தமிழக பட்ஜெட் 2020: பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு; ஓபிஎஸ் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2020 12:25

சென்னை,

2020-2021 ஆம் ஆண்டு பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இன்று காலை 10:00 மணிக்கு பேரவை கூடியதும், 2020-21-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசினார்.

பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியை வழங்க தமிழக அரசு அதிமுக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.34, 181.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நடப்புக் கல்வி ஆண்டில் 76 ஆயிரத்து 927 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படிப்புக்குத் தேவையான பொருட்களை விலையின்றி வழங்கும் திட்டத்திற்கு ரூ.1,018.39 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.966.46 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் மாணவர் ஆசிரியர் விகிதம் கட்டாயக் கல்விச் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட விகிதத்தைக் காட்டிலும் போதுமான அளவில் உள்ளது.

கல்வி தரத்தை மேம்படுத்த அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ரூ.520 கோடி மதிப்பில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படும். கல்வித்துறைக்காக மொத்தம் ரூ.34,841 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக பட்சமாக 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

உயர்கல்வி துறைக்கு ரூ.5542 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை அரசு பொறியியல் கல்லூரியின் 75-வது ஆண்டு நிறைவு விழாவினையொட்டி கல்லூரின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் பேசினார்.