தமிழ்நாடு பட்ஜெட்: பேரிடர் மேலாண்மை நிதி ஒதுக்கீடு

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2020 11:17

2020 - 2021ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

பேரிடர் மேலாண்மைக்காக ரூ.1360.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விபத்துகளில் காயமடைந்த, ஊனமுற்ற மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக 2020-2021 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

2011-12 ம் ஆண்டு முதல் 2019-20 ம் ஆண்டு வரை வரவு செலவு திட்டங்களில் மொத்தம் 715 அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. இவற்றில் 537 அறிவிப்புகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

161 அறிவிப்புகளுக்கு தேவையான ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டு, பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.4315.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2011 ஏப்ரல் முதல் 2019 அக்டோப்ர வரை 24,10,107 இலவச வீட்டுமனை பட்டாக்கள் வீடில்லா ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

உழவர் பாதுகாப்பு திட்டம் ரூ.200.82 கோடியில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

ஸ்மார்ட்டு கார்டு - ரேஷன் பொருள்கள் வாங்கும் திட்டம்

தமிழகம் முழுவதும் 585 நியாய விலை கடைகளை பொங்கல் பரிசு வழங்குவதற்கு அரசு வழி வகை செய்துள்ளது.

ஸ்மார்ட் குடும்ப அட்டை வைத்திருப்போர் மாநிலத்தின் எந்தவொரு நியாய விலை கடையிலும் தங்களுக்குரிய பொருட்களை வாங்கிக்கொள்ளும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.


திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவப்படும்.

நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.15 கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

காவேரி- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.7667 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது…

காவிரி முதல் வெள்ளாறு வரையிலான இணைப்புக் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் ரூ.2,962 கோடியில் செயல்படுத்தப்படும்.