திமுக நடத்திய கையெழுத்து இயக்கப் படிவங்கள்- குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது

பதிவு செய்த நாள் : 16 பிப்ரவரி 2020 20:05

சென்னை,

குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவைக்கு எதிராக திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் நடத்திய கையெழுத்து இயக்கப் படிவங்கள் இன்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதுதொடர்பாக இன்று திமுக தலைமை நிலையம் சார்பில் வெளியிப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவும், என்.ஆர்.சிக்கு வழிகோலும் என்.பி.ஆர் தயாரிப்பதை நிறுத்தக் கோரியும், அனைவரது எதிர்வினைச் சிந்தனைகளையும் ஒருமுகப்படுத்தி, மாபெரும் மக்கள் இயக்கம் ஒன்றை முன்னெடுக்கும் வகையில், பிப்ரவரி 2ஆம் தேதி முதல் பிப்ரவரி 8ஆம் தேதி வரை “கையெழுத்து இயக்கம்” நடத்திடுவது என்றும்; அப்படி பெறப்பட்ட கையெழுத்துப் படிவங்களை, அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் - குடியரசுத் தலைவரை சந்தித்து அளித்து, தமிழக மக்களின் ஏகோபித்த எண்ணத்தின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவது என்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

கையெழுத்து இயக்கத்திற்கு அனைத்துத் தரப்பு மக்களும், தங்கள் ஆதரவினை வழங்கிட வேண்டுமென அனைத்துக் கட்சிகளின் கூட்டம் வேண்டுகோளும் விடுத்தது. அதனடிப்படையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும், அனைத்துக் கட்சி நிர்வாகிகள் - தோழர்கள், மாநிலம் முழுவதும், மக்கள் கூடும் இடங்களிலும், வணிக நிறுவனங்களிலும், கல்வி நிலையங்களிலும், வீடுவீடாகவும் சென்று, அனைத்துத் தரப்பு மக்களிடமும் பெற்ற 2 கோடியே 5 லட்சத்து 66 ஆயிரத்து 82 கையெழுத்திட்ட படிவங்களை, இன்று காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் சிலை அருகில், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவருக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்தார்கள்.

மாபெரும் மக்கள் இயக்கத்தின் மூலம் பெறப்பட்ட இந்த கையெழுத்துக்கள் தமிழக மக்கள் மத்தியில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கும் (சி.ஏ.ஏ.) - தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) - தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) ஆகியவற்றுக்கு எதிராக உள்ள உணர்வினை வெளிப்படுத்தியுள்ளது.

ஆகவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து  இப்போதாவது மத்திய பா.ஜ.க. அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற்றும் - என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆர். தயாரிக்கும் பணிகளை நிறுத்தி வைக்கும் நடவடிக்கைகளை, குடியரசுத் தலைவர் ஜனநாயகத்தையும் - அரசியல் சட்டத்தையும் பாதுகாத்திடும் வகையில் மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, அறிவுரையை வழங்கிடுவார் என்று தமிழகமே ஆவலுடனும், நம்பிக்கையுடனும் காத்திருக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.