தில்லி தேர்தல் முடிவுகளை குடியுரிமை திருத்த சட்டத்தின் மீதான தீர்ப்பாக கூற முடியாது : அமித் ஷா உறுதி

பதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2020 20:03

புதுடெல்லி

புதுடெல்லியில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான தீர்ப்பாக டெல்லி தேர்தல் முடிவுகளைக் கூற முடியாது என்று உறுதியாகக்  கூறினார்.

அதேபோல தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்கு எதிரான மக்கள் தீர்ப்பு என்றும் கூற முடியாது என்று அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.

குடியுரிமை திருத்த சட்ட பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க விரும்புகிறவர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வந்து உள்துறை அமைச்சருடன் பேச அவகாசம் அளிக்க வேண்டும் என கடிதம் தந்தால் 3 நாட்களுக்குள் நேரம் ஒதுக்கப்படும் என்று அமித் ஷா கூறினார்.

 மத அடிப்படையில் இந்தியா இரண்டாக பிரிக்கப்பட்டதற்கு  காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.

தோல்விக்கு காரணம்

டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைய டெல்லி தேர்தலை, இந்தியா பாகிஸ்தான் டெஸ்ட் மேட்ச் என்று குறிப்பிட்டதும், சுடு !சுடு! துரோகிகளைச் சுடு! என்று கோஷம் எழுப்பியதும் காரணமாக இருக்கலாம் என அமித் ஷா கூறினார்.

அத்தகைய கோஷங்களை பாஜக தலைவர்கள் தங்கள் பிரச்சாரத்தின்போது எழுப்பி இருக்கக் கூடாது. அந்த கோஷங்கள் சூடாக விவாதிக்கப்பட்ட தும்  பாஜக கட்சிக்கும் இந்த கோஷங்களுக்கும்  எந்த சம்பந்தமும் இல்லை என்று தெளிவு படுத்தியது என்று அமித் ஷா கூறினார்.

தேர்தல் ஒரு வாய்ப்பு

 ஒரு தேர்தலில் வெற்றிக்கோ  தோல்விக்கோ  பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் போட்டி இடுவது இல்லை.

கட்சியின் கொள்கையை தேர்தல் மூலம் மக்கள் மத்தியில் விரிவுபடுத்துவதற்கு கிடைத்த வாய்ப்பாகவே பாரதிய ஜனதா கட்சி கருதுகிறது என அமித் ஷா குறிப்பிட்டார்.

டெல்லி தேர்தல் குறித்து என்னுடைய மதிப்பீடு தவறாகப் போய்விட்டது. ஆனால் அதற்காக டெல்லி தேர்தல் முடிவுகளை குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான தீர்ப்பு என்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிரான தீர்ப்பு என்றும் கருதக்கூடாது என்றும் அமித் ஷா உறுதியாகக் குறிப்பிட்டார்.