புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா மரியாதை

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2020 12:08

புதுடில்லி,

   புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா, ஆகியோர் மரியாதை செலுத்தினார்.

காஷ்மீர் மாநிலம் புல்வமாவில் கடந்த ஆண்டு 2019 பிப்ரவரி 14-ம் தேதி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதல் தாக்குதல் நடைபெற்றதன் ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

வீரர்களின் உயிர்த்தியாகத்தை நினைவுகூர்ந்து பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி மரியாதை

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த ஆண்டு நடைபெற்ற கொடூரமான புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த துணிச்சலான வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்.  நாட்டை பாதுகாக்கும் சேவையில் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த வீரர்கள் போற்றத்தக்கவர்கள். வீரர்களின் தியாகத்தை இந்தியா ஒருபோதும் மறவாது” என்று தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை

உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ”புல்வாமா தாக்குதலின் தியாகிகளுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்.

நமது தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக மிகுந்த தியாகம் செய்த எங்கள் துணிச்சலான இதயங்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடையதாக இருக்கும்" என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி

இது தொடர்பாக ராகுல் டுவிட்டரில் 3 கேள்விகளை எழுப்பி உள்ளார். அதில், புல்வாமா தாக்குதலில் நமது சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்த நினைவு தினம் இன்று. இந்நாளில் நான் கேட்பது,
இந்த தாக்குதலால் அதிகம் பயனடைந்தது யார்?
தாக்குதல் தொடர்பாக விசாரணையில் விளைவு என்ன?
இந்த தாக்குதல் நடப்பதற்கான பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பாஜக அரசில் பொறுப்பேற்க போவது யார்? இவ்வாறு கேள்விகளை எழுப்பி உள்ளார் ராகுல் காந்தி.

காங்கிரஸ் தலைவர் சோனிய காந்தி, அமைச்சர் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, ஹர்தீப் பூரி மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஆண்டு நடைபெற்ற கொடூரமான புல்வாமா தாக்குதலை நினைவுக்கூர்ந்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்