை­மு­றை­கள், இன்று எத்­த­னையோ மாறி­விட்­டன!

இன்று மாய­வ­ரம் இருக்­கி­றது. அதன் ஏரு தேவைப்­ப­ட­வில்லை. ஏரு பூட்டி வயக்­காட்டை உழுது போடும் காலம் மாறி­விட்­டது. வேலைக்கு ஆட்­கள் கிடைப்­ப­தில்லை. வயல்­களை உழு­வ­தற்கு டிராக்­டர்­கள் வந்­து­விட்­டன. நெல்­லில் எத்­த­னையோ புது ரகங்­கள் வந்­து­விட்­டன. ஏற்­றம் இறைக்­கும் வேலை­யெல்­லாம் போர் பம்­புக்கு மாறி, பிறகு விஷ­யம் சொட்டு நீர் பாச­னம் வரை வளர்ந்­து­விட்­டது!

‘மணப்­பாறை’ பாடல் உரு­வாக்­கப்­பட்ட கால­கட்­டத்­தில், தமிழ்­நாட்­டின் இரு­பது சத­வீத பகுதி  நகர்­ம­ய­மாக்­க­லுக்கு உட்­பட்­டி­ருந்­தது. இன்­றைக்கு தமிழ்­நாட்­டின் சுமார் ஐம்­பது சத­வீ­தப்­ப­குதி, நகர்­ம­யம் ஆகி­விட்­டது. பல ஊர்­க­ளில் விவ­சாய நிலங்­களை பிளாட் போட்டு குடி­யி­ருப்­புப் பகு­தி­க­ளாக விற்­றுத் தீர்த்­தி­ருக்­கி­றார்­கள்.

விவ­சா­யத் தொழிலை புதிய கண்­ணோட்­டத்­தில் கண்டு அதன் வழி­மு­றை­களை நவீ­னப்­ப­டுத்­த­வேண்­டிய கால­கட்­டத்­தி­லும், உழ­வுப்­பா­டல் பாடி­ய­வர்­க­ளில் திரை உல­கில் முதல் இடத்­தில் இருக்­கும் பாட­லா­சி­ரி­ய­ராக மரு­த­காசி  இருக்­கி­றார். அத­னால்­தான் முதல்­வ­ருக்கு அவ­ரு­டைய வரி­கள் நினை­வுக்கு வந்­தி­ருக்­கின்­றன.  நூற்­றாண்டு காணும் கவி­ஞர் மரு­த­கா­சி­யின் பாட்டு, இரண்­டா­யி­ர­மாம் ஆண்­டைத் தாண்டி, இந்த இரு­பத்தி ஓராம்  நூற்­றாண்டு காணும் தமிழ் உல­குக்­குத் தேவைப் பட்­டி­ருக்­கி­றது.

வேடிக்கை என்­ன­வென்­றால் பயிர்த்­தொ­ழி­லுக்­குப் பள்ளு பாடிய இந்த பாவ­ல­ரின் தந்தை அய்­யம்­பெ­ரு­மாள் உடை­யார்,  சிறு­வ­ய­தி­லேயே தனது  கிரா­ம­மான மேலக்­கு­டிக்­காட்டை விட்டு பணம் சம்­பா­திக்க  சிங்­கப்­பூர் சென்­ற­வர்!  சென்ற நூற்­றாண்­டின் தொடக்­கத்­தி­லேயே அவர் தன்னை சிங்­கப்­பூர்  என்ற முன்­னோடி நக­ரத்­தின் குடி­ம­கன் ஆக்­கிக்­கொண்­டு­விட்­டார்!

வாலிப வய­தைத் தாண்டி ஊர் திரும்­பி­ய­வ­ருக்­குக் கால்­கட்­டுப்­போட்­டால்­தான் சரி­வ­ரும், ஓர் இடத்­தில் தங்­கு­வார் என்று முடிவு செய்து, மாமா­வின் மகளை  மணம் செய்­து­வைத்­தார்­கள்.

முத­லில் பிறந்த இரண்டு ஆண் குழந்­தை­கள் இறந்து போன­பின் பிறந்த  மரு­த­கா­சி­யின் பிறப்­பும், வளர்ப்­பும் பெற்­றோ­ரின் கூடு­த­லான கரி­ச­னத்­திற்கு உள்­ளா­ன­தில் வியப்­பில்லை. இந்த பிள்­ளை­யார் சுழி­யின் கெத்து, மரு­த­கா­சி­யின் வாழ்க்கை முழு­தும் தொடர்ந்­த­தா­கத்­தான் தெரி­கி­றது. காசு, பணம், வாய்ப்பு வசதி என்­ப­தை­யெல்­லாம் பெரி­தாக நினைக்­கா­மல், தன் இஷ்­டப்­ப­டி­யும் ஆசைப்­பட்ட விதத்­தி­லும் தொடர்ந்து வாழ்ந்­தி­ருக்­கி­றார்.

நவீன துறை­மு­கப் பட்­டி­ன­மா­க­வும் கிழக்­கிந்­திய கம்­பெ­னி­யின் வர்த்­த­கக் கேந்­தி­ர­மா­க­வும் விளங்­கிய சிங்­கப்­பூ­ரில் வேலை செய்­தி­ருந்த அய்­யம்­பெ­ரு­மா­ளுக்கு கல்­வி­யின் பயன் தெரிந்­தி­ருந்­தால், மரு­த­கா­சியை கும்­ப­கோ­ணத்­திற்கு அனுப்­பிப் படிக்­க­வைத்­தார். அந்­தக் கால­கட்­டத்­தில், சென்­னைக்கு இணை­யான கல்­வித் தர­மும் நல்ல கலா­சார சூழ­லும் வாய்த்­தி­ருந்த கும்­ப­கோ­ணத்­தில், மரு­த­கா­சிக்­குத் தமிழ் ஆசி­ரி­யர் பாப­நா­சம் ராஜ­கோ­பால அய்­ய­ரின் தொடர்பு கிடைத்­தது.  அவ­ரி­டம் தமிழ் இலக்­கி­யம் கற்­றார் மரு­த­காசி என்­ப­தோடு,  முப்­ப­து­க­ளின் இரண்­டாம் பாதி­யி­லி­ருந்து திரை உல­கில் பாட­லா­சி­ரி­ய­ரா­கப் ஐய­ரும் புகழ்­பெற்­றார் என்­பது மரு­த­கா­சிக்கு ஒரு வழி­காட்­டு­த­லாக அமைந்­தது.

கலப்­பை­யில் ஒரு கை, கவி­தை­யில் ஒரு கை என்று நெல்­லேர் உழ­வும், சொல்­லேர் உழ­வும் மரு­த­கா­சி­யி­டம்  கைகோர்த்­தன. ‘வாடிய பயி­ரைக் கண்­ட­போது வாடி­னேன்’ என்­றார் வள்­ள­லார். ‘வாடிய பயி­ரைக் கண்­ட­போது பாடி­னேன்’ என்­றார் மரு­த­காசி! காதல் விர­கத்­தின் சோகம், மழை­யின்றி வாடும் பயி­ரி­லி­ருந்து அவ­ருக்­குக் கிடைத்­தது, ‘பொன்­முடி’ படத்­தில்!  ‘வான்­ம­ழை­யின்றி வாடி­டும் பயிர்­போல், நான் உனைப்­பி­ரிந்தே வாடு­கி­றேன்’  என்று மரு­த­காசி தந்த வரி­க­ளின் துணைக்­கொண்டு மது­ர­மா­கப் பாடி­னார், படத்­தின் நாய­கி­யான மாது­ரி­தேவி!

ஆரம்­பத்­தில் மெட்­டுக்கு எழுத கண்­ண­தா­சன் கூட மிக­வும் கஷ்­டப்­பட்­டார். பிற­கு­தான் அதில் ஒரு அசாத்­திய தேர்ச்­சி­யைப் பெற்­றார். ஆனால் மெட்­டுக்கு அட்­ச­ரம் பிச­கா­மல் எழு­து­வது மரு­த­கா­சிக்கு இயல்­பா­கவே வந்­தது. நாட­கங்­க­ளுக்­குப் பாடல்­கள் எழு­திக்­கொண்­டி­ருந்­த­வர், ‘மாடர்ன் தியேட்­டர்­சுக்கு வாருங்­கள்’ என்று வர­வேற்பு பெற்­றார் என்­றால், மெட்­டுக்கு எழு­து­வ­தில் அவ­ருக்­கி­ருந்த அசாத்­திய ஆற்­றல்­தான் கார­ணம். தமிழ் சினி­மா­வின் முதல் வண்­ணப்­ப­ட­மான ‘அலி­பா­பா­வும் நாற்­பது திரு­டர்­க­ளும்’ படத்­தில் இந்த நிலை உச்­சத்­தைத் தொட்­டது. இசை­ய­மைப்­பா­ளர்­கள் எஸ்.என்.திரி­பா­டி­யும், சித்­ர­குப்­தும் அமைத்த இந்தி பாடல் மெட்­டுக்­க­ளுக்கு அச்சு அச­லான சிறந்த தமிழ்ப் பாடல்­கள் எழு­தி­னார் மரு­த­காசி!  இப்­ப­டித்­தான் ஷம்­ஸத் பேகம் பாடிய ‘தேகோ ஜி சாந்த் நிகலா’, பானு­ம­தி­யின் குர­லில் ‘அழ­கான பொண்ணு நான்’ ஆனது.

ஐம்­ப­து­க­ளின் தமிழ் திரைப்­ப­டங்­க­ளில் பொது­வா­கவே பாடல்­கள் அதி­கம் இருந்­தன. இரண்டு மூன்று பாட­லா­சி­ரி­யர்­கள் எழு­தி­னார்­கள். மரு­த­கா­சிக்­கும் அவ­ரு­டன் எழு­திய உடு­மலை நாரா­யண கவி, தஞ்சை ராமய்­யா­தாஸ் முத­லிய  பாட­லா­சி­ரி­யர்­கள் ­மத்­தி­யில் இணக்­கம் இருந்­தது.

தேவி நாடக சபை­யில் மரு­த­கா­சிக்கு தன்னை விட ஆறு வயது  மூத்­த­வ­ரான கா.மு.ஷெரீப்­பு­டன் நட்பு ஏற்­பட்­ட­தால், ‘மந்­தி­ரி­கு­மா­ரி’­­யில் எழுத இரு­வ­ருமே சேலம் சென்­றார்­கள்.  இரு­வ­ரும் பாடல்­கள் எழு­தி­னார்­கள்.  படத்­தின் டைட்­டில்­க­ளில், பாட­லா­சி­ரி­யர்­கள் வரி­சை­யில் ஷெரீப்­பின் பெய­ருக்கு அடுத்­த­ப­டி­யாக மரு­த­கா­சி­யின் பெயர் இடம்­பெற்­றது. ஆனால், படத்­தில் மிகப்­பெ­ரிய வெற்றி அடைந்த, ‘வாராய் நீ வாராய்’, ‘உல­வும் தென்­றல் காற்­றி­னிலே’ போன்ற பாடல்­களை மரு­த­கா­சி­தான் எழு­தி­னார். ஷெரீப்­புக்கு வேறு படங்­க­ளில் வெற்­றிப்­பா­டல்­கள் அமைந்­தன. ஆனால் ஷெரீப்­பின் கவ­னம், அவர் சார்ந்­தி­ருந்த தமிழ் அரசு கழ­கத்­தின் கட்­சிப்­பணி, அது­தொ­டர்­பான மேடை பேச்சு, பிர­சா­ரப் பத்­தி­ரி­கை­க­ளில் ஆசி­ரி­யர் வேலை என்று பிள­வு­பட்­டி­ருந்­தது. மரு­த­கா­சியை  பொறுத்­த­வரை, பாட்­டெ­ழு­து­வ­தைத் தவிர வச­னம் எழு­தும் வேலைக்­குக் கூட அவர் போக விரும்­ப­வில்லை.

இத­னால்­தான், ஐம்­ப­து­க­ளின் திரை இசை சக்­க­ர­வர்த்­தி­யாக இருந்த ஜி.ராம­நா­த­னின் சங்­கீத ராஜ்­ஜி­யத்­தில் மரு­த­காசி பிர­தான பாட­லா­சி­ரி­ய­ராக இருந்­தார். ‘சுந்­தரி சவுந்­தரி நிரந்­த­ரியே’ என்ற குறிஞ்சி ராகப் பாட­லும் (தூக்­குத்­தூக்கி), ‘வசந்த முல்லை போலே’   என்ற சாரு­கேசி உருப்­ப­டி­யும் (சாரங்­க­தரா), ‘முல்லை மலர் மேலே’ என்ற கானடா ராகப் பாட­லும் (உத்­த­ம­புத்­தி­ரன்), ஜி.ஆர்.-மரு­த­காசி இணை­வில் பளிச்­சிட்ட சங்­கீத ஜோதி­யின் சிறு கீற்­று­கள்­தான்.

கே.வி.மகா­தே­வ­னுக்கு மரு­த­காசி ‘மாமா’, மரு­த­கா­சிக்கு மகா­தே­வன் ‘மாமா’ என்­கிற அள­வில் அவர்­க­ளின் உற­வு­முறை மிக நெருக்­கம். ஐம்­ப­து­க­ளில் வளர்ந்த  ஏ.பி.நாக­ர­ஜ­னின் யூனிட்­டில் இரு­வ­ரும் இரு பெரும் தூண்­கள். ஆனால் மரு­த­கா­சி­யும் மகா­தே­வ­னும் ஏ.பி.என்­னின் தூண்­டு­த­லால் ‘அல்லி பெற்ற பிள்ளை’ என்ற படத்­தில் தயா­ரிப்­பா­ளர்­கள் ஆன போது, அவர்­கள் இரு­வ­ரை­யும் ஒரு பெரிய சோதனை சூழ்ந்து கொண்­டது. படத்­தின் ஏரி­யாக்­களை விநி­யோக முறை­யில் விட்­ட­தால், படம் கண்ட தோல்­வியை இரு­வ­ரும் தோளில் சுமக்க நேர்ந்­தது.

பெய­ர­ள­வில் படத்­திற்கு இன்­னும் இரண்டு தயா­ரிப்­பா­ளர்­கள் இருந்­தார்­கள். அவர்­கள், இசை­ய­மைப்­பா­ளர் கே.வி.மகா­தே­வ­னின் நெருங்­கிய நண்­ப­ரும்  ஆர்­கெஸ்­டிரா இன்-­­சார்­ஜு­மான வய­லின் மகா­தே­வன் மற்­றும் வி.கே.ராம­சா­மி­யின் தம்­பி­யான முத்­து­ரா­ம­லிங்­கம். ஆனால் பணத்­தைக் கறக்க நினைத்த  வட்­டிக்­கா­ரர்­க­ளுக்கு இசை­ய­மைப்­பா­ள­ரும் இசைப்­பா­டல்­கள் எழு­து­ப­வ­ரும்­தான் பசை­யுள்ள பார்ட்­டி­கள் என்று தெரி­யும். அவர்­கள் இந்த இரு­வ­ரை­யும் சக்­கை­யா­கப் பிழிந்­து­விட்­டார்­கள்.

விஸ்­வ­நா­தன்- ராம­மூர்த்தி இரட்­டை­ய­ரில் விஸ்­வ­நா­தன் ஆரம்­பத்­தில் மரு­த­கா­சி­யின் செல்­லத் தம்­பி­போல் இருந்­தார். மரு­த­காசி ஏற்­க­னவே கோலோச்­சி­யி­ருந்த மாடர்ன் தியேட்­டர்­சில் இரு­வ­ருக்­கு­மான சந்­திப்பு, இரட்­டை­யர் இசை­ய­மைத்த ‘சுகம் எங்கே’ (1954) படத்­தில்,‘செந்­த­மிழ் நாட்­டுச் சோலை­யிலே, சிந்­துப் பாடித்­தி­ரி­யும் பைங்­கி­ளியே’ என்ற சுக­மான பாட­லு­டன் வளர்ந்­தது.

ஐம்­ப­து­க­ளில் விஸ்­வ­நா­தன் – ராம­மூர்த்­திக்கு ஒரு சில படங்­கள்­தான் கிடைத்­தன. அவற்­றில் ‘போர்ட்­டர் கந்­தன்’, ‘தெனா­லி­ரா­மன்’, ‘பாச­வலை’, ‘பக்த மார்க்­கண்­டேயா’, ‘புதை­யல்’ என்று தொடர்ந்து பாடல்­கள் எழு­திக் கொண்­டி­ருந்­தார்

மரு­த­காசி.

‘பாகப்­பி­ரி­வி­னை’­­யில், ‘ஒற்­று­மை­யாய் வாழ்­வ­தாலே உண்டு நன்­மையே ’ என்று மரு­க­தாசி எழுத, விஸ்­வ­நா­தன் – ராம­மூர்த்தி இசை­ய­மைத்து, சீர்­காழி கோவிந்­த­ரா­ஜன் பிர­தா­ன­மா­கப் பாடி­னார்.  பாடல்  ஹிட்­டா­னது. ஆனால் இந்த கால­கட்­டத்­தில், விஸ்­வ­நா­த­னுக்­கும், மரு­த­கா­சிக்­கும்   இடையே ஒற்­றுமை உணர்வு முறிந்­து­விட்­டது! சில­ரு­டைய தனிப்­பட்ட வாழ்க்­கை­யின் பக்­கங்­கள் அவர்­க­ளு­டைய திரை­யு­லக செயல்­பா­டு­க­ளு­டன் மோதும் போது, இத்­த­கைய மன­மு­றி­வு­கள் நடப்­பது சக­ஜம்!

பாட்டு, பாட்டு, பாட்டு என்று பன்­னி­ரண்டு வரு­டங்­கள் திரை உலகை வட்­ட­மிட்­டுக்­கொண்­டி­ருந்த மரு­த­காசி,  ‘அல்லி பெற்ற பிள்ளை ’ ஏற்­ப­டுத்­திய கடன் சுமை­களை தாங்க முடி­யா­மல்,   பாட்டை நிப்­பாட்டு என்று கூறி­விட்டு, தான் இள­மை­யி­லி­ருந்து காத­லித்த கொள்­ளி­டக்­க­ரை­யின் கழ­னி­க­ளுக்­குத் திரும்­பி­வி­ட­வேண்­டும் என்ற மன­நி­லை­யில் இருந்­தார்!    

அப்­போது ஒரு நாள், 5, பிளே­கி­ர­ வுண்ட் சாலை, நுங்­கம்­பாக்­கம் லேக் ஏரி­யா­வில் இருந்த மரு­த­கா­சி­யின் வீட்­டுக்கு அவரை சந்­திக்க கண்­ண­தா­சன் வந்து சேர்ந்­தார்! அந்த சந்­திப்பு, ஊருக்­குக் கிளம்­பி­விட வேண்­டும் என்ற மரு­த­கா­சி­யின் முடிவை இன்­னும் வலுப்­ப­டுத்­தி­யது!

(தொட­ரும்)