கூடுதல் மகசூல் தரும் புதிய நெல், சிறுதானிய ரகங்கள் அறிமுகம்

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2020 12:17

சென்னை

கூடுதல் மகசூல் தரும் புதிய நெல், சிறுதானிய ரகங்கள் அறிமுகம் செய்யப்படும் என 2020 - 2021ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது உரையில் வேளாண்துறைக்கான வரவு செலவுத் திட்டத்தில் கூறியுள்ளார்.

காவேரி டெல்டா பகுதியினை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்தது, தமிழக அரசு வேளாண்மைத் துறைக்கு அளித்து வரும் பெரும் முக்கியத்துவத்தையே குறிக்கிறது.

நீரை சிக்கனமாக பயன்படுத்தும் திருந்திய நெல் சாகுபடி முறையானது (System of Rice Intensification)  2020-21 ஆம் ஆண்டில் 27.18 இலட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு விரிவுபடுத்தப்படும். 11.1 இலட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு நேரடி நெல் விதைப்பு முறை, நாகப்பட்டினம், திருவாரூர், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்து நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள்  மற்றும் பருத்தி ஆகியவற்றில் அதிக விளைச்சல் தரும் இரகங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

நிலையான கரும்பு உற்பத்திக்கு 2020-21 ஆம் ஆண்டில் 12 கோடி ரூபாய் செலவில் 74,132 ஏக்கர் பரப்பளவில், நீடித்த நவீன கரும்பு சாகுபடித் திட்டத்தின் தொழில்நுட்பங்களுடன் புதிய இரகங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

கரும்பு உற்பத்தியாளர்களுக்கு கரும்பு உற்பத்திக்கான உற்பத்தி ஊக்கத்தொகை, 2019-20 ஆம் ஆண்டின் அரவைப்பருவத்திலும் தொடர்ந்து வழங்கப்படும். இந்த நோக்கத்திற்காக 2020-21 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 165 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டின் அரவைக்காலத்திற்கு  டன் ஒன்றிற்கு 100 ரூபாய் வரை என்ற அளவில் 110 கோடி ரூபாயை போக்குவரத்து மானியமாகவும் இந்த அரசு வழங்கும். இத்தகைய நடவடிக்கைகள், தமிழ்நாட்டில் சர்க்கரை உற்பத்தித் தொழில் புத்துயிர் பெற உதவும்.

சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பண்ணைய முறை, தற்போது 28 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு, 2020-21 ஆம் ஆண்டில் 50 கோடி ரூபாய் நிதியொதுக்கீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. கூட்டுப்பண்ணைய முறையின் தொடர் முயற்சியாக, சிறு மற்றும் குறு விவசாயிகள், உழவர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்டதன் விளைவாக, கடந்த ஆண்டுகளில் ஆறு இலட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

பயன்தரும் தோட்டக்கலைப் பயிர்களை ஊக்குவிப்பது விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும், மாறிவரும் ஊட்டச்சத்துத் தேவைகளை எதிர் கொள்ளவும் வகை செய்கிறது. இந்த அரசு, இதற்கான சிறப்பு மையங்களை அமைக்க 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, கடலூரில் முந்திரி, பெரம்பலூரில் வெங்காயம், தேனியில் முருங்கை, ஈரோட்டில் மஞ்சள், தென்காசியில் எலுமிச்சை மற்றும் தூத்துக்குடியில் மிளகாய் ஆகியவற்றிற்கான மையங்கள் அமைக்க உள்ளது. தோட்டக்கலைப் பயிர் சாகுபடிப் பரப்பை அதிகரிக்க, 2020-21 ஆம் ஆண்டில்,  325 மெட்ரிக் டன் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

சூரிய மின்சார பம்புகள்

 10 குதிரைத் திறன் வரை கொண்ட 17,500 தனித்தியங்கும் சூரிய சக்தி பம்பு செட்டுகளை தமிழ்நாட்டில் அமைப்பதற்கு மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அனுமதி அளித்துள்ளது. இந்த தனித்தியங்கும் சூரிய சக்தி பம்பு செட்டுகளை 70 சதவீதம் மானியத்துடன் வேளாண் பொறியியல் துறை அமைத்து தரும். வேளாண்மைக்கான மின் இணைப்பிற்கு விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீட்டுச் செலவு 472.85 கோடி ரூபாய் ஆகும். இதில், தமிழ்நாடு அரசின் பங்கு தொகைக்காக, 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் 208.74 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் பொருள் பதப்படுத்துதல்

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில்  77.94 கோடி ரூபாய் செலவில் 53.36 ஏக்கர் பரப்பளவில் மெகா உணவுப் பூங்கா அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

2020-21 ஆம் நிதியாண்டில், 218 கோடி ரூபாய் செலவில், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் மேலும் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாகப்பட்டினம், இராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் உணவுப் பூங்காக்கள் 70 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.  ஒருங்கிணைந்த உழவர் விற்பனை வளாகங்கள் திருவண்ணாமலை, தருமபுரி, மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில்  5 இடங்களில் முன்னோடித் திட்ட அடிப்படையில் மொத்தம் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு - வேளாண் சந்தை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் நிறுவப்படும்.

2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் வேளாண்மைத் துறைக்கு 11,894.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


கரும்பு விவசாயிகளுக்கு

நிலையான கரும்பு உற்பத்திக்கு 2020-2021ம் ஆண்டில் ரூ.12 கோடி மதிப்பில் 74,132 ஏக்கரில் நீடித்த நவீன கரும்பு சாகுபடி திட்டங்களின் தொழில் நுட்பங்களுடன் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசனம் மேற்கொள்வதை ஊக்குவிக்க, 2019-20 ம் ஆண்டில் ரூ.68.35 கோடி நிதி அள்ளிக்கப்பட்டது. 2020-21 ம் ஆண்டில் ரூ.75 கோடி கூடுதல் நிதியுதவியுடன் அத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

கால்நடை மருத்துவம்

20 புதிய கால்நடை மருந்தகங்கள் மற்றும் 400 புதிய கிளை நிலையங்களையும் தோற்றுவித்துள்ளது.

2011-12 முதல் 614.57 கோடியில் 2037 புதிய கால்நடை மருத்துவ பிரிவு கட்டடங்கள் கட்டப்பட்டதுடன் ரூ.87.20 கோடியில் 1460 கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டள்ளன.

2011-12 முதல் 1060 கால்நடை கிளை நிலையங்களை கால்நடை மருந்தகங்களாகவும் 10 கால்நடை மருந்தகங்களை கால்நடை மருத்துவமனைகளாகவும் 6 பெரு மருத்துவமனைகளையும் 2 கால்நடை மருத்துவமனைகளையும் கால்நடை பன்முக மருத்துவமனைகளாக தரம் உயர்த்தியும் உள்ளது.