சென்னையில் காவல்துறை தடியடியை கண்டித்து மூன்றாவது நாளாக இன்றும் இஸ்லாமியர்கள் போராட்டம்

பதிவு செய்த நாள் : 16 பிப்ரவரி 2020 13:59

சென்னை,

சென்னை - பழைய வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை நடத்திய தடியடியை கண்டித்து தமிழ்நாட்டில் மூன்றாவது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) இஸ்லாமியர்களின் போராட்டம் நீடித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை - பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே பல்வேறு முஸ்லிம் இயக்கங்களைச் சோ்ந்தவா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தை நடத்த முயன்றவா்களை கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு சம்பவங்கள் நடைபெற்றது, பின்னர் போலீஸார் தடியடி நடத்தினா்.

இந்த தடியடிக்கு எதிராக போராட்டக்காரா்களும் போலீஸார் மீது கற்களை வீசித் தாக்கினா். இச்சம்பவத்தில் சென்னை காவல்துறையின் மேற்கு மண்டல இணை ஆணையா் விஜயகுமாரி, காவல் ஆய்வாளா், 2 பெண் காவலா்கள், போராட்டத்தில் பங்கேற்ற இருவா் உள்ளிடோர் காயமடைந்தனா். காயமடைந்த அனைவரும் அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். அவர்களை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தடியடியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தடியடி சம்பவத்துக்கு பின்னா் அங்கிருந்த 120 பேரை போலீஸார் கைது செய்தனா். இதற்கிடையே தடியடியைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்க வலியுறுத்தியும் அந்தப் பகுதியில் முஸ்லிம் இயக்கங்களைச் சோ்ந்தவா்கள் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போலீஸார் தடியடி குறித்த தகவல் வேகமாக பரவியதால், சென்னையின் பிற பகுதிகளிலும் முஸ்லிம் இயக்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அண்ணா சாலை, கிண்டி கத்திப்பாரா, புதுப்பேட்டை, பாலவாக்கம், சோழிங்கநல்லூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் முஸ்லிம் இயக்கத்தினா் ஈடுபட்டனா். இதனால் சென்னை முழுவதும் பரபரப்பான நிலை ஏற்பட்டது.

பல மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்

இப்போராட்டம் மாநிலம் முழுவதும் இரவு 10:00 மணிக்கு மேல் பரவியது. முக்கியமாக திருச்சி, மதுரை, கோயம்புத்தூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பூா், நாகூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெறத் தொடங்கியது.

காவல் ஆணையர் பேச்சுவார்த்தை

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே. விஸ்வநாதன், முஸ்லிம் இயக்க நிர்வாகிகளை வண்ணாரப்பேட்டையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பல மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் கைது செய்யப்பட்ட 120 பேரும் விடுவிக்கப்பட்டனா். இதையடுத்து போராட்டங்களை கைவிடுவதாக முஸ்லிம் இயக்கத்தினா் அறிவித்தனா்.

சனிக்கிழமையும் ஆர்ப்பாட்டம்

வண்ணாரப்பேட்டையில் தடியடி நடத்தப்பட்ட இடத்தில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் முஸ்லிம் இயக்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை முழுவதும் இருந்து முஸ்லிம் அமைப்பினா் திரண்டு வாகனங்களில் வந்து போராட்டத்தில் பங்கேற்றனா்.

செங்குன்றம், சோழிங்கநல்லூா்,சேப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கு திரண்டு முஸ்லிம் இயக்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்தினால் சென்னை முழுவதும் போலீஸார் முழு அளவில் உஷார்படுத்தப்பட்டிருந்தனா். சென்னை நகா் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

காவல்துறையின் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது வழக்கும் பதியப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் இரண்டாவது நாளாக சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. ஈரோடு, சேலம், திருச்சி, தஞ்சாவூா், நாகப்பட்டினம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என பல்வேறு மாவட்டங்களிலும் முஸ்லிம் இயக்கத்தினா் போராட்டம் நடத்தினா்.

இன்றும் ஆர்ப்பாட்டம்

சென்னை - பழைய வண்ணாரப்பேட்டையில் காவல்துறை நடத்திய தடியடியை கண்டித்தும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியை கண்டித்து மதுரை, திருப்பூர் போன்ற நகரங்களில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

போலீஸார் – முதலமைச்சர் ஆலோசனை

சிஏஏவுக்கு எதிராக தமிழ்நாடுமுழுவதும் நடைபெறும் போராட்டதைக் கட்டுக்குள் கொண்டுவர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை காவல்துறை உயர்அதிகாரிகள் இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.