ஜாமியா பல்கலை மாணவர்கள்மீது போலீஸ் தாக்குதல் வீடியோ: மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி கடும் தாக்கு

பதிவு செய்த நாள் : 16 பிப்ரவரி 2020 19:06

புதுடில்லி,

டில்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களை போலீஸார் தாக்கும் காட்சி தொடர்பான வீடியோவை தனது டுவிட்டரில் பகிர்ந்த பிரியங்கா காந்தி, எந்த நடவடிக்கையும் இதற்கு மேல் எடுக்காவிட்டால் மத்திய அரசின் உள்நோக்கம் என்ன என்பது வெளியாகிவிடும் என்று காட்டமாக பிரியங்கா பதிவிட்டுள்ளார்ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களை நூலகத்துக்குள் சென்று போலீஸார் தாக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சரும், போலீஸாரும் பொய் கூறியது தெரியவந்துள்ளது என பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

குடியுரிமைத் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிராகக் காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் சார்பில் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த டிசம்பர் 15-ம் தேதி போராட்டம் நடத்தப்பட்டது.

இது கலவரமாக மாறியது. மாணவர்கள் மீது போலீஸார் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தும் காட்சிகள் வைரலான நிலையில் நாடு முழுவதும் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல்கள் எழுந்தன. 

நூலகத்துக்குள் சென்ற போலீஸார் மாணவர்ளை தாக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், இதை போலீஸார் மறுத்துவந்தனர்.

இந்த சூழலில் ஜாமியா போராட்டக் குழுவினர் ஒரு வீடியோவை இன்று வெளியிட்டுள்ளனர். 48 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் பல்கலைக்கழக நூலகத்தில் மாணவர்கள் படித்துக் கொண்டிக்கும் போது, அங்குச் சீருடையில் வந்த போலீஸார் மாணவர்கள் மீது தடியடி நடத்தும் காட்சி இருந்தது.

இந்த வீடியோவை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இந்தியில் மத்திய அரசை கடுமையாகச் சாடியுள்ளார். அதில், 

பாருங்கள், மாணவர்களை டில்லி போலீஸார் எவ்வாறு தாக்குகிறார்கள். ஒரு மாணவர் படித்துக்கொண்டிருந்தபோது, அவரை போலீஸார் தாக்குகிறார்கள். நூலகத்துக்குள் சென்று போலீஸார் தாக்கவில்லை என்று உள்துறை அமைச்சரும், போலீஸாரும் பொய் கூறியுள்ளார்கள். இந்த வீடியோவைப் பார்த்தபின்பும், எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால், மத்திய அரசின் நோக்கம் நாட்டின் முன் தெளிவாகிவிடும்" என பிரியங்கா காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ குறித்து ஜாமியா மிலியா பல்கலைக் கழக நிர்வாகம் கருத்துக் கூற மறுத்துவிட்டது. 

டில்லி போலீஸ் இணை ஆணையர் பிரவிர் ரஞ்சன் கூறுகையில், 

 தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடந்து வருகிறது. இந்த வீடியோ குறித்து எனக்கு தெரியவந்துள்ளது. அதுகுறித்து விசாரிக்கப்படும்" எனத்  தெரிவித்தார்.