துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 68

பதிவு செய்த நாள் : 15 பிப்ரவரி 2020

செஞ்சிக்கோட்டை ஒரு மீள் பார்வை!

தமிழ்நாட்டின் புராதனச் சின்னங் களில் ஒன்றாகவும், தொன்மை சிறப்பு வாய்ந்ததாகவும் விளங்குகின்ற ‘செஞ்சிக் கோட்டை’ குறித்து இந்த வாரம் காண்போம்.

முந்தைய தென் ஆற்காடு மாவட்டம், இன்றைய விழுப்புரம் மாவட்டத்தின்  வடமேற்கு பகுதியில் திண்டிவனம் நகரிலிருந்து திருவண்ணாமலை நகருக்கு செல்லும் வழியில் அமைந் துள்ளது செஞ்சிக்கோட்டை. மேற்கு பகுதியில் ராஜகிரி, வடக்கில் கிருஷ்ணகிரி, தெற்கில் சந்திரகிரி – எனும் மூன்று மலைகளை உள்ளடக்கி முக்கோண வடிவில் இந்தக்கோட்டை அமைந்துள்ளது.

இந்த மூன்று மலைகளையும் இணைத்து அலங்கம் ஒன்று கட்டப் பட்டுள்ளது. இது அறுபதடி அகலம் கொண்டது. இதன் வெளிப்புறத்தில் சுமார் எண்பது அடி அகலமுள்ள அகழி யும் வெட்டப்பட்டுள்ளது. செஞ்சிக் கோட்டையை சுற்றிலும் மூன்று முக்கிய கொத்தளங்கள் அமைந்துள்ளன.

இந்த கோட்டை சுமார் ஐந்து மைல் சுற்றுளவு கொண்டதாக உள்ளது. கீழ்க் கோட்டைக்கு இரண்டு முக்கிய வாசல்கள் உள்ளன. வட பகுதியில் இருப்பதை வேலூர் வாசல் அல்லது ஆர்க்காட்டு வாசல் என அழைப்பர். கிழக்குப் பகுதியில் உள்ளது புதுச்சேரி வாசல் எனப்படும். எந்த வழியாக கோட்டைக்கு சென்றாலும் ராஜகிரி அலங்கத்தை கடந்து செல்ல ஒரே வழிதான் உண்டு. இதுவும் 24 அடி அகலம், 60 அடி ஆழம் கொண்ட மிகப்பெரிய கண வாயை (ஏரியை) தாண்டித்தான் செல்ல வேண்டும். மலை – உச்சிக்கு செல்வதற்கு படிக்கட்டுகள் அமைந்துள்ளன. ராஜகிரியின் உச்சியை அடைய ஏழு வாயில்களை கடந்து செல்ல வேண்டும். செஞ்சிக்கோட்டைப் பகுதியில் கோடையிலும் வற்றாத நீர் நிலை உள்ளது.

ராஜகிரியின் உச்சிப் பகுதியில் அரங்காநாதர் திருக்கோயில் உள்ளது. கீழ்க்கோட்டையை பகுதியில் வேட்கட ரமண சுவாமி திருக்கோயிலும், சாதத் உல்லாகான்’ என்பவர் பெயரிலான மசூதி ஒன்றும்  உள்ளது. (இந்த மசூதி 1717–18–ம் ஆண்டுகளில் கட்டப்பட்டது) ஒரு காலத்தில் இந்த பகுதியை ஆட்சி செய்த சிற்றரசர்களுக்கு தலைநகராக செஞ்சிக்கோட்டை இருந்துள்ளது. ஆனால் அவர்கள் வாழ்ந்த அரண்மனை எதுவும் இல்லை.  அவை எல்லாம் மண் மேடாக காட்சியளிக்கின்றன. ஆனாலும் ஒரு சில இடங்களில் அரண்மனை கட்டடச் சிதிலங்கள், பெரும் தூண்கள், கல்யாண மகால், உடற் பயிற்சிக் கூடம், தானியக் களஞ்சியங்கள் என பல அடையாளங்கள் உள்ளன.

செஞ்சிக் கோட்டைக்கு, இரண்டு மைல் தொலையில் சிங்கவரம் என்னும் ஊர் இருக்கிறது. அங்கு குடவரைக் கோயில் ஒன்று உள்ளது. சிங்கவரத்தை விஷ்ணு செஞ்சி என்றும், கோட்டை உள்ள பகுதியை சிவ செஞ்சி என்றும், அருகில் உள்ள மேலைச் சேரி எனும் ஊரை பழைய செஞ்சி என்றும் கூறுவார்கள்.

செஞ்சிக்கோட்டை எப்போது உருவாக்கப்பட்டது என்பது குறித்து வரலாற்று பூர்வ விவரங்கள் முழுமையாக கிடைக்க வில்லை. ஆனாலும் 1200–ம் ஆண்டு வாக்கில் ஆனந்தக் கோன் என்ற சிற்றரசர் இதை கட்டியதாக கர்ண பரம்

பரை செவிவழிச் செய்தியாக அறிய முடிகிறது. ஆனாலும் கூட 14–ம் நூற்றாண்டு காலத்தில்தான் செஞ்சிக் கோட்டை பிரபலமாகியுள்ளது.

விஜய நகர சாம்ராஜ்ய காலத்தில் மதுரை, தஞ்சை உள்ளிட்ட சில பிரதேசங் களை நாயக்க மன்னர்கள் ஆட்சி புரிந்த நாட்களில் செஞ்சிப் பகுதியையும் நாயக்க மன்னர்கள் ஆண்டதாக தெரிகிறது. 1464–ம் ஆண்டு வாக்கில் வேங்கடபதி நாயக்கர் காலத்தில், இந்த செஞ்சிப்பகுதியில் சிற்றரசு ஒன்று உருவாக்கியுள்ளது. இவரது வம்சாவழி வந்த துபாக்கி கிருஷ்ணப்ப நாயக்கர் என்பவர் இப்பகுதியில் அப் போது மிகவும் பிரபலமாக இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தங்கடிப்போர் என்ற மிகப்பெரிய போர் ஏற்பட்டு விஜய நகர சாம்ராஜ்யமே நிலைகுலைந்து போனது. நாடு பிளவுபட்டது. அப்போது தஞ்சை நாயக்க மன்னர்கள் செஞ்சிப் பகுதியை கைப்பற்றி சிறிது காலம் தங்கள் வசம் வைத்துள்ளனர். பலகீனமான நிலையில் இந்த பகுதி இருப்பதை அறிந்த  பீஜப்பூர் சுல்தான்கள், படையெடுத்து வந்து செஞ்சிப் பகுதியை கைப்பற்றி தங்கள் ஆதிக்கத்தை நிறுவியுள்ளனர். 1649–ம் ஆண்டு சுல்தான்களின் பிரதிநிதியாக ‘கில்லேதார்’ எனும் பெயரில் நிர்வாகி ஒருவரை நியமித்து ஆட்சி  செய்தனர். செஞ்சிப் பகுதியின் சிறப்பை கேள்விப்பட்ட மராட்டிய மாவீரன் சிவாஜி, படையெடுத்து வந்து இப்பகுதியை கைப்பற்றி மகா ராஷ்டிரப் பேரரசின் பிரதிநிதியாக ஒரு அதிகாரியை நியமித்துள்ளார். மராட்டிய சிவாஜியின் மறைவுக்கு பிறகு மகாராஷ்டிரர்களிடையே பிளவு ஏற்பட்டு, சண்டை மூண்டபோது அங்கு முக்கிய பிரதிநிதியதாக இருந்த ராஜாராம் தப்பி வந்து செஞ்சியை கைப்பற்றி அதை தலைநகராக்கிக் கொண்டு சிறிது காலம் இருந்துள்ளார்.

இதையடுத்து மொகலாய மன்னர் அவுரங்கசீப்பின் முதன்மைத் தளபதி களில் ஒருவரான ஜூல்பிகார்கான், செஞ்சிக்கு படையெடுத்து வந்து ராஜராம் படையினரோடு சண்டை யிட்டான். சுமார் ஏழாண்டுக் காலம் நீடித்த சண்டைக்குப்பிறகு, ராஜாராம் அங்கிருந்து ரகசியமாக தப்பி சென்றதும் செஞ்சிக் கோட்டையை ஜூல்பிகார்கான் கைப்பற்றினார்.

அவர் தன்னு டைய பரிவாரத்தையும், ஆட்சிப் பொறுப்பையும் முக்கிய பிரமுகர் ஒருவர்வசம் ஒப்படைத்து சென்றார். ‘கில்லேதார்’ என்ற பொறுப்பு அதிகாரிகாரியான அவர் வழி வந்த சொரூபப் சிங் மகன்தான், இப்போதும் தமிழ் நாட்டில் பரவலாக பேசப்படும் ‘தேசிங்கு ராஜன்’ என்ற தேஜ்சிங்.

அந்த காலகட்டத்தில் செஞ்சி ராஜ்யம் என்பது கர்நாடக ஆளுமைக்கு  உட்பட்டு இருந்தது. சொரூப் சிங் மறைந்ததும், அந்த தகவலை கர்நாடக பிரதேசத்தின் பொறுப்பில் இருந்த ‘சுபாதார்’ எனப்படும் உயர் அதிகாரிக்கு தெரிவித்துவிட்டு, அவரது அனுமதியுடன்தான் தேஜ்சிங் பதவி எற்று இருக்க வேண்டும். ஆனால் தேஜ்சிங் அவ்வாறு செய்யாமல், தாமே சுயமாக முடிவெடுத்து பதவி ஏற்றதால், அப்போது கர்நாடக ‘சுபாதார்’  பொறுப்பில் இருந்த சாதத்துல்லாகான், தேஜ்சிங் என்ற ராஜா தேசிங்குக்கு எதிராக போர் தொடுத்தார். இந்த போரில் தேஜ் சிங் கொல்லப்பட்டார். உடனே சாதத்துல்லாகான்,ன் உறவினர் ஒருவரை செஞ்சிப் பிரதேச கில்லேதூரராக (நிர்வாகியாக) நியமித்தார். அடிக்கடி சண்டையும், சச்சரவுமாக இருந்து ஆட்சி மாற்றங்களும் நிகழ்ந்ததால் செஞ்சிப்பகுதி பெரும் பின்னடைவை சந்தித்தது. காலப்போக்கில் செஞ்சிக் கோட்டையின் முக்கியத்துவமும் குறைந்து போனது.

ஆனாலும் போரும் கைப்பற்றும் படலங்களும் குறைந்தபாடில்லை. சிற்றரசர்களின் கொட்டம் ஒடுங்கி, ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும் தென்னகப் பகுதியை ஆக்கிரமிக்கத் தொடங்கினர். அந்த வகையில் 1750–61 கால கட்டங்களில் பிரெஞ்சுக்காரர்கள் வசமும், 1761–க்கு பிறகு பிரிட்டிஷ்காரர்கள் வசமும் செஞ்சிக்கோட்டை இருந்தது. 1780–ம் ஆண்டு திடீரென ஹைதர்அலி படை எடுத்து வந்து ஆங்கிலேயர்களோடு போரிட்டு செஞ்சிக் கோட்டையை கைப்பற்றினார். இந்த போர்தான் செஞ்சிக் கோட்டையில் நடைபெற்ற கடைசிப் போர் என்பார்கள். நாளடைவில் பிரிட்டிஷார் வசம் வந்த செஞ்சிக் கோட்டை முற்றிலுமாக, பொலிவிழந்து, அதன் பழம் பெருமையை இழந்து விட்டது. இன்று இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு புராதனச் சின்னமாக மட்டுமே காட்சி அளிக்கிறது.