கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 218

பதிவு செய்த நாள் : 17 பிப்ரவரி 2020

‘எங்கிருந்தோ வந்தாள்’ இங்கிருந்து வந்தாள்!

அண்­மை­யில், இரண்டு தமிழ் படங்­கள் ஒரே நாளில் வெளி­யா­கும்  நிலை வந்­த­போது,  தயா­ரிப்­பா­ளர்­கள் சங்­கம் பேச்­சு­வார்த்தை நடத்தி இந்த போட்­டி­யைத் தவிர்த்­தது. ஒரு ஆண்­டுக்கு இரு­நூறு படங்­க­ளுக்கு மேல்  வரு­கிற தற்­கா­லத்­தில், தோல்வி பயத்­தால் இப்­படி செய்­ய­வேண்­டிய நிலை  வந்­து­விட்­டது.

மேற்­படி சம்­ப­வத்­தின் போது, சிவா­ஜிக்­கும் அவரை வைத்­துப் பல நல்ல படங்­களை எடுத்த பி.ஆர்.பந்­து­லு­வுக்­கும் இடை­வெளி வந்­ததே இத்­த­கைய ஒரு திருப்­பத்­தால்­தான் என்­பது நினை­வுக்கு வந்­தது!

 சிவா­ஜியை நாய­க­ரா­கக்­கொண்ட  ‘முர­டன் முத்­து’­­வைப் பந்­துலு தயா­ரித்து முடித்­த­போது, சிவா­ஜி­யின்  நூறா­வது பட­மாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்த ‘நவ­ராத்­தி­ரி’க்­கும் அதற்­கும் இடை­வெளி விடுங்­கள் என்று பந்­துலு கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டார்.

ஆனால், பந்­துலு அதை ஏற்­க­வில்லை. சிவா­ஜி­யின் விருப்­பத்­திற்கு மாறாக, ‘நவ­ராத்­திரி’ வந்த 11.03.1964 அன்றே ‘முர­டன் முத்­து’வை வெளி­யிட்­டார். அதன் பிறகு அவர் நிரந்­த­ர­மாக சிவாஜி அணி­யி­லி­ருந்து வெளி­வ­ர­வேண்­டி­ய­தா­கி­விட்­டது!

ஆனால், அதன் பிறகு எம்.ஜி.ஆர் பந்­து­லுவை இறுக அணைத்­துக் கொண்டு அவ­ரு­டைய  தயா­ரிப்­பில் தொடர்ந்து நடித்­தார். பந்­து­லு­வின் கடைசி பட­மும் எம்.ஜி.ஆரின் கடைசி பட­மும் முன்­ன­வ­ரின் தயா­ரிப்பு மற்­றும் இயக்­கத்­தில் பின்­ன­வர் நடித்த ‘மது­ரையை மீட்ட சுந்­த­ர­பாண்­டி­யன்’ என்று அமைந்­து­போ­னது.

‘முர­டன் முத்து’, ‘நவ­ராத்­திரி’ என்­றில்­லா­மல், சிவா­ஜி­யின் இடை­வி­டாத நடிப்­பில் தொடர்ந்து பல படங்­கள் வந்­து­கொண்­டி­ருந்த கால­கட்­டங்­க­ளில் அவர் நடித்த இரு படங்­கள் ஒரே நாளில் வரக்­கூ­டிய  நிகழ்­வு­கள் நடந்­து­கொண்­டு­தான் இருந்­தன.

சிவா­ஜி­யை­யும் எம்.ஜி.ஆரை­யும் இணைத்து டி.ஆர். ராமண்ணா எடுத்த ‘கூண்­டுக்­கி­ளி’­­யும் சிவாஜி முக்­கிய வேடத்­தில் நடித்த அருணா பிலிம்­சின் ‘தூக்­குத்­தூக்­கி’­­யும் 1954ம் ஆண்­டின் ஆகஸ்ட் 26ம் தேதி வெளி­வந்­தன. ‘கூண்­டுக்­கிளி’ மண்­ணைக்­கவ்­வத் ‘தூக்­குத்­தூக்கி’  ஒரே தூக்­காய் தூக்­கி­யது! ஆனால், இந்த இரண்டு படங்­க­ளும் ஒரே நாளில் வந்து வெவ்­வேறு முடி­வு­களை சந்­தித்த விஷ­யம், ராமண்­ணாவை சிந்­திக்க வைத்­தது.

‘கூண்­டுக்­கி­ளி’­­யில் சமூக யதார்த்­தங்­களை அவர் காட்­டி­யி­ருந்­தார்.   யதார்த்­தங்­க­ளி­லி­ருந்து விடு­பட நினைத்த மக்­கள் அதைப் புறக்­க­ணித்­து­விட்­டார்­கள். மாறாக, அதே நாளில் வந்த ‘தூக்­குத்­தூக்கி’ இரு­பது வரு­டங்­க­ளுக்கு முன் வந்த ஒரு மசாலா படத்­திற்கு மறு­வ­டி­வம் கொடுத்து, மக­சூலை அள்­ளி­யது. இதே பாணி­யில் ராமண்ணா செயல்­பட நினைத்­தார்.   வி.ஏ. செல்­லப்பா நடித்த பழைய ‘குலே­ப­கா­வ­லி’யை  எம்.ஜி.ஆரை வைத்து  பொழு­து­போக்­குப் பட­மாக எடுத்­தார். வெற்­றிக்­கனி  கிட்­டி­யது. காசு பணம் கொட்­டி­யது.

‘கூண்­டுக்­கி­ளி’­­யும்  ‘தூக்­குத்­தூக்­கி’­­யும் ஒரே நாளில் ஜனித்­த­தைப் போல, 1952ல் தொடங்­கிய சிவா­ஜி­யின் நீண்ட நடிப்பு அத்­தி­யா­யத்­தில் பல இரட்­டைக் குழந்­தை­கள் பிறந்­தி­ருக்­கின்­றன! சிவா­ஜி­யின் வேகத்­திற்­கும் உழைப்­பிற்­கும் கிடைத்த வெற்­றிக்கு சான்­று­கள்­தான் அவை.

நவம்­பர் 13, 1955ல் வந்த இரு சிவாஜி படங்­கள், ‘கோடீஸ்­வ­ரன்’,  ‘கள்­வ­னின் காதலி’. அந்த வருட தீபா­வளி திங்­கட்­கி­ழ­மை­யில் வந்­த­தால், அதற்கு முந்­தைய வெள்­ளிக்­கி­ழ­மை­யில் ரிலீஸ் ஆன இந்த  படங்­கள் (புதுப்­ப­டங்­கள் வெள்­ளிக்­கி­ழமை வரு­வது ஒரு பழக்­க­மாக இருந்­தது).

அடுத்த ஆண்­டில் பொங்­கல் பரி­சு­க­ளாக வந்த படங்­கள், ‘நான் பெற்ற செல்­வம்’, ‘நல்ல வீடு’.

சில ஆண்­டு­கள், மாதம் ஒரு படம் என்­கிற முறை­யில் சிவா­ஜி­யின் படங்­கள் வெளி­யி­டப்­பட்டு வந்­தன. மீண்­டும் 1960ல் தீபா­வளி பரி­சாக டுவின்ஸ் பிறந்­தன:  அவை, ‘பாவை விளக்கு’, ‘பெற்ற மனம்’. இரண்டு படங்­க­ளுமே புஸ்­வா­ணம் ஆகி­விட்­டன என்­பது வேறு விஷ­யம்.

அடுத்த ஆண்டு ஜூலை முதல் தேதி வந்த படங்­கள், ‘எல்­லாம் உனக்­காக’, ‘ஸ்ரீவள்ளி’. இதன் பிறகு ஒரு சில ஆண்­டு­க­ளுக்கு சிவா­ஜி­யின்  படத் தயா­ரிப்­பா­ளர்­கள்  பட­வெ­ளி­யீ­டு­களை மாதத்­திற்கு ஒன்று என்று வரி­சைப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்­தார்­கள். பில­வங்க ஆண்­டான 1967ல், நவம்­பர் முதல் தேதி  தீபா­வளி வந்­தது. ‘இரு மலர்­கள்’, ‘ஊட்டி வரை உறவு’ ஆகிய இரு சிவாஜி படங்­கள் ரிலீ­சாகி வெற்­றி­யும் பெற்­றன.

1970 (‘சொர்­கம்’, ‘எங்­கி­ருந்தோ வந்­தாள்’), 1971 (‘சுமதி என் சுந்­தரி’, ‘பிராப்­தம்’), 1975 (‘டாக்­டர் சிவா’, ‘வைர­நெஞ்­சம்’), 1982 (‘ஊரும் உற­வும்’, ‘பரிட்­சைக்கு நேர­மாச்சு’), 1984 (இரு மேதை­கள், தாவ­ணிக் கன­வு­கள்),  1987 (கிருஷ்­ணன் வந்­தான், ஜல்­லிக்­கட்டு) என்று     இரு படங்­கள் சேர்ந்து வெளி­வ­ரும் சாக­சத்தை சிவாஜி தொடர்ந்து நிகழ்த்­தி­யி­ருக்­கி­றார். ‘அந்த நாள்’, ‘கல்­யா­ணம் பண்­ணி­யும் பிரம்­ம­சாரி’ ஆகிய படங்­கள் 1954ல் ஒரே நாளில் வந்­தி­ருந்­தன. அன்று தொடங்­கிய சிவா­ஜி­யின் ரெட்டை மாடு பூட்­டிய செல்­லு­லாய்ட் வண்டி முப்­பது வரு­டங்­க­ளுக்கு மேல் ஓட்­டம் நடத்தி ஒரு கின்­னஸ் சரித்­தி­ரம் படைத்­தி­ருக்­கி­றது!

நடி­க­ரின் தெம்­பான உழைப்பு இந்த வகை­யில் இருந்­தது என்­கி­ற­போது, அவ­ருக்கு ஈடு கொடுப்­ப­து­போல், திரைத்­து­றை­யும் இருக்­க­வேண்­டும் அல்­லவா? திரைப்­ப­டங்­க­ளுக்­கான கதை­கள் அப்­படி ஒன்­றும் மரத்­தில் பழுத்­துத்  தொங்­கு­வ­தில்லை. அவை எப்­படி  கிடைக்­கும்? இதற்­குப் பல வழி­கள் இருந்­தன.  வெற்­றி­க­ர­மான மேடை நாட­கங்­கள் திரைக்கு வரு­வது ஒரு முறை.  பாவ­லர் பால­சுந்­த­ரம் என்­ப­வர் எழுதி மேடை­யில் வெற்­றி­க­ர­மாக நடந்­து­கொண்­டி­ருந்த ‘பரா­சக்தி’ நாட­கம்­தானே சிவா­ஜி­யின் முதல் படத்­திற்கு வித்­திட்­டது! ‘கோடீஸ்­வ­ரன்’ என்ற சிவாஜி பட­மும் பி.வி. வாரே­க­ரின் ‘ஹாச் முலாசா பாப்’ என்ற மராத்­திய நாட­கத்­தின் அடிப்­ப­டை­யில் எடுக்­கப்­பட்ட படம்­தான். ‘தூக்­குத்­தூக்கி’, ‘குலே­ப­கா­வலி’ போன்ற பழைய படங்­கள் மறு­சு­ழற்­சிக்­குக் கொண்டு வரப்­பட்­டது இன்­னொரு முறை.

நாவல்­கள் பட­மாக்­கப்­ப­டு­வது இன்­னொரு முறை.  கல்­கி­யின் ‘கள்­வ­னின் காதலி’, அகி­ல­னின் ‘பாவை விளக்கு’,  மு.வ.வின் ‘பெற்ற மனம்’ ஆகி­யவை அப்­ப­டித்­தான் திரைக்கு வந்­தன. நாவல்­கள் வெற்­றி­க­ர­மா­கத் திரை வடி­வம் பெற­வேண்­டும் என்­றால், அதற்கு பிரத்­யே­க­மான அணு­கு­முறை தேவை என்­பதை   தோல்­வி­யுற்ற இந்­தப் படங்­கள் உணர்த்­தின!

‘பாவை விளக்’­­கைப் பட­மாக்­கு­வ­தில் கோட்டை விட்ட ஏ.பி.நாக­ரா­ஜன், கொத்­த­மங்­க­லம் சுப்­பு­வின் தொடர் நாவ­லான  ‘தில்­லானா மோக­னாம்­பா’­­ளைத் திரை­யில் படைத்­த­போது, ராஜ­பாட்­டை­யில் நடந்து வெற்றி வாகை சூடி­னார்.

சில்­லரை நடி­க­ராகி, தயா­ரிப்பு நிர்­வா­கி­யாகி,  பட நாய­க­ராகி, வில்­ல­னாகி,  படத்­த­யா­ரிப்­பா­ள­ரான கே. பாலாஜி இன்­னொரு வேக­மான முறை வைத்­தி­ருந்­தார். இந்­தி­யில் வந்த வெற்­றிப்­ப­டங்­க­ளின் தமி­ழாக்க உரி­மையை வாங்கி, ஈய­டிச்­சான் காப்­பி­க­ளாக தமி­ழில் கொண்டு வரும் கன்­வே­யர் பெல்ட் தயா­ரிப்பு உத்­தியை அவர் பின்­பற்­றி­னார்.

இத்­த­கைய செல்­லு­லாய்ட் ஜராக்ஸ் வேலையை பாலாஜி செவ்­வனே செய்­து­கொண்­டி­ருந்­தார்.  1970ம் ஆண்டு வந்த ‘எங்­கி­ருந்தோ வந்­தாள்’ திரைப்­ப­டம் இந்த வகை­யில் இந்தி ‘கிலோ­னா’­­வி­லி­ருந்து நகல் எடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

நாய­க­னின் காதலி ஒரு கய­வ­னுக்கு வாழ்க்­கைப்­பட்­டது போதா­தென்று, நாய­க­னின் கண் முன்பே தீயில் விழுந்து மடி­கி­றாள். இத­னால் சித்­த­பி­ர­மைக்கு ஆளா­கும் நாய­கன், ஒரு நடன மாது­வின் இணக்­கத்­தால் மீண்­டும் சக­ஜ­நி­லைக்கு திரும்­பு­கி­றான். இது­தான் ‘எங்­கி­ருந்தோ வந்­தாள்’ திரைப்­ப­டத்­தின் கதைக்­கரு.

படத்­தின் பாடல்­கள் நல்ல வர­வேற்­பைப் பெற்­றன. காதலி கய­வனை மணக்க நேரும் போது, நாய­கன் பாடும் ‘எங்­கி­ருந்­தா­லும் வாழ்க’ பாடல், ‘ஒரே பாடல், உன்னை அழைக்­கும்’.

மன­நிலை பிறழ்ந்த நாய­கனை மீட்­டெ­டுக்­கும் முயற்­சி­யில் நாய­க­னின் தந்தை அழைத்து வந்த நட­னப்­பெண் வில­கிச் செல்­லும் போது, அவ­ளு­டைய ஆத­ர­வுக்­க­ரத்தை ஆதங்­கத்­து­டன் நாய­கன் வேண்­டும் பாடல், ‘நான் உன்னை அழைக்­க­வில்லை’.  

தங்­கள் சந்­தோ­ஷத்­தின் சங்­கீத ஸ்வரங்­களை இரு­வ­ரும் சேர்ந்து பிடிக்­கும் பாடல், ‘சிரிப்­பில் உண்­டா­கும் ராகத்­திலே’ .

இந்த வகை­யில் எம்.எஸ்.வி, கண்­ண­தா­சன் இணைவு ‘எங்­கி­ருந்தோ வந்­தாள்’ படத்­திற்கு ஹிட் பாடல்­க­ளைக் தந்­தது.

இவை போதா­தொன்று, மார்க்­கெட்­டி­லி­ருந்து வில­கிப்­போ­யி­ருந்த பின்­ன­ணிப் பாடகி பி.லீலா, சீர்­காழி கோவிந்­த­ரா­ஜ­னு­டன் இணைந்து பாடிய ‘சகுந்­தலை’ நாட­கம் அழ­காக அமைந்­து­விட்­டது.

‘எங்­கி­ருந்தோ வந்­தாள்’ இன்­னொரு வெற்­றிப்­ப­ட­மான ‘சொர்க்­க’த்­து­டன் வெளி­வந்­தி­ருந்­தும், போட்­டி­யில் துவண்டு போகா­மல் நிலைத்து நின்­றது. பித்­துப்­பி­டித்த நாய­கனை தன்­னு­டைய ஆளு­மை­யால் மீட்­கும் நட­ன­மா­தாக ஜெய­ல­லிதா நன்­றாக நடித்­தார். படத்­திற்கு அச்­சா­ணி­யாக விளங்­கிய அவ­ரு­டைய நடிப்­பிற்­காக மெச்­சப்­பட்­டார் (சிறந்த நடி­கைக்­கான பிலிம்­பே­ரின் சிறப்பு விருது தொடங்கி பல விரு­து­கள் கிடைத்­தன).  

‘கிலோ­னா’­­வின் பாடல்­க­ளும் வெற்­றிப் பாடல்­க­ளாக அமைந்­தி­ருந்­தன.  லட்­சு­மி­காந்த் பியா­ரே­லா­லின் இசை­யில், முகம்­மத் ரபி பாடிய பாடல்­கள், ‘குஷ் ரஹே தூ ஸதா’ (‘ஒரே பாடல் உன்னை அழைக்­கும்’ கட்­டம்), ‘கிலோனா ஜான்­கர் தும் தோ’ (‘நான் உன்னை அழைக்­க­வில்லை’ கட்­டம்) ஆகிய பாடல்­கள் குறிப்­பி­டத்­தக்­கவை. எம்.எஸ்.வி. சிறந்த பாடல்­கள் அமைக்க இவை உற்­சா­கம் தந்­தன.

‘எங்­கி­ருந்தோ வந்­தாள்’ படத்தை சீக்­கி­ரம் ‘சுட்­டுத்­தள்ள’ , பாலா­ஜிக்கு  இந்தி ‘கிலோனா’ சினிமா சந்­தை­யில்  கிடைத்­து­விட்­டா­லும், ‘கிலோ­னா’­­விற்­கும் ஒரு பின்­க­தை­யின் தொடர்ச்சி இருந்­தது.

குல்­ஷன் நந்தா என்­கிற பிர­பல இந்தி வெகு­ஜன நாவ­லா­சி­ரி­ய­ரின்  ‘பத்­தர் கே ஹோன்ட்’  (கல்­லி­தழ்) என்ற  நாவல்­தான், எல்­லா­வற்­றுக்­கும் மூலா­தா­ர­மாக விளங்­கி­யது. வேடிக்கை என்­ன­வென்­றால், இந்த இந்தி நாவ­லா­சி­ரி­ய­ரின் கதை முத­லில்  ஒரு தெலுங்­குப் படத்­திற்­குப் பயன்­பட்­டது! படத்­தின் பெயர், ‘புனர்­ஜன்மா’. ஆனால் இந்த படத்­தின் கதைக்­கும் அதைத் தொடர்ந்து வந்த ‘கிலோனா’ மற்­றும் ‘எங்­கி­ருந்தோ வந்­தா’­­ளுக்­கும் ஒரு வேறு­பாடு உண்டு.

‘புனர்­ஜன்மா’ கதை­யின் நாய­கன் ஒரு சிற்பி. ஒரு பெண்­ணின் சிலையை வடித்து அதன் மேல் தீராக்­கா­த­லு­டன் இருக்­கி­றான் (குல்­ஷன் நந்­தா­வின் நாவ­லு­டைய தலைப்­பான ‘கல்­லி­தழ்’ இதைக் குறிக்­கக்­கூ­டும்).

ஒரு நாள், தான் வடித்த சிலை­யின் அழ­கில் அவன் மயங்­கி­யி­ருக்­கும் போது, அதி­லி­ருந்து ஒரு நட­னப்­பெண் (எல்.விஜ­ய­லட்­சுமி) வெளிப்­பட்டு, அவ­னு­டைய பாட்­டுக்கு நட­னம் ஆடு­கி­றாள்! இந்த வகை­யில் அவன் கற்­பனை உல­கில் தன்னை மறந்து சஞ்­ச­ரித்­துக்­கொண்­டி­ருக்­கும் போது, அந்த சிலை தீப்­பற்­றிக்­கொண்டு எரிந்­து­போ­கி­றது. இந்த விபத்­தைத் தாங்­கிக்­கொள்ள முடி­யா­மல் சிற்பி சித்த சுவா­தீ­னம் இழக்­கி­றான்.

அறு­ப­து­க­ளின் கடை­சி­யில் குல்­ஷன் நந்­தா­வின் நாவல் இந்தி திரைப்­ப­டத்­திற்­காக வடி­வம் பெற்­ற­போது, அதன் திரைக்­கதை அமைப்­பில் அவ­ரும் பங்­கு­கொண்­டார். ‘சிதைந்­தது சிலை’ என்­பதை மாற்றி, நாய­கன் கைப்­பி­டிக்க வேண்­டிய காதலி நிர்ப்­பந்­தத்­தின் கார­ண­மாக ஒரு கய­வ­னுக்கு மனைவி ஆகி­றாள். பின்பு அவ­ளு­டைய திரு­மண நாளில் தீக்கு இரை­யா­கி­றாள்.

அதை நேர­டி­யா­கப் பார்க்­கும் நாய­கன் சித்த சுவா­தீ­னத்தை இழக்­கி­றான் என்று ‘கிலோ­னா’­­விற்­கான கதையை மாற்­றி­னார்­கள். ‘கிலோ­னா’­­வில் கொண்டு வரப்­பட்ட இந்த மாற்­றத்தை ‘எங்­கி­ருந்தோ வந்­தாள்’ அப்­ப­டியே பின்­பற்­றி­யது. ‘கிலோனா’ ஹிட் படம் என்­ப­தால் அதன் அம்­சங்­களை யாரா­வது மாற்­று­வார்­களா என்ன? அது­வும் பாலாஜி! சுளு­வா­க­வும் வேலை முடி­ய­வேண்­டும், நட்­சத்­தி­ரங்­க­ளுக்­குக் கொடுத்து முடிப்­ப­தைக் கொடுத்­துத் தீர்த்­த­பின் சல்­லீ­சா­க­வும் படம் தயா­ரா­க­வேண்­டும் என்­ப­தல்­லவோ அவர் கடைப்­பி­டித்த மோட்டோ (வெற்றி வாச­கம்).

எப்­ப­டி­யும் அவர் காட்­டில் மழை­பெய்­து­கொண்­டி­ருந்த கால­கட்­டத்­தில், ‘எங்­கி­ருந்தோ வந்­தாள்’  எங்கோ மறைந்து போய்­வி­டா­மல், நல்ல வர­வேற்­பைப்­பெற்­று­விட்­டது.

வெகு­ஜன இந்தி வாச­கர்­க­ளுக்­காக குல்­ஷன் நந்தா திரித்த  ‘பத்­தர் கே ஹோன்ட்’ கதை, தெலுங்கு (‘புனர்­ஜன்மா’ 1963), இந்தி (‘கிலோனா’ 1970), தமிழ் (‘எங்­கி­ருந்தோ வந்­தாள்’ 1970),    மலை­யா­ளம் (‘அம்­ரு­த­வா­ஹினி’ 1976) என்று மீண்­டும் மீண்­டும் அவ­தா­ரங்­கள் எடுத்­து­விட்­டது! இயந்­தி­ர­ம­ய­மான கன­வுத்­தொ­ழிற்­சா­லை­யான திரை உல­கம், ஒரு­வ­கை­யில் பார்த்­தால் ஒரு ரீமேக் ராஜ்­ஜி­யம்!

                                                 (தொட­ரும்)