அரசியல்மேடை: ஆலோசனைக் கூட்டமும் அதிமுக நிலையும்!

பதிவு செய்த நாள் : 15 பிப்ரவரி 2020


அதிமுக.வின் மாவட்ட நகர, ஒன்றிய, பேரூராட்சிகளில் கட்சி பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், சென்னையில் 4 நாட்கள் நடைபெற்றது.

செயற்குழு, பொதுக்குழு, மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் எனப் படிப்படியாக ஒவ்வொரு மட்டக் கூட்டங்கள் நடைபெற்று, இப்போது நகர, ஒன்றிய, பேரூராட்சிகள் மட்டத்திலான நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் என்பது வரவேற்கத்தக்தது தான்.

இந்த ஆலோசனைக்கூட்டம் இம்மாதம் 10–ம் தேதி திங்கட்கிழமை அதிமுக தலைமை கழகத்தில் தொடங்கியது. பொதுவாக கட்சியின் தலைமை நிர்வாகிகள் பங்கேற்கும் முக்கியக்கூட்டம், தலைமை கழகத்தில் நடைபெற்றால், கட்சிக்கொடி மற்றும் தொழிற்சங்க கொடிகளுடன் நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக வருகை தருவார்கள். அந்த பகுதியில் கொடிகள் கட்டப்பட்டிருக்கும், ஒரு சிலர் தலைமை நிர்வாகிகளை வரவேற்று சுவரொட்டி அச்சடித்து ஒட்டியிருப்பார்கள்.  இவை எதுவுமே கடந்த 10–ம் தேதி அந்த பகுதியில் இல்லை.

கூட்டம் நடைபெறுகிற ராயப்பேட்டை பகுதி, வட்ட நிர்வாகிகள் – வந்திருந்தாலே நூற்றுக்கும் மேற்பட்டோர் சேர்ந்திருப்பார்கள். அப்படி  வரவில்லை. ஏதோ தடியடி நடத்தி விரட்டியபின் காட்சியளிக்கும் காலி மைதானம் போலத்தான் அவ்வை சண்முகம் சாலையும், தலைமை கழக வளாகமும் காணப்பட்டது.

அந்த வழியாக செல்பவர்கள், அதிமுக தலைமை கழகத்தை  தமிழக காவல்துறை கைப்பற்றி விட்டதோ என சந்தேகப்படும் அளவிற்கு கட்சி அலுவலக வாசலிலும், சாலைகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினரைத்தான் காண முடிந்தது. இதை கண்டு அங்கு வந்திருந்த ஒன்றிரண்டு முக்கிய பிரமுகர்களும், வேதனைப்பட்டதை,  விரக்தியுடன் பேசியதை காணவும், கேட்கவும் முடிந்தது. துடிப்புமிக்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன், எப்போதும் உயிரோட்டத்துடன் இயங்கிக் கொண்டிருந்த அதிமுக இப்போது, ஆட்சிக் கட்சியாக இருக்கும் நிலையிலும் ஏன் இந்த நிலை, இப்போதே இப்படியிருந்தால் இனி, எதிர்காலம் என்னாகும்? என்ற கவலை கட்சியினரிடம் ஏற்பட்டிருப்பதை உணர முடிந்தது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட சுமார் 72 பேர் கட்சியின் தலைமைக்கழக நிர்வாகிகளாக உள்ளனர். இவர்களில் அமைப்பு செயலாளர் பொறுப்புகளில் மட்டுமே 30க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். இவர்களின் கட்சிப்பணி என்ன? சுமார் 15 பேர் கட்சியின் செய்தி தொடர்பாளர்களாக உள்ளனர். இவர்களில் எவ்வளவு பேர், கட்சியின் நிலைப் பாட்டை, ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்றுள்ளனர் என அப்பாவித் தொண்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

1972–ம் ஆண்டு கட்சி தொடங்கிய அமரர் எம்.ஜி.ஆர். ஒரு மாபெரும் ஆளுமையாக மகத்தான மக்கள் செல்வாக்கு உள்ள தலைவராக இருந்ததால்தான் அவரால் 1977, 1980, 1984 என மும்முறை மாபெரும் வெற்றி பெற்று தொடர்ந்து சுமார் 11 ஆண்டுகள் இந்த தமிழ் மண்ணில் நல்லாட்சி நடத்த முடிந்தது. அந்த தலைவரால் அரசியலுக்கு  அழைத்துவரப்பட்ட ஒரே காணரத்தால்தான்,மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தொண்டர்கள் ஆதரவும் மக்கள் செல்வாக்கும் பெருகியது. அதனால்தான் சுமார் 28 ஆண்டுகள் அதிமுக.வின் நிரந்தரப் பொதுச் செயலாளராக இருந்து கட்சியை கட்டிக்காப்பாற்ற முடிந்தது. அவ்வப்போது தோல்விகள் எதிர் கொண்டாலும் அதையெல்லாம் எதிர்கொண்டு 1991, 2001, 2011, 2016 என அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்து முதலமைச்சர் பொறுப்பேற்று மக்களுக்கான நல்லாட்சியை வழங்கினார். கடைசிவரையிலும் கட்சியின் நிர்வாகிகளை கட்டுக்கோப்புடன், கட்டுப்பாட்டுடனும் வைத்திருந்தார்.

மறைந்த அந்த இருபெரும் தலைவர்களை போன்ற தனித்த செல்வாக்கோ, மக்களின் ஏகோபித்த ஆதரவோ கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் பிடிப்போ தற்போதைய தலைமைக்கு நிச்சயமாக இல்லை. ஆட்சி இருக்கிறது. அந்த ஆட்சியின் தலைமை பொறுப்பில் இருப்ப வர்கள் கட்சியிலும் இரட்டைத் தலைமையாக இயங்கி வருகிறார்கள். அதனால் அவர்கள் பின்னால் கட்சி இருப்பது போன்ற தோற்றம் உள்ளது. இது மாயத்தோற்றம்தான் என்கிறார் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவர்.

2021 வரை, அதாவது ஆட்சியில் அதிமுக இருக்கும் வரை கட்சி கட்டுக்கோப்பாக இருப்பது போன்று தெரியும். ஆட்சி போய் விட்டால், 90–களுக்கு பிறகு கட்சிக்கு வந்து, ஒரு குடும்பத்தின் சிபார்சால் பணம் கொடுத்து எம்.பி, எம்.எல்.ஏ., சீட் பெற்றவர்கள், கோடிகளை கொட்டிக்கொடுத்து மந்திரி பதவி பெற்றவர்கள், கட்சிப் பதவிகளையும் காசு கொடுத்து வாங்கியவர்கள் என்ன முடிவெடுப்பார்கள். ‘‘அற்ற குளத்து அறு நீர்ப் பறவை போல’’ முகாம் மாறிச் சென்று விடுவார்களா? அல்லது போராடிப் பார்ப்போம் என்று இங்கேயே தொடர் வார்களா? என்பது மிகப்பெரிய கேள்வியாக தொக்கி நிற்கிறது. எதிர்வரும் 2021 சட்டசபை பொதுத்தேர்தல் என்பது, மிக மிக சிக்கலான நிலையைதான் அரசியல் கட்சிகளுக்கு தோற்றுவிக்கும். குறிப்பாக அதிமுக.வுக்கு மிகப்பெரிய சவாலாக இந்த தேர்தல் இருக்கும்.

ஜெயலலிதா 2014 நாடாளுமன்ற தேர்த லில் அதிமுக.வை தனித்து களம் இறக்கி 37 எம்.பி.க்களை பெற்றுத்தந்திருந்தார். ஆனால், 2019 தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்தும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. அப்படியே 38 தொகுதிகளை திமுக அணிக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு, தப்பித் தவறி தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றனர்.

2016 சட்டசபை பொதுத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் ‘இரட்டை இலை’ சின்னத்தை களம் இறக்கி 134 இடங்களில் வெற்றி பெற்று 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக் கட்சியே மீண்டும் ஆட்சி அமைத்திட்ட சாதனையை அதிமுக படைத்திருந்தாலும், 100 தொகுதிகளில் அக்கட்சி  தோல்வி அடைந்து விட்டது என்பதை அக்கட்சியினர் தெளிவாக உணர வேண்டும். ‘அம்மா’ இருக்கும் போதே இதுதான் நிலைமை. இப்போது அம்மா இல்லாத அதிமுக என்ன செய்யப் போகிறது? கூட்டணி இன்றி தனித்து போட்டியிட முடியாது. கூட்டணிக் கட்சிகளின் பேரங்களும் பலமாக இருக்கும். அவர்களுக்கு கணிசமான இடங்களை ஒதுக்கி விட்டு, குறைந்த அளவிலான இடங்களில் நின்றால், தனி மெஜாரிட்டி கிடைக்குமா? குறைவான இடங்களை பெற்றால், கூட்டணி ஆட்சிக்கு சம்மதிக்குமா?  இப்படி பல்வேறு கேள்விகள்.

திமுக இதே கூட்டணியோடு களம் இறங் கினால், நிச்சயம் அது வலுவான அணியாக இருக்கும். ஏற்கனவே 100 எம்.எல்.ஏ.க்கள் என்ற வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது.

புதிய அரசியல் சக்தியாக நடிகர் ரஜினிகாந்த் களத்திற்கு வருகிறார். ஏற்கனவே, கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்த கமல்ஹாசனும் இருக்கிறார். யாருடைய வாக்கு வங்கி இவர்களுக்கு செல்லும். அப்படி வாக்குகள் சிதறும்போது அது யாருக்கு ஆதாயமாக அமையும். பிரதான எதிர்க்கட்சியான திமுகவுக்கு அந்த ஆதாயம் கிடைக்குமா? ஆட்சிக் கட்சியான அதிமுக.வுக்கு அது பலன் தருமா?

இப்போது நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்கள் அதற்கான வியூகமா? அந்த வியூகம் வெற்றி தேடித் தருமா? அந்த வெற்றியை அடைய கட்சி நிர்வாகிகளை, தொண்டர்களை, பொதுமக்களை கட்சித் தலைமை எப்படி அணுகப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.