சிஏஏவை கட்டாயம் நிறைவேற்றுவோம் – பிரதமர் மோடி உறுதி

பதிவு செய்த நாள் : 16 பிப்ரவரி 2020 12:51

புதுடில்லி,

வாரணாசியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று  அவரது தொகுதியான வாரணாசிக்கு சென்றார்.

வாரணாசி சென்ற பிரதமர் மோடியை ஆளுநர், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் விமான நிலையத்தில்  வரவேற்றனர்.

வாரணாசி சென்ற பிரதமர் மோடி, அங்கு அமைக்கப்பட்டுள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாயா நினைவு மண்டபத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

நினைவு மண்டபத்தில் உருவாக்கப்பட்ட, பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் 63 அடி உயர பஞ்ச லோக சிலையை திறந்து வைத்தார்.

பின்னர், ஜங்கம்வாடி மடத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு வழிபட்டார்.

430 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனை உட்பட 30க்கு மேற்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சிஏஏ கட்டாயம் நிறைவேறும்

தீனதயாள் உபாத்யாய்-இன் சிலை திறப்புக்குப் பிறகு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.

சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வது, சிஏஏ கொண்டு வருவது போன்ற முடிவுகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தன. ஆனால் தேச நலனைக் கருத்தில் கொண்டு நாங்கள் இவற்றை கையிலெடுத்தோம். மேலும் இவ்விவகாரங்களில் நாங்கள் உறுதியாகவும் இருப்போம். யாரையும் சாராது சுயமாக இருப்பது தொடர்பாக அரசு செயல்பட்டு வருகிறது. சிஏஏவை கட்டாயம் நிறைவேற்றுவோம்.
இலவச சமையல் எரிவாயு இணைப்பு, கழிப்பறைகள் போன்ற எங்களது திட்டங்கள் ஏழைகளிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. வாராணசியில் ரூ. 25,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் முழுவதுமாக நிறைவேற்றப்பட்டுள்ளது அல்லது முழுமையாக நிறைவேற்றப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்குக் காரணம், உங்களுக்கு சேவையாற்ற சிவன் என்னை ஆசீர்வதித்ததுதான்.
மருத்துவமனை, பள்ளி, சாலைகள், பாலங்கள் மற்றும் தண்ணீருக்கான ரூ. 12,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
மேற்கு உத்தரப் பிரதேசத்துக்கான இணைப்பை மேம்படுத்தி அதை மருத்துவத்துக்கான மையமாக மாற்ற முயற்சிக்கிறோம்.
ரூ. 350 லட்சம் கோடி (5 டிரில்லியன் அமெரிக்க டாலர்) இந்தியப் பொருளாதாரம் குறித்து பேசுகிறோம்.

அதற்கு சுற்றுலாத் துறை மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அரசால் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, அந்த அறக்கட்டளை தனக்கு அளிக்கப்பட்ட பணிகளை விரைந்து செய்து வருவதாகவும் கூறினார்.  

அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் மத்திய அரசு புதிதாக இன்னொரு மிகப்பெரிய முடிவை எடுத்திருப்பதாக கூறிய பிரதமர் மோடி, அங்கு ஏற்கெனவே சர்ச்சைக்குரிய பகுதியில் அரசால் கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலம் முழுவதும் ராமர் கோயில் கட்டும் பணிக்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அறிவித்தார். 

மிகப்பெரிய அந்த நிலத்தில் கட்டப்படுவதால் ராமர் கோயிலின் கம்பீரமும், தெய்வீக தன்மையும் அதிகரிக்கும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.