விளை பொருட்கள் விலை: மாநில அரசுகள் எதிர்ப்பு

பதிவு செய்த நாள் : 15 பிப்ரவரி 2020

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாள் ஜனவரி 31ம் தேதியன்று, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். அப்போது மத்திய அரசு விவசாயிகள் பயிர் செய்வதற்கு  செலவழிக்கும் தொகையை விட, உற்பத்தியாகும் தானியங்களுக்கு ஒன்றரை மடங்கு விலை கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு தகுந்தாற்போல் கரீப், ரபி பருவத்தில் குறைந்தபட்ச ஆதார விலை சீராக அதிகரிக்கப்படுகிறது என்று கூறினார். அதே நேரத்தில் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான கோப்புகளில் உள்ள குறிப்புகளை பார்த்தால், ஜனாதிபதி கூறியது போல் இல்லை என்பது தெரிகிறது.

தகவல் பெரும் உரிமை சட்டப்படி ‘தி வயர்’ இணையதளம் விண்ணப்பித்து பெற்ற ஆவணங்களில் இருந்து, பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள் உட்பட பல மாநில அரசுகள். மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதாரவிலைக்கு சம்மதம் தெரி விக்கவில்லை. இதை அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளன.

மத்திய அரசின் ஆவணங்களின்படி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரையின்படி சி2 கணக்கீடு அடிப்படையில் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு அறிவிப்பதற்கு பதிலாக, ஏ2+எப்எல் கணக்கீடு படி விவசாயிகளுக்கு ஆகும் செலவை கணக்கிட்டு, மத்திய அரசு இதைவிட ஒன்றரை மடங்கு விலையை, குறைந்தபட்ச ஆதார விலையாக அறிவிக்கிறது. மாநில அரசுகள் எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரையின் படி விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று கூறுகின்றன.

ஏ2+எப்எல் (A2+ FL) கணக்கீடு என்பது பயிர் செய்ய விவசாயி செலவழிக்கும் எல்லா தொகையும், (அவரும், குடும்பத்தினரும் பயிரிடுவதற்காக செய்யும் வேலைக்கு கூலி, குத்தகைக்கு எடுத்த நிலத்திற்கான வாடகை உட்பட) கணக்கிட்டு ஆகும் செலவில், அதைவிட ஒன்றரை மடங்கு விலையை, மத்திய அரசு குறைந்தபட்ச ஆதாரவிலையாக அறிவிக்கிறது. சி2 (C2) கணக்கீடு என்பது )மேலே கூறியவைகளுடன் (ஏ2+எப்எல் கணக்கீடு), சொந்த நிலத்திற்கான வாடகை, நிலத்தின் மதிப்பிற்கான வட்டியையும் சேர்த்து கணக்கிடப்படுகிறது.

சென்ற வருடம் ஜூலை 3ம் தேதி மத்திய அமைச்சரவை 2019–20ம் வருடத்திற்கான கரீப் பருவத்திற்கான பல்வேறு தானியங்f களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்தது. முந்தைய ஆண்டுடன் (2018–19) ஒப்பிடுகையில் குறைந்தபட்ச ஆதார விலை நெல்லுக்கு 3.7 சதவிகிதம், சோளத்திற்கு 4.9 சதவிகிதம், கம்பு, சோளம் போன்றவைகளுக்கு 2.6 சதவிகிதம், மக்காச் சோளத்திற்கு 3.5 சதவிகிதம், பாசிப்பயறுக்கு 1.1 சதவிகிதம், உளுந்துக்கு 1.8 சதவிகிதம், பருத்திக்கு 2 சத விகிதம் விலையை அதிகரித்து அறிவித்தது.

மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள விவசாய விளை பொருட்கள் விலை நிர்ணய  ஆணையம் [Commission for Agricultural Costs and Prices (CACP)] பரிந்துரையின் அடிப்படையில், பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்து குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்தது. இதற்கு சத்திஷ்கர், ஹரியானா, மகாராஷ்டிரா, ராஜஸ் தான், உத்தரபிரதேசம்,ஒடிசா, கர்நாடகா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது ஆவணங் களில் இருந்து தெரியவருகிறது.

மத்திய அமைச்சரவையின் பார்வைக்கு வைக்கப்பட்ட குறிப்புகளில், தமிழ்நாடு, கர்நாடாக மாநில அரசுகள் அனுப்பிய கருத்துக்கள் இடம் பெறவில்லை. இந்த இரண்டு மாநில அரசுகளும், மத்திய அமைச்சரவை கூடுவதற்கு முன், தங்களின் கருத்துக்களை அனுப்பியிருந்தன. மத்திய அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு, அதனிடம் சமர்ப்பிக்கப்படும் குறிப்புகள் மிக முக்கியமானவை.

குறைந்தபட்ட ஆதாரவிலை அறிவித்துள்ள எல்லா தானியங்கள், பணப்பயிர்களின் விலையை சி2 அடிப்படையில் கணக்கிட்டால், தற்போது அறிவித்துள்ள இவற்றின் விலை 14 சதவிகிதம் மட்டுமே அதிகமாக இருக்கின்றது. பல்வேறு மாநிலங்களில், பலவகையான பயிர்கள் உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவுகள், ஒரே மாதிரியாக இல்லை. எனவே எல்லா மாநில விவசாயிகளுக்கும் உகந்த மாதிரி ஒரே மாதிரியான குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிப்பது சாத்தியம் இல்லை எனவும் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மேற்கு வங்கம்

2019,ஏப்ரல் 22ம் தேதி மத்திய வேளாண் துறை செயலாளர் சஞ்சய் அகர்வால் எழுதிய கடிதத்திற்கு மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு பதில் எழுதியுள்ளது. அதில் மேற்கு வங்க அரசின் மதிப்பீட்டின் படி நெல் குவின்டாலுக்கு ரூ.2,100 என நிர்ணயிக்க வேண்டும் என கூறியிருந்தது. ஆனால் விவசாய விளை பொருட்கள் விலை நிர்ணய  ஆணையம் குவின்டால் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.1.815 மட்டுமே பரிந்துரைத்துள்ளது.

மேற்கு வங்க அரசு எதன் அடிப்படையில் மதிப்பீடு செய்தது என்பதை விளக்கி மாநில வேளாண்துறை இணை செயலாளர் ஜிதேந்திர ராய் எழுதிய கடிதத்தில், 2017–18ம் ஆண்டில் சி2 அடிப்படையில் நெல் உற்பத்தி செலவை கணக்கிட்டால் ரூ.1,751 ஆக வருகிறது. மாநில தொழிலாளர் நலத்துறை அறிவித்த குறைந்தபட்ச கூலியின் அடிப்படையில் கணக்கிட்டு . பல்வேறு இடுபொருட்கள், தொழிலாளர் கூலி போன்றவை 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்ற அடிப்படையில் 2019–20ம் வருடத்திற்கு சி2 அடிப்படையில் குவின்டால் நெல் உற்பத்தி செலவு ரூ.1,909 ஆக இருக்கிறது.

இதன் அடிப்படையில் மேற்குவங்க அரசு நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை ரூ.1,815க்கு பதிலாக ரூ.2,100 ஆக நிர்ணயிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது. அதே நேரத்தில் மத்திய அரசு, மேற்குவங்க மாநில அரசின் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார்.

சத்திஷ்கர்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபேஸ் பாகல் தலைமையிலான சத்திஷ்கர் மாநில அரசு, மத்திய அரசுக்கு 2019,மே 3ம் தேதி எழுதிய மூன்று பக்க கடிதத்தில் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அந்த கடிதத்தில் மாநில வேளாண் துறை கரீப் பருவத்தில் பயிர் செய்யும் முக்கிய பயிர்களுக்கு ஆகும் செலவை விரிவாக கணக்கிட்டு, மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

சத்திஷ்கர் மாநில அரசு பயிர் செய்வதற்கு ஆகும் செலவு, தொழிலாளர்களுக்கு கொடுக்கும் கூலி, நிலத்தின் மதிப்பிற்கான வட்டி, குத்தகை நிலத்திற்கான குத்தகை தொகை, பயிர் செய்வதற்கான இடு பொருட்களுக்கு ஆகும் செலவு, போக்குவரத்து செலவு ஆகியவைகளை கணக்கிட்டு விலையை பரிந்துரைத்துள்ளது. நெல் குவின்டாலுக்கு ரூ.2,500, ராகி ரூ.3,100 சோளம் ரூ.1,800, துவரைக்கு ரூ.6,800, பாசிப்பயறு ரூ.7,300, உளுந்து ரூ.6,800, நிலக்கடலை ரூ.5,800, சோயா ரூ.3,800, சூரியகாந்தி, எள் ஆகியவைகளுக்கு  தலா ரூ.6,500 என நிர்ணியக்க வேண்டும் என கூறியிருந்தது.

ஆனால் இதை விட மத்திய அரசு குறைவாகவே குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்துள்ளது. மத்திய அரசு நெல் குவின்டாலுக்கு ரூ.1,815 ராகி ரூ.3,150, சோளம் ரூ.1,760, துவரை ரூ.5,800, பாசிப்பயறு ரூ.7,050, உளுந்து ரூ.5,700, நிலக்கடலை ரூ.5,090, சோயா ரூ.3,710, சூரியகாந்தி, எள் ஆகியவைகளுக்கு  தலை ரூ.6,485 என விலை நிர்ணயித்துள்ளது.

சத்திஷ்கர் மாநில அரசு பரிந்துரைத்த விலையை, மத்திய அரசு நிராகரித்தது. அதன் பிறகு நெல்லுக்கு போனஸ் வழங்க வேண்டும் என சத்திஷ்கர் மாநில அரசு கேட்டது. இதை கடுமையாக எதிர்த்த மத்திய அரசு, சத்திஷ்கர் மாநில அரசு நெல்லுக்கு போனஸ் வழங்கினால், மத்திய அரசு சத்திஷ்கர் மாநிலத்தில் இருந்து நெல்லை கொள்முதல் செய்யாது என எச்சரித்தது.  

தமிழ்நாடு  

மத்திய அரசு 2019–20 கரீப் பருவத்திற்கு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்று தமிழக அரசு கூறியது.

மத்திய அரசுக்கு, தமிழ்நாடு அரசு 2019, ஜூன் 24ம் தேதி எழுதிய கடிதத்தில், வருடாந்திர மழை பொழிவு, நீர் இருப்பு, அணைகளில் இருந்து பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர், இடு பொருட்களின் விலை உயர்வு, ஆறுகளில் கிடைக்கும் தண்ணீரின் அளவு ஆகியவை பயிர் செய்வதற்கான செலவை நிர்ணயிக்கின்றன. மற்ற தானியங்களுக்கு அதிக விலை நிர்ணயிப்பதால், பருப்பு வகைளின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. எனவே பருப்பு வகைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க வேண்டும். தானியங்கள் உற்பத்தி செய்ய ஆகும் செலவை மட்டும் அடிப்படையாக கொண்டு, குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க கூடாது. விவசாயிகளின் சமூக, பொருளாதார நிலைமையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். விவசாயிகள் கண்ணியமான முறையில் வாழ்க்கை நடத்துவதற்கு ஏற்ப விலை நிர்ணயிக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு நெல் குவின்டாலுக்கு ரூ.2,700, சோளத்திற்கு ரூ.2,750, கம்புக்கு ரூ.2,150, மக்காச் சோளத்திற்கு ரூ.3,150, துவரைக்கு ரூ.2,100, பாசிப்பயிறுக்கு ரூ.6,300, உளுந்துக்கு ரூ.7,700,நிலக்கடலைக்கு ரூ.6,200, பருத்திக்கு ரூ.5,400 என நிர்யிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. ஆனால் மத்திய அரசு, தமிழக அரசின் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளவில்லை.    

 இதே போல் மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் இருந்து பா.ஜ.,சிவசேனா கூட்டணி அரசும், மாநில அரசு பரிந்துரைத்த விலையை விட, மத்திய அரசு குறைவாக விலையை நிர்ணயித்துள்ளதாக கூறியது. பாரதிய ஜனதாவைச் சேர்ந்த மோகன் லால் கட்டார் தலைமையிலான ஹரியானா மாநில அரசும், மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க வேண்டும் என கூறியது. மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை பயிர் செய்வதற்கான செலவை கூட ஈடுகட்டவில்லை என்றும் கூறியிருந்தது. பா.ஜ,,வைச் சேர்ந்த ஆதியநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசும், மத்திய அரசு அறிவித்துள்ள விலையை அதிகரிக்க வேண்டும் என கூறியது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் கெலட் தலைமையிலான ராஜஸ்தான் மாநில அரசும் குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. பிஜூ ஜனதா தளத்தைச் சேர்ந்த நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா மாநில அரசும், மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க வேண்டும் என்று கூறியது. இவ்வாறு எல்லா மாநில அரசுகளும் கட்சி வேறுபாடின்றி, மத்திய அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க வேண்டும் என விரிவாக விளக்கி கடிதங்களை எழுதின. ஆனால் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.  

விவசாயிகளின் சங்கங்கள், மத்திய அரசு வழங்கும் குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமி நாதன் கமிஷனின் பரிந்துரையின்படி சி2 கணக்கீடு அடிப்படையில் குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றன. எல்லா மாநில அரசுகளும் மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, விலையை உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளன. அத்துடன் மாநில அரசுகள் அதற்கான காரணங்களை விளக்கியும் விரிவாக கடிதம் எழுதியுள்ளன.

நன்றி: தி வயர் இணையதளத்தில் தீராஜ் மிஸ்ரா எழுதிய கட்டுரையின் சுருக்கம்.