ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் கோரும் வழக்கு: உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2020 11:50

புதுடில்லி

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் இன்று முடித்து வைத்தது

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் தனபால் முன் உள்ள இந்த வழக்கில் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற அதிகாரம் எந்த நீதிமன்றத்திற்கும் இல்லை.

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் தனபால் உரிய முடிவை விரைவில் எடுப்பார் என்று நம்புகிறோம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பொப்தே கூறினார்.

இந்நிலையில் இந்த வழக்கில் மேல் விசாரணை நடவடிக்கைகள் எதுவும் தேவையில்லை என நீதிமன்றம் கருதுகிறது. அதனால் இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைக்கிறது என்று தலைமை நீதிபதி  பொப்தே கூறினார்.

திமுக தரப்பில் சக்கரபாணி, வெற்றிவேல், தங்கத்தமிழ்ச்செல்வன் ஆகியோரும் இதே விவகாரம் தொடர்பாக முறையீடு செய்திருந்தனர்.

தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை உருவாக்கி, ஆவலைத் தூண்டிய வழக்கு கடைசியில் எந்த பரபரப்புக்கும் இடமளிக்காமல் முடிவுக்கு வந்தது.

வழக்கு தொடர்பான பூர்வாங்க விவரங்கள் 

2017, பிப்ரவரி 18-ஆம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம், க. பாண்டியராஜன், செம்மலை, சரவணன், மாணிக்கம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இவர்களை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தலைவரின் உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து திமுக தரப்பில் சக்கரபாணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

வெற்றிவேல், தங்கத்தமிழ்ச்செல்வன் ஆகியோரும் இதே விவகாரம் தொடர்பாக முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் சட்டப்பேரவைத் தலைவருக்கு அரசியலமைப்புச் சட்டம் அளித்திருக்கும் போது, அதுதொடர்பான கேள்விக்குள் நீதிமன்றம் ஏன் செல்ல வேண்டும்? என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கடந்த ஜனவரி 24-ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பொப்தே தலைமையிலான அமர்வு முன் திமுக தரப்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜராகி, 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதற்கு பட்டியலிடுமாறு கேட்டுக் கொண்டார். 

மேலும், அண்மையில் மணிப்பூர் மாநில வனத் துறை அமைச்சர் ஷியாம் குமார் தகுதி நீக்கம் தொடர்புடைய வழக்கில், நான்கு வாரத்தில் முடிவு செய்யுமாறு அதன் சட்டப் பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை கபில் சிபில் சுட்டிக்காட்டினார்.