அமெரிக்காவுடன் ஒப்பந்தம் வேண்டாம்: பிப்ரவரி 17ஆம் தேதி விவசாயிகள் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2020 13:20

புதுடெல்லி

அமெரிக்காவுடன் குறுகிய இடைக்கால ஒப்பந்தமும் நீண்ட கால ஒப்பந்தமும் இந்திய அரசு செய்து செய்து கொள்ளக்கூடாது என்று அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது, ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை கண்டித்தும் ஒப்பந்தத்திற்கான தங்கள் எதிர்ப்பை உறுதி செய்யவும் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி அகில இந்திய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்திருக்கிறது.

ராஷ்டிரிய கிசான் மகா சங்கம்

அகில இந்திய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான வேண்டுகோளை ராஷ்டிரிய கிசான் மகா சங்கம் விடுத்துள்ளது. இந்த அமைப்பு வலதுசாரி சங்கங்களின் அமைப்பாகும்.

ராஷ்டிரிய கிசான் மகா சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் இருந்து உயர் அதிகாரம் உள்ள அதிகாரிகளின் குழுவொன்று டில்லிக்கு வந்து இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது.

 அந்தப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து டிரம்ப் வரும் பொழுது ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.  

இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் இந்திய விவசாயிகள் பேரழிவை எதிர்கொள்வார்கள்.  

பேச்சுவார்த்தைகளின் படி பால் பொருள்கள், ஆப்பிள், வால்நட், அல்மோண்ட் சோயாபீன்ஸ்,  கோதுமை,  அரிசி, சோளம், மற்றும் கோழி மாமிசம், கோழி முட்டைகள்  ஆகியவை மீதான இறக்குமதி தீர்வையை  இந்தியா குறைக்கவேண்டும்.

அமெரிக்காவிலிருந்து ரூ. 42,000 கோடி மதிப்புள்ள தானியங்கள், பழவகைகள் ,கொட்டை வகைகள், பால் பொருட்கள், கோழி மாமிச பொருட்களை ஆண்டுதோறும் இந்தியா இறக்குமதி செய்ய வேண்டும் என இரு தரப்பு அதிகாரிகளும் புதுடில்லியில் நடந்த பேச்சுவார்த்தைகளில் முடிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் பால் பண்ணைத் தொழில் என்பது சிறிய நடுத்தர விவசாயிகளின் வாழ்க்கைத் தொழிலாக உள்ளது.  இவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஒன்று முதல் நான்கு ஐந்து பசுமாடுகள் வளர்த்து கறக்கும் பாலை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விற்பனை செய்கிறார்கள்.

 இந்நிலையில் ஆயிரக்கணக்கான பசு மாடுகளை வைத்து பெரிய அளவில் தொழில் நடத்துகிற அமெரிக்க பண்ணைகளின் முன் இந்திய விவசாயிகள் தாக்குப் பிடிப்பது மிகவும் கஷ்டம்.  எனவே அமெரிக்கா கேட்டுக் கொள்கிறது என்கிற காரணத்திற்காக பால் பொருள்கள் மீதான தீர்வையையும் இந்தியா குறைக்கக் கூடாது என்று ராஷ்ட்ரிய கிசான் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவில் கோதுமை, மக்காச்சோளம், ஆகியவை எல்லாம் மரபணு திருத்தப்பட்ட விதைகளைக் கொண்டு பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது, அமெரிக்காவிலிருந்து  கோதுமை சோயாபீன்ஸ் ஆகியவைகளை நாம் இறக்குமதி செய்தால் மரபணு மாற்றப்பட்டகோதுமை, சோயா பீன்ஸ்  இந்தியாவுக்கு வந்து சேரும்.  மரபணு மாற்றப்பட்ட உணவு தானியங்கள்  இந்திய மக்கள் மீது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது யாருக்கும் தெரியாது என்று ராஷ்ட்ரிய கிசான் மகாசங்கம் எச்சரித்துள்ளது

இந்தியாவில் விவசாயிகளிடம் இருந்து கோதுமை நெல்வாங்கி  இருப்பு வைத்து ரேஷன் மூலமாக  மானிய விலையில் விற்பதை அமெரிக்கா ஏற்கனவே ஆட்சேபித்துள்ளது.

உலக வர்த்தக நிறுவனத்தில் ஆட்சேபனை செய்து அமெரிக்கா  வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம் இந்திய விவசாயிகளை நாசம் செய்வதற்கான நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியுள்ளது .இந்திய அரசு அமெரிக்காவுடன் கோதுமை வாங்க ஒப்பந்தம்  செய்தால்  மிகவும் கூடுதலான மானியம் வாங்கும் அமெரிக்க விவசாயிகளுடன் மிக மிக குறைந்த மானியம் வாங்கும்  இந்திய விவசாயிகள் போட்டியிட நேரிடும்.

இந்த போட்டியில் இந்திய விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் .அமெரிக்கா ஆண்டுக்கு 867 பில்லியன் டாலர் அளவுக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்குகிறது. இந்தியா தன்னுடைய விவசாயிகளுக்கு வழங்கும் மானியம் அதில் 14% அளவுக்கு வருகிறது.  

இந்நிலையில் இந்திய விவசாயிகளைப் பற்றிய கவலை இல்லாமல் தன்னிச்சையாக அமெரிக்க அரசுடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்ய முற்பட்டால் இந்திய விவசாயிகள் அரசை எதிர்த்து கடுமையான போராட்டத்தில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

 விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி அகில இந்திய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ராஷ்ட்ரிய கிசான் மகா சங்கம் அழைப்பு விடுக்கிறது.

இவ்வாறு அந்த சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நரேஷ் டிகைத்

விவசாயிகள் கூட்டமைப்பு என்ற பெயரில் அகில இந்திய அளவில் இயங்கும் விவசாயிகள் சங்கங்கள் ஒரு அணியாக திரண்டுள்ளனர்,  இந்த கூட்டணியின் தேசிய பொதுச்செயலாளராக யுத்வீர் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவுடன் எந்த ஒப்பந்தமும் வேண்டாம் என்று தனிக் கடிதம் எழுதியுள்ளார்

நரேஷ் டிகைத் தலைமையில் இயங்கும் பாரதிய கிசான் சங்கம் என்ற அமைப்பும் இந்த அகில இந்திய விவசாயிகள் கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.