![]() | ![]() |
‘சோ நடிக்கக்கூடாது’
இறுதியில் சோவும், சந்தியாவும் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தார்கள். சோ ஏதாவது புதிதாக சொல்வதற்கு முன் சந்தியாவுக்கு ஜாடை விட்டுவிடுவார். சந்தியாவும் தயார் ஆகிவிடுவார். ஆனால், ஜெயலலிதா விஷயமே வேறு. சோ ஏதாவது புதிதாக பேசினால், அவரும் அங்கேயே சோவுக்கு இணையாக பதில் கொடுப்பார். அதனால்தான் சோ, ஜெயலலிதா நட்பு உறுதி பட ஆரம்பித்தது.
இந்த ஒய்.ஜி.பி. குழுவில்தான் சோவை சினிமாவுக்கு கொண்டு போன ` பெற்றால்தான் பிள்ளையா?’ நாடகம் நடந்தது. அப்போது பட்டுவும் அந்தக் குழுவில் இருந்தார். அவர் சொல்லச் சொல்ல அந்த நாடகத்தை சோ எழுதிக் கொண்டே வரும்போது, அதில் ` மாடசாமி’ என்ற மோட்டார் மெக்கானிக் பாத்திரம் சோவுக்கு மிகவும் பிடித்திருந்தது. சுமார் ஐந்து காட்சிகளில் மட்டுமே வருகிற பாத்திரம் அது என்றாலும், நடிப்புக்கு நல்ல வாய்ப்பு தருகிற பாத்திரமாக சோ நினைத்தார். மெட்ராஸ் பாஷை வேறு. அது தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டையும் விட சோவுக்கு அதிகம் பழக்கமான பாஷை. ஆனால், அந்தப் பாத்திரம் சோவுக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கை சோவுக்கில்லை. அப்படித்தான் நடந்தது.
ஆனால், ஐந்தே காட்சிகள் வருகிற பாத்திரம் என்பதால் குழுவின் மூத்த நடிகர்கள் அந்தப் பாத்திரத்தை ஏற்க தயங்கினார்கள். வேறு வழியில்லாமல் அந்த பாத்திரம் அது சோவுக்கே வந்தது.
மேடையில் ஒரு ரகளையே செய்யக்கூடிய பாத்திரமாக அது அமைந்தது. ஒத்திகை நடக்க நடக்க, பல வசனங்களை சோ சேர்த்துக் கொண்டார். நாடகத்தின் வெற்றிக்கு அந்த பாத்திரமே உதவுகிற அளவுக்கு அது வளர்ந்துவிட்டது. அதற்குக் காரணம், நாடகத்தை எழுதிய பட்டு, அந்த பாத்திரத்தை உருவாக்கியிருந்த விதம்தான்.
நாடகம் நல்ல வெற்றியாக அமைய, அதைப் பற்றி கேள்விப்பட்ட கஸ்தூரி பிலிம்சின் சுப்புராமன், டைரக்டர் பீம்சிங், சிவாஜி ஆகியோர் அதை படமாக்க நினைத்தார்கள். வந்து நாடகத்தையும் பார்த்தார்கள். படம் எடுப்பது என்று முடிவும் செய்தார்கள். மற்ற பாத்திரங்கள் எல்லாமே பிரபல சினிமா நடிகர்களுக்கே போயிற்று, சோ ஏற்ற பாத்திரத்தை மட்டும் சோவையே நடிக்கச் செய்ய வேண்டும் என்று சிவாஜியும், பீம்சிங்கும் முடிவு செய்தார்கள். இப்படி ஒரு வாய்ப்பு வந்தும், அதை சோ ஏற்பதற்கு பெரும்பாடு படவேண்டியதாயிற்று. ஒரு கட்டத்தில் இது நமக்கு வேண்டாமே என்று கூட சோ நினைக்கத் துவங்கிவிட்டார்.
![]() | ![]() |
மேடையில் சோ ஏற்ற பாத்திரத்தை ` பார் மகளே பார்’ திரைப்படத்திலும் செய்ய வேண்டும் என்ற அழைப்பு, தயாரிப்பாளர் வி.சி. சுப்பராமன் அவர்கள் மூலமாக வந்தது. சோ சற்றும் எதிர்பாராத வாய்ப்பு இது. சோ அப்போது அதிகம் சினிமா பார்க்கும் பழக்கமுடையவரல்ல. ஏன் படப்பிடிப்பையே பார்த்தவர் அல்ல. தற்செயலாக தெருவில் நடக்கும் படப்பிடிப்பைக் கூட அவர் பார்த்ததில்லை. இப்படி வாய்ப்பு வந்தவுடன் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார். காரணம் வீட்டில் பெரிய எதிர்ப்பு வரும். அதே சமயத்தில் அந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்ற சபலம் வேறு அவருக்குள் இருந்தது. முதலில் இரு நண்பர்கள் மூலமாக தயாரிப்பாளரிடம் கொஞ்சம் அவகாசம் வாங்கினார்.
பின்னர் வீட்டில் லேசாக இதை பற்றி பேச்சுக் கொடுத்துப் பார்த்தார் சோ. தந்தை எதையும் சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்பவர் என்பதால், உடனே சரி என்று சொல்லிவிட்டார். அவருடைய தாத்தாவோ, `இதுவரை உன்னுடைய முடிவுகளை நீயேதான் எடுத்து வந்திருக்கிறாய். இதிலும் அப்படியே செய்து கொள்’ என்று சொல்லிவிட்டார்.
இப்போது வீட்டில் இருந்த ஒரே பெரிய தடைக்கல் அவரது தாயார்தான். அவருக்கு சோ சினிமாவில் நடிப்பது சுத்தமாகப் பிடிக்கவில்லை. இந்த எதிர்ப்பை எப்படி சமாளிப்பது என்பது சோவுக்குப் புரியவில்லை. இது ஒரு புறமிருக்க, மற்றொரு புறத்தில் பொறாமை காரணமாக, சோவுக்கு வந்த வாய்ப்பைக் கெடுத்துவிடவும் சிலர் முயன்றார்கள். ஆனால், அவர்களுடைய முயற்சி வெற்றி பெறாத அளவுக்கு, சிவாஜி கணேசன், சோவை நடிக்க வைப்பதில் தீர்மானமாக இருந்துவிட்டார்.
இன்னொரு புறம், சோவுக்குள் இன்னொரு பெரிய சந்தேகம் வந்தது . சோ அப்போது டி.டி.கே. நிறுவனத்தின் சட்ட அதிகாரி. சினிமா வாய்ப்புக்காக வேலையை விட்டுவிடவேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே சோவுக்கு இருந்ததில்லை. வேலையிலிருந்து கொண்டே படங்களில் நடித்துவிடவேண்டும் என்றும், இந்த படத்தோடு நடிப்பது போதும் என்றும்தான் சோ நினைத்தார். ஆனால், அலுவலகத்தில் இந்த பேச்சை சோ எடுத்தபொழுது, உடனடியாக அதன் அதிபர் டி.டி. வாசு, அதற்கு முழு சம்மதமளித்துவிட்டார். சாதாரணமாகவே கலைகளில் அவருக்கு உள்ள ஆர்வம் கூட, இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
இப்போது சமாளிக்க வேண்டியது அவரது தாயாரின் எதிர்ப்பை மட்டும்தான். ஆனால், அவரோ சற்றும் மனம் இளகவில்லை. அப்பாவி, ஒன்றும் அறியாதவர் என்பதற்கெல்லாம் விளக்கம் அளிக்கவேண்டும் என்றால், சோவில் தாயாரைக் காட்டினால் போது. தெய்வ பக்தி நிறைந்தவர். வீட்டைத் தவிர வெளி உலகம் அறியாதவர். பெரிய படிப்பு இல்லாவிட்டாலும், ஒரு முறை படித்ததை அப்படியே மனதில் நிறுத்திக் கொள்ளும் திறமை படைத்தவர். பரந்த மனமும், தாராள குணமும் கொண்ட அவருக்கு, பிடிவாதம் நிறையவே உண்டு. ஒரு முடிவு எடுத்தால் எடுத்ததுதான். அப்படிப்பட்ட அவர்தான் சினிமாவில் மகன் நடிக்கக்கூடாது என்று தீர்மானித்தவுடன், அந்த பிடிவாதத்தைத் தகர்ப்பது என்பது இயலாத காரியம் என்ற அளவுக்கு நிலைமை போய்விட்டது.
அந்த நிலையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. சோவின் உறவினர் டி.வி. கிரிஷ் என்பவர், இந்த விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொண்டார். அவர் அந்த காலத்தில் தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் ஒருவர். ரஞ்சி கோப்பையில் தமிழ்நாட்டிற்காகவும், இந்திய பல்கலைக்கழகங்களுக்காகவும், மிகச் சிறப்பாக ஆடியுள்ள பேட்ஸ்மேன் அவர். அவருக்கு ஒரு சந்நியாசி மீது அபார நம்பிக்கை. அந்த சந்நியாசியை ` சாய்பாபா’ என்றுதான் அழைத்துக் கொண்டிருந்தார்கள். ` நான் அந்த சாய்பாபாவை அழைத்துக் கொண்டு வருகிறேன். அவரிடம் யோசனை கேட்போம். அவர் என்ன சொல்கிறாரோ, அதன்படி செய்துவிடுவோம். அவர் சோ சினிமாவில் நடிக்கட்டும் என்று சொன்னால், அவன் போய் நடிக்கட்டும். அவர் கூடாது என்று சொன்னால், அவன் இதை மறந்து விடட்டும் என்று யோசனை கூறினார்.
ஏதோ ஒரு பலவீனமான நேரத்தில் இதை சோவின் தாயாரும் ஏற்றுக் கொண்டுவிட்டார். சோவைப் பொறுத்தவரையில் எப்படியாவது இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு வந்தால் போதும் என்ற நிலை தோன்றிவிட்டது. ஆகையால், சோவும் சரி என்று சொல்லிவிட்டார்.
அந்த பாபா வீட்டிற்கு வரவழைக்கப்பட்டார். இடுப்பிலும், மார்பிலும் மிகவும் அழுக்கான துணி. பரட்டைத் தலை. அதை கிராப் என்று கூற முடியாது. ஜில்பா என்றும் கூற முடியாது. ஒல்லியான உருவம். இப்படி அந்த பாபா தோற்றமளித்தார். சந்நியாசி என்பதால், சோ வீட்டில் ஏகப்பட்ட மரியாதை.
ஒரு தட்டில் பழங்கள், வெற்றிலை பாக்கு, தட்சணை, வேட்டி, துண்டு என்று ஏதேதோ வைக்கப்பட்டன. அதன் எதிரில் அவர் அமர்ந்தார்.
சோவைப் பார்த்து கேட்டார். ` உனக்கு சாய்பாபா மேலே நம்பிக்கை உண்டா?’
அவர் பேசியது தமிழில் அல்ல. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மூன்றும் கலந்த ஒருவிதமான பாஷை. அதில் அவர் இப்படிக் கேட்டவுடன் , சோ சற்று தயங்கிவிட்டு, ` அவ்வளவாக நம்பிக்கை இல்லை’ என்றார்.
அந்த சந்நியாசி சோவை முறைத்துப் பார்த்தார், ` அவ்வளவாக என்றால் என்ன அர்த்தம்?’
` இல்லை என்றுதான் அர்த்தம். அதை அப்படியே சொல்வதற்கு பதிலாக அவ்வளவாக என்று சொன்னேன்’ என்றார் சோ.
சாமியார்,` சரி! அது இருக்கட்டும். இப்பொழுது நான் சாய்பாபாவிடம் கேட்டுத்தான் உன் பிரச்னைக்கு பதில் சொல்வேன். சாய்பாபா தருகிற உத்தரவை நீ ஏற்றுக் கொள்வாயா?’
`சரி! ஏற்றுக் கொள்கிறேன்.’
` உனக்குத்தான் சாய்பாபா மீது நம்பிக்கை கிடையாதே? அப்புறம் அவர் சொல்வதை நீ ஏன் ஏற்றுக் கொள்கிறாய்?”
அவர் அப்படி கேட்டவுடன் சோ,` இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு வந்தால் போதும் என்று எனக்குத் தோன்றிவிட்டது. என்னால் ஒரு முடிவை எடுக்க முடியாமல் திண்டாடுகிறேன். ஆகையால் இப்படி ஒரு முடிவு வந்தால், அதை ஏற்றுக் கொண்டு விடுகிறேன்’ என்றார்.
இதையடுத்து சாமியார், சோவின் தாயாரைப் பார்த்தார் `உங்களுக்கு சாய்பாபா மீது நம்பிக்கை உண்டா?’
`நிச்சயமாக நம்பிக்கை உண்டு’ என்றார். அவர் சொன்னது உண்மையும் கூட!
உடனே அந்த சந்நியாசி, `அப்படியானால் சாய்பாபா கொடுக்கும் முடிவை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நான் பாபாவிடம் கேட்டு உங்களுக்குச் சொல்லிவிடுகிறேன்’ என்றார்.
சோவின் தாயாருக்கு ஒளித்துப் பேசவோ, சாமர்த்தியமாகப் பேசவோ தெரியாது. மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவார். அவர் சொன்னார்,` இவன் சினிமாவில் நடிக்கக் கூடாதுன்னும் பாபா சொன்னா நான் ஏத்துக்கிறேன். நடிக்கணும்னு சொன்னா அதை நான் ஏத்துக்கமாட்டேன்’
இப்படி சோவின் தாயார் தனது மனவிருப்பத்தைத் சொன்னவுடனே, அந்த சந்நியாசிக்கு பெருங்கோபம் வந்தது. எழுந்து நின்று உரக்கப் பேசினார். ` உன் பிள்ளை பாபா மேலே நம்பிக்கை இல்லேன்றான். ஆனால், சொல்ற முடிவை ஒத்துக்கிறதா சொல்றான். நீ நம்பிக்கை இருக்குங்கிறே. ஆனால், உனக்குப் பிடிக்காத முடிவை ஒப்புக்க மாட்டேன்கிறே. அதனாலே நான் சாய்பாபாகிட்ட முடிவையே கேக்கப் போறதில்லே.’’
அவருக்கு வந்த கோபத்தை எழுத்தில் காட்ட முடியாது. ருத்ர தாண்டவம்தான். அடுத்து சோவை பார்த்தார். `டேய், நீ எப்பவுமே உன் மனசுலே சரின்னு பட்டதை பண்ணு. அது சரியாகத்தான் இருக்கும்’ என்று சொல்லிட்டு, வெளியேறத் தொடங்கிய அவர், நின்று சோவைத் திரும்பி பார்த்தார் ` டேய் ... உன் கோபம்தாண்டா உனக்கு சத்ரு ‘ என்று கத்திவிட்டுப் போனார்.
சோவுக்கு ஒன்றுமே புரியவில்லை. கோபம் பொங்கி வழிந்தது அவருக்கு! பேசாமல் திகைத்து ஒடுங்கி நின்ற சோவைப் பார்த்து, ` கோபம் தான் உனக்கு சத்ரு’ என்று சொல்லிவிட்டுப் போனார். ஒரு வேளை அப்போதெல்லாம் சோவுக்கிருந்த முன்கோபத்தை உணர்ந்து கொண்டுவிட்டாரோ, என்னவோ தெரியாது. அந்த சந்நியாசி வெளியேறிய பிறகு, புயல் அடித்து ஓய்ந்த மாதிரி இருந்தது. உறவினர் கிரிஷ் அவரை சமாதானப்படுத்தி அவர் பின்னாலேயே போய்விட்டார். சோ இஷ்டப்படி நடந்து கொள்ளுமாறு அந்த சந்நியாசி சொல்லிவிட்டாலும், அவர் பாபாவிடம் கேட்டும் முடிவை சொல்வேன் என்று கூறியபடி செய்யாமல், பாதியிலேயே கோபித்துக் கொண்டு போய்விட்டதால், நடிப்பதா இல்லையா என்ற கேள்விக்கு விடை கிடைத்த நிலை தோன்றவில்லை. நடந்த ரகளையினால் சோவின் மனக்குழப்பம் அதிகமானதுதான் மிச்சம்.
தயாரிப்பாளர் சுப்புராமனுக்கு கடிதம் எழுதி, அதை நண்பர்கள் முத்து, மாலி மூலமாகக் கொடுத்து அனுப்பினார். `வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால், படத்தில் நடிக்க இயலாது. கொடுத்த வாய்ப்புக்கு நன்றி’ என்று கடிதத்தை எழுதி முடித்து விட்டார்.
(தொடரும்)