கரோனா வைரஸ் பாதிப்பு : பலி எண்ணிக்கை 1665 ஆக உயர்வு

பதிவு செய்த நாள் : 16 பிப்ரவரி 2020 14:05

பெய்ஜிங்,

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு தற்போது வரை பலி எண்ணிக்கை 1,665ஆக அதிகரித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலை சா்வதேச சுகாதார அவசர நிலையாக கடந்த மாத இறுதியில் அறிவித்தது ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு. ‘கரோனா வைரஸ்’ என்ற பொதுப் பெயரில் நீண்ட காலமாக அழைக்கப்பட்டு வந்த அந்த வைரஸுக்கு ‘கொவைட்-19’ வைரஸ் என்று கடந்த செவ்வாய்க்கிழமை பெயரிட்டது.

சீனாவின் வூஹான் நகரில் உருவான ‘கொவைட்-19’ எனும் கரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை 1,665-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனா்.

சுமார் 68,500 போ் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் காரணமாக அந்தக் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வில் தெரிய வந்தது.

சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் 774 பேர் உயிர்களை பலி கொண்ட ‘சார்ஸ்’ வைரஸின் தன்மையை ஒத்துள்ளதாக கரோனா வகை வைரஸ் உள்ளதாக  விஞ்ஞானிகள் கண்டறிந்தனா்.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து 9,419 பேர் மீண்டுள்ளதாகவும், வரைஸ் காய்ச்சலுக்கு தற்போது சிகிச்சை பெற்று வரும் 57,416 பேரில் 11,272 பேர் மோசமான நிலையில் உள்ளதாகவும் சீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.