லட்சக்கணக்கான கடல் ஆமைகளை பாதுகாத்தவர்!

பதிவு செய்த நாள் : 15 பிப்ரவரி 2020

பிச்சிபய் என்று அழைக்கப்படும் பிச்சிரானந்த் பிஸ்வால்,கடந்த இருபத்து மூன்று வருடங்களாக பல லட்சம் ஆலிவ் ரிட்லி இன கடல் ஆமைகளை காப்பாற்றியுள்ளார். அழிந்து வரும் அரியவகை ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளை பாதுகாப்பதற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். சிறு வயதில் இருந்தே ஒடிசாவில் உள்ள சிரினி கடற்கரைக்கு பிச்சிரானந்த் பிஸ்வால் தினசரி செல்வது வாடிக்கையாக கொண்டுள்ளார். இவர் ஒடிசா மாநிலத்தில் உள்ள குன்டபாலா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது வீடு கடற்கரையில் இருந்து நூறு மீட்டர் தொலைவிலேயே உள்ளது. 1996ம் ஆண்டு சிறுவனாக இருந்த போது, ஒரு நாள் கடற்கரைக்கு சென்றார்.

அங்கு  இரண்டாயிரம் ஆலிவ் ரிட்லி கடல் ஆமை குட்டிகள் இறந்து கிடந்ததை பார்த்தார். இதை பார்த்து அதிர்ந்து போன பிச்சிரானந்த் பிஸ்வாலுக்கு, அந்த சம்பவமே திருப்புமுனையை ஏற்படுத்தியது. அன்றிலிருந்து இது வரை பல லட்சம் கடல் ஆமை குட்டிகளை பாதுகாத்துள்ளார். தனது வாழ்க்கையை கடல் ஆமைகளின் பாதுகாப்பிற்காகவே அர்ப்பணித்துள்ளார். கடற்கரைக்கு அருகே வசிக்கும் கிராம மக்கள் மத்தியில் கடல் ஆமைகளை பாது காக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்குகின்றார். இவரது சேவையை பாராட்டி சென்ற வருடம் ஒடிசா மாநில அரசு ‘பிஜூ பட்நாயக் விருதை’ வழங்கி கெளரவித்தது.

அழிந்து வரும் இனமாக அறிவிக்கப் பட்டுள்ள ஆலிவ் ரிட்லி இன கடல் ஆமைகள், இந்திய பெருங்கடல், பசிபிக் மகாசமுத்திரம் ஆகியவைகளில் வெதுவெதுப்பான நீர் உள்ள பகுதிகளில் வாழுகின்றன. இவை முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய சில கடற்கரைகள் ஏற்றதாக உள்ளது. அவற்றில் ஒரு கடற்கரை பகுதியே ஒடிசாவில் அமைந்துள்ள குன்ட்பாலா கிராமத்தை ஒட்டியுள்ள கடற்கரை. இவைகளுக்கு ஆமைகளை பிடிப்பவர்களால் ஆபத்தும் நிறைந்துள்ளது. அத்துடன் இந்த கடற்பகுதியல் சட்டவிரோதமாக இயக்கும் மீன்பிடி படகுகளாலும் ஆபத்தை எதிர் கொள்கின்றன. இது போன்ற காரணங்களாலேயே சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் [International Union for Conservation of Nature (IUCN)], ஆலிவ் ரிட்லி இன கடல் ஆமைகள் பாதுகாக்க வேண்டியவை என அறிவித்துள்ளது.

குன்டபாலா கடல் பகுதியில் கடலோர காவல்படை ரோந்து வருவதால், சட்ட விரோதமாக படகுகள் இயக்குவது தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறும் பிச்சிரானந்த் பிஸ்வால், இந்த பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க  அரசு அதிகாரிகள், உள்ளூர் மக்கள் துணையுடன் செயல்பட வேண்டும் என்கின்றார்.

நான் இறந்த கடல் ஆமைகளை குவியல் குவியலாக பார்த்த போது, இந்த ஜீவன்களுக்கு மனிதர்கள் ஏற்படுத்தும் அழிவைபற்றி மிகவும் வருத்தப்பட்டேன். கடலில் வாழும் ஜீவராசிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து அபாய கட்டத்தை நெருங்கின்றன. நான் ஆரம்ப காலத்தில் நண்பர்கள், கிராமத்தினரிடம் இவற்றின் அவசியத்தை பற்றி எடுத்துக் கூறினேன். அதன் பிறகு கிராம மக்களை கடல் ஆமைகளை பாதுகாக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடுத்தினேன். இளைஞர்கள் மிக ஆர்வமாக பங்கேற்றனர். 1990களில் மீன் பிடி படகுகளை கட்டுப்படுத்த கறாரான விதிகள் இல்லை. எங்கள் மாநிலத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு கடல் ஆமைகள் கடத்தி விற்பனை செய்யப்பட்டன. இப்போது சட்டங்கள் கடுமையாக இருப்பதால் நிலைமை முன்னேறியுள்ளது.

மற்றவர்களும் கடல் ஆமைகளை பாதுகாப்பதில் ஈடுபட பிச்சிரானந்த் பிஸ்வால் ஊக்கப்படுத்துகின்றார். இவற்றை பாதுகாக்கும் அவசியத்தை இவர் எடுத்துக் கூறும் விதத்தில் கவரப்பட்டு, கிராம பெண்களும் கடல் ஆமை களை பாதுகாப்பதில் ஈடுபடுகின்றனர். இவரது நடவடிக்கையால் ஈர்க்கப்பட்ட சவுமியா ரஞ்சன் பிஸ்வால், திலிப் குமார் பிஸ்வால் என்ற இரண்டு இளைஞர்கள் ஒடிரிசாவில் கடற்கரையை ஒட்டி 800 கி.மீட்டர் சைக்கிள் பயணம் செய்து கடல் ஆமை போன்ற உயிரினங்

களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கி பிரசாரம் செய்துள்ளனர். இவர்களது சைக்கிள் பயணம் லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. பிச்சாரானந்த் பிஸ்வால் பக்கவாதத்தால் தாக்கப்பட்டும் கூட, அவர் ஓய்வு எடுக்காமல் கடல் ஆமைகளை பாது காப்பதில் ஈடுபடுகின்றார். பிசியோதெரபி சிகிச்சையின் மூலம் உடல்நலம் தேறி வரும், இவர் கடல் ஆமைகளையும், இயற்கையையும் பாதுகாப்பதில் தொய்வில்லாமல் பாடுபடு கிறார்.

“தாய் தன் குழந்தையை பாதுகாப்பது போல், ஆமைகள் முட்டையிடும் இடங்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். ஜூலை மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை ஆமைகள் கடற்கரைக்கு வந்து முட்டையிடும். முட்டையில் இருந்து வெளிவரும் ஆமை குஞ்சுகள் தாய் வீடான கடலை நோக்கி செல்லும். நாங்கள் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து கடற்கரை பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்கின்றோம். நமது தேவைக்காகவோ, வசதிக்காகவோ, மற்ற உயிரினங்களின் இயற்கை வாழ்விடங்களை அழிக்க கூடாது. நாம் கடற்கரை பகுதிகளில் குப்பைகளை கொட்டினாலோ, அசுத்தப்படுத்தினாலோ, இவற்றின் சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்படும். மற்றவர்கள் நமக்கு இவ்வாறு செய்தால் எப்படி இருக்கும்” என்று கேட்கின்றார் பிச்சாரானந்த் பிஸ்வால்.

இவர் அழிந்து வரும் ஆலிவ் ரிட்லி இன கடல் ஆமைகளை பாதுகாப்பதுடன், மற்ற சேவைகளையும் செய்து வருகின்றார். ஒடிசாவை புயல் தாக்கி சவுக்கு தோப்புகள் அழிந்த போது, இவற்றை காப்பாற்றுவதில் ஈடுபட்டார். புயல் தாக்கிய போது, அந்த பகுதியில் இருந்து  பாம்புகளை பிடித்து காப்பாற்றி பாதுகாப்பான இடங்களில் விட்டார். இவ்வாறு இரண்டாயிரம் பாம்புகள் வரை பிடித்து காப்பாற்றியுள்ளார். புயல் தாக்கிய நேரங்களில் இவர் உடனே செயல்பட்டதை மக்கள் பாராட்டினார்கள். அத்துடன் அழிந்து வரும் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு செயற்கையாக கூடுகளையும் அமைத்துள்ளார். இவற்றை பார்க்கும் போது, அவரது குழந்தை பருவ ஏக்கம் நிறைவடைகிறது என்கின்றார். .

பத்தாம் வரை மட்டுமே படித்துள்ள பிச்சாரானந்த் பிஸ்வால், இயற்கையையும், கடல் ஆமைகள் போன்ற விலங்குகளையும் பார்த்து அறிவை விசாலப்படுத்திக் கொண்டுள்ள தாக கருதுகின்றார். இவர் கடல் ஆமைகள் பாதுகாப்பு செயல் திட்டம், ஆஸ்டரங்கா, ஒடிசா கடல் பாதுகாப்பு கூட்டமைப்பு, வன விலங்குகளை பாதுகாக்கும், குறிப்பாக கடல் ஆமைகளை பாதுகாக்கும் அமைப்புகளிலும் அங்கம் வகிக்கின்றார். இதுவரை தனக்கு தெரிந்தவைகளை மற்றவர்களுக்கு விளக்குகின்றார். கடல் ஆமைகள் போன்றவைகளை அடுத்த தலைமுறையினர் புத்தகங்களிலும், போட்டோக்களிலும் மட்டும் பார்த்து படிக்காமல், நேரடியாக பார்த்து அறிந்து கொள்ள வேண்டும் என்று கருதுகின்றார். மற்றவர்களும் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்கின்றார் பிச்சாரானந்த் பிஸ்வால்.

நன்றி: தி லாஜிகல் இந்தியன் இணையதளத்தில் அங்கிதா சிங்.