ஆஸ்திரேலியா நிராகரித்தவர்களுக்கு வாழ்வு அளித்த கனடா!

பதிவு செய்த நாள் : 15 பிப்ரவரி 2020

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கை தேடி சென்ற இளம் ஜோடி, ஒரு தீவில் சிறைவைக்கப்பட்டனர். ஒரு புறம் கர்ப்பிணியான மனைவி. மறுபுறம் கணவன் தனிமை சிறையில் என தவித்தனர். இவர்களுக்கு கனடா புகலிடம் அளித்து மறு வாழ்வளித்துள்ளது.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த டிமா என்ற அகதி பற்றிய செய்தி சில மாதங்களுக்கு முன் பத்திரிகைகளின் தலைப்பு செய்தியாக வெளிவந்தது. இவர் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக ஹானி என்பவருடன் சேர்ந்து ஆஸ்திரேலியா செல்ல முடிவு செய்தார். இருவரும் படகில் சென்றனர். படகில் வருபவர்களை ஆஸ்திரேலியா கைது செய்து, ஒரு தீவில் சிறைவைக்கும் என்று, அப்போது இந்த இளம் ஜோடிக்கு தெரியவில்லை.

ஆஸ்திரேலியாவில் புதிய வாழ்க்கை அமைத்துக் கொள்ள சென்ற டிமாவும், அவரது கணவர் ஹானியும் ‘நெவ்ரு’ என்ற தீவில் சிறை வைக்கப்பட்டனர். கர்ப்பமுற்ற டிமாவுக்கு பிரச்னைகள் தொடர்ந்தன. அவர் சிசேரியன் மூலம் பிரசவம் செய்து கொள்ள ஆஸ்திரேலியா செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. நெவ்ரு சிறை நிர்வாகம் முதலில் டிமாவை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப மறுத்தது. பிறகு அவரை மட்டும் அனுப்ப சம்மதித்தது. அவரது கணவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

கடினமான பிரசவம், கணவர் தீவில், குழந்தையுடன் டிமா தனிமையில் மறுபுறம் என வாழ்க்கையையே சோகமயமானது. இந்த சந்தர்ப்பத்தில் டிமா–ஹானி தம்பதிக்கு கனடா அரசு உதவிக்கரம் நீட்டியது. கனடா அரசின் ஸ்பான்சர்ஷிப் திட்டத்தின்படி, டிமா–ஹானி தம்பதிகள், அவர்களது குழந்தை முகமது ஆகியோர் கனடாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களுக்கு டொரோண்டோவில் நிரந்தர வாழ்விட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் மகனுடன் தவித்த டிமாவும், தனிமையில் தவித்த ஹானியும் கனடாவில் ஒன்றாக இணைந்துள்ளனர். இவர்கள் வேலை தேடிக் கொள்ளும் வரை, ஸ்பான்சர் செய்தவர்கள் குறிப்பிட்ட தொகையை மாதா மாதம் வழங்குவார்கள்.