டில்லியில் ஆம் ஆத்மி மூன்றாவது முறையாக ஆட்சி

பதிவு செய்த நாள் : 15 பிப்ரவரி 2020

டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. டில்லி சட்டசபையில் மொத்தம் 70 இடங்கள் உள்ளன. தற்போது நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களில் வெற்றி பெற்று அசுரபலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது. (சென்ற சட்டசபையில் ஆம் ஆத்மி உறுப்பினர் எண்ணிக்கை 67.) பாரதிய ஜனதா 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. (சென்ற சட்டசபையில் பா.ஜ.,உறுப்பினர் எண்ணிக்கை 3.) பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் கட்சியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

இந்த தேர்தலை பொருத்தமட்டில் போட்டி ஆம் ஆத்மிக்கும், பாரதிய ஜனதாவுக்கும் இடையே தான் நடைபெற்றது எனலாம். காங்கிரஸ் கட்சி தேர்தலில் அதிக அக்கறை காட்டவில்லை. அதன் தலைவர்களும் பெரிய அளவில் பிரசாரம் செய்யவில்லை. ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவாலை முன்னிறுத்தி இருந்தது. பா.ஜ., யாரையும் முதலமைச்சராக வேட்பாளராக முன்னிறுத்தவில்லை. இதற்கு முன் பா.ஜ.,மறைந்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தற்போதைய புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஆகியோரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து கையை சுட்டிக் கொண்டது. தற்போதைய நிலையில் டில்லியில் மக்களிடம் செல்வாக்கு உள்ள பிரபலமான தலைவர்கள் யாரும் பா.ஜ.,வில் இல்லை எனலாம்.

கடந்த ஐந்து வருடங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அரசு நிறை வேற்றியுள்ள மக்கள் நல திட்டங்களை முன்னிறுத்தி மட்டுமே தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டது. ஒவ்வொரு பகுதிகளிலும் ‘மொகிலா க்ளினிக்’ என அழைக்கப்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், பஸ் பயணத்தின் போது பெண்கள் பாதுகாப்பிற்கு ஆட்களை  நியமித்தது. மின் கட்டணம் குறைப்பு, தண்ணீர் விநியோகம், டில்லி அரசு பள்ளிக்கூடங்கள் சீரமைப்பு, ஆங்காங்கே சிசிடிவி கேமிரா பொருத்தியது போன்ற சாதனைகளை எடுத்துக்கூறி மட்டுமே ஆம் ஆத்மி கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக தொடங்கிய இயக்கத்தில் இருந்து வந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். இவர் தொடங்கிய கட்சியே ஆம் ஆத்மி. ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டு குறுகிய காலத்திலேயே டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றது. மற்ற கட்சிகளை போல் எவ்வித பின்புலமோ, பெரிய தலைவர்களோ இல்லை.

குறிப்பிட்ட கொள்கையின் அடிப்படையில் இயங்கும் கட்சியுமல்ல. நடைமுறைக்கு ஏற்றவாறு வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்றியுள்ளது. இதை முன்னிறுத்தியே தேர்தல் பிரசாரம் செய்தனர். டில்லி சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவிக்கும் முன்பே பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

பார்மென்டில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த மசோதா, குடிமக்கள் பதிவேடு போன்றவைகள் பா.ஜ,வின் பிரசாரத்தில் முக்கிய பங்கு வகித்தன. இந்த பிரச்னையை பாரதிய ஜனதா  தேர்தல் பிரச்னையாக மாற்றினால், ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியுள்ள பல மக்கள் நல வாழ்வு திட்டங்களை பின்னுக்கு தள்ளப்பட்டுவிடும். தேசிய குடியுரிமை மசோதா, பதிவேடு பற்றி பற்றி திசை திரும்பிவிடும். தேர்தலில் டில்லி மாநில பிரச்னை பின்னுக்கு தள்ளப்பட்டு, மற்ற பிரச்னைகளை முன்னெடுக்கும் தந்திரத்தை பாரதிய ஜனதா கையாளும் என்பதை உணர்ந்து கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால், இதை பற்றி அதிகம் பேசாமல், தனது அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்களை மட்டுமே முன்னிறுத்தி பிரசாரம் செய்தார்.

டில்லியில் உள்ள புகழ்மிக்க ஜவஹவர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமியா கல்லூரி உட்பட மாணவர்களின் போராட்டங்களை, மத்திய உற்துறை அமைச்சர் அமித் ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை அடக்குமுறையை கையாண்டு ஒடுக்கியது.

தேர்தல் பிரசாரத்தின் போது பா.ஜ,,வைச் சேர்ந்த எம்.பி பர்வீஸ் வர்மா, அரவிந்த் கெஜ்ரிவாலை ‘தீவிரவாதி’ என்று வர்ணித்தார். அவர் டில்லியில் சாகின் பக் என்ற இடத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பெண்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பாதாக கூறி, கெஜ்ரிவாலை தீவிரவாதி என வர்ணித்தார். பா.ஜ,வினர் கடுமையாக பிரசாரம் மேற்கொண்டனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரசார கூட்டங்களில் பேசியதுடன் வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்தும் வாக்கு சேகரித்தார். உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் உட்பட பல எம்.பிக்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். டில்லியில் மோடி–அமித் ஷா அலை வீசுவதாக பா.ஜ,,கட்சியைச் சேர்ந்தவர்கள் பெருமையாக கூறிக் கொண்டனர். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஒரு எம்.பி, இந்த தேர்தல் இந்தியாவுக்கும்–பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கும் போர் எனவும் வர்ணித்தார். பா.ஜ,,வின் பிரசார உத்தி, இந்துக்களின் வாக்குகளை  சிந்தாமல், சிதையாமல் அள்ள வேண்டும் என்ற ரீதியிலேயே இருந்தது.

டில்லியை பொருத்தமட்டில் அது ஒரு மினி இந்தியா என்றே கூறலாம். அங்கு எல்லா மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் வாழ்கின்றனர். டில்லியின் மக்கள் தொகையில் இந்துக்கள்  80 சதவிகிதமாக இருந்தாலும், டில்லி வாக்காளர்கள் மதம், இனம், பிராந்தியம், மாநிலம் என எவ்வித பாகுபாட்டிற்கும் செவிசாய்க்காமல், ஆம் ஆத்மி அரசின் நிர்வாக அணுகுமுறை, நிறைவேற்றிய நலத்திட்டங்கள் போன்றவைகளை மட்டுமே சீர்தூக்கி பார்த்து வாக்களித்து, மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி அரசை ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

டில்லி தேர்தல் முடிவுகள் பற்றி கருத்து கூறியுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் காற்று திசை மாறுவதை காட்டுகிறது. இந்த முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. பாரதிய ஜனதா வகுப்புவாதத்தை கிளப்பிவிட்டு வாக்குகளை பிரிக்க பார்த்தது. ஆனால் தோல்வி அடைந்து விட்டது என்று கூறியுள்ளார்.

டில்லி சட்டசபை தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார், மக்களே எஜமானர்கள் என்று கூறினார். இந்த தேர்தலில் பா.ஜ.,வுடன் ஐக்கிய ஜனதா தளம், ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக்ஜனசக்தி கட்சி கூட்டணி அமைத்தன. ஐக்கிய ஜனதா தளம் புராரி, சங்கம் விகார் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளது. டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்த பவன் வர்மா, பிரசாந்த் கிஷோர் ஆகியோரை கட்சியில் இருந்து நிதிஷ் குமார் நீக்கினார்.

பீகாரில் தற்போது ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ,, லோக்ஜனசக்தி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. வரும் அக்டோபர்–நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. தற்போதைய டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., கடுமையான தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் பீகார் சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீட்டில் நிதிஷ் குமாரின் கையே ஓங்கி இருக்கும் என கூறப்படுகிறது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஷ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களிலும் பா.ஜ., தோல்வி அடைந்தது. உத்தரபிரதேத்தில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஹரியானா, குஜராத் மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும் பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தது.