முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மீது என்சிபி, காங்கிரஸ் பாய்ச்சல்

பதிவு செய்த நாள் : 15 பிப்ரவரி 2020 20:34

மும்பை

மகாராஷ்டிரா சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியில் ஒரு சிறிய விரிசல் தோன்றியுள்ளது. முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூட்டணிக் கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகியவைகளுடன் ஆலோசனை நடத்தாமல் தன்னிச்சையாக  உத்தரவு ஒன்றை பிறப்பித்தார் என்று காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் குற்றம்சாட்டியுள்ளன.

பீமா கோரேகான் வழக்கை மகாராஷ்டிரா மாநில போலீசார் விசாரித்து வந்தனர் அந்த விசாரணையை தேசிய புலனாய்வு பிரிவு மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு திடீர் என்று உத்தரவு பிறப்பித்தது

வெள்ளியன்று வெளியான ஒரு தகவல் மகாராஷ்டிர ஆளும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே விரிசல் தோன்றியிருப்பதை உறுதி செய்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்துறை அமைச்சராக இருப்பவர் அனில் தேஷ்முக். அவர் பீமா கோரேகான் வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சி இடம் ஒப்படைக்கக் கூடாது. சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் அதிகார வரம்புக்குள் வரக்கூடியது. எனவே நாமே மத்திய புலனாய்வு ஏஜென்சி விசாரிக்கட்டும் என்று கூறுவது முறையல்ல என்று அனில் தேஷ்முக் வாதிட்டார்.

 ஆனால் மாநில முதலமைச்சராக உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அனில் தேஷ்முக் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. பீமா கோரேகான் வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரிப்பது முறையானது தான் என்று முதல்வர் என்ற வகையில் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி கோப்பில் கையெழுத்திட்டார் எனத் தெரிகிறது.

மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட ஒரு பிரச்சனையை மத்திய அரசின் விசாரணை அமைப்பு விசாரிக்கும் என்று உத்தரவிடுவது மத்திய அரசுக்கு அழகல்ல. அதைவிட மோசமான விஷயம் என்னவென்றால் அந்த பிரச்சனையை மத்திய அரசு ஏஜென்சி விசாரிக்கட்டும் என்று மாநில அரசும் ஒப்புதல் தருவதுதான் என சரத் பவார் கூறினார்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் மல்லிகார்ஜூன கார்கே மும்பை நகரில் காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசினார் அப்போது

கோரேகான் பீமா கோரேகான் வழக்கு மத்திய புலனாய்வு ஏஜென்சி விசாரிப்பதை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கவில்லை என்று கூறினார்.

மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் முடிவு நியாயமற்றது. ஆளும் கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. எனவே இதுபோன்ற பிரச்சனைகளை காங்கிரஸ் கட்சியுடன் கலந்தாலோசிப்பது அவசியம். முதலமைச்சருக்கு இத்தகைய பிரச்சனைகளில் முடிவு எடுக்க சிறப்பு அதிகாரம் இருக்கலாம், ஆனால் அவர் அந்த முடிவை மிகவும் நிதானமாக ஆலோசித்த பிறகே எடுக்கவேண்டும்  என்று மல்லிகார்ஜுன் கார்கே கூறினார்