உத்திரபிரதேச அரசு ஒதுக்கிய 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம் ஏற்றது

பதிவு செய்த நாள் : 22 பிப்ரவரி 2020 16:03

லக்னோ,

மசூதி கட்டுவதற்காக அயோத்திக்கு அருகே உத்தரபிரதேச அரசு கடந்த 5ம் தேதி ஒதுக்கிய 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம் வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டது.

அயோத்தியில் ராம ஜென்ம பூமி என்றழைக்கப்படும் சர்ச்சைக்குரிய 2.27 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், கடந்த நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அதேசமயம் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு பதிலாக புதிய மசூதி கட்டுவதற்காக சன்னி வக்பு வாரியத்துக்கு அயோத்தியில் வேறொரு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தருமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவுபடி சன்னி வக்பு வாரியத்திற்கான நிலத்தை தேர்வு செய்யும்படி உத்தரபிரதேச அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி, அயோத்தி மாவட்டம் சோஹாவல் தாலுகா தன்னிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச அரசு கடந்த 5ம் தேதி ஒதுக்கி கொடுத்தது.

இந்த இடம், அயோத்தியில் இருந்து 20 கி.மீ. தொலைவில், அயோத்தி - லக்னோ நெடுஞ்சாலையில் உள்ளது. அந்த நிலத்தை ஒதுக்கியதற்கான கடிதத்தை சன்னி வக்பு வாரியத்திடம் உத்தரபிரதேச அரசு அளித்தது.

இதற்கிடையில் அந்த நிலத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று சன்னி வக்பு வாரியத்தை சில அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

நிலத்தை ஏற்றது சன்னி வக்பு வாரியம் 

இந்நிலையில், திடீர் திருப்பமாக, அந்த 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொள்வதாக சன்னி வக்பு வாரியம் நேற்று அறிவித்தது.

இதுகுறித்து சன்னி வக்பு வாரியம் வெளியிட்ட செய்தியின் விவரம்:

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம் என்று ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம். அதனால்தான் நாங்கள் சீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை. எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

எனவே, நிலத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர, எங்களுக்கு வேறு வழி இல்லை. நிலத்தை ஏற்காவிட்டால், அது நீதிமன்ற அவமதிப்பாகி விடும்.

தற்போது வழங்கப்பட்டுள்ள 5 ஏக்கர் நிலத்தில் பள்ளி, மருத்துவமனை கட்ட வேண்டும் என பல்வேறு யோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே அந்த நிலத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து வரும் 24ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என சன்னி வக்பு வாரியம் தெரிவித்துள்ளது.