இந்தியாவில் 1.5 கோடி பேர் மட்டுமே வரி செலுத்துகிறார்கள்: பிரதமர் மோடி

பதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2020 19:29

புதுடெல்லி,

வெளிநாடு சென்று திரும்பும் இந்தியர்கள் 3 கோடி பேரில் 1.5 கோடி பேர் மட்டுமே வரி செலுத்துவதாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.

டெல்லியில் தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சி டைம்ஸ் நவ் நடத்திய மாநாட்டில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

உலகின் மிக இளமையான நாடு இந்தியா. இதன் ஆட்சிப்பொறுப்பை இரண்டாவது முறையாக பதவியேற்ற 8 மாதத்தில் இந்த அரசு நூறு முடிவுகளை எடுத்துள்ளது. நாட்டில் நடக்கும் மாற்றங்கள் சமூகத்திற்கு நம்பிக்கையை அளித்துள்ளன. அரசமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டது.

முத்தலாக் நடைமுறை தடை செய்யப்பட்டது. கார்ப்ப ரேட் வரி குறைப்பு, ரபேல் விமானம் வாங்கப்பட்டது. ராமர் கோவில் கட்டுதல், குடியுரிமை திருத்த சட்டம் என பல முக்கிய முடிவுகளை இந்த அரசு எடுத்துள் ளது.

புதிய பாய்ச்சலோடும், வலுவான பொருளாதார கட்டமைப்போடும், புதிய இந்தியா முன்னேறி வருகிறது. வேகமாக பொருளாதார வளர்ச்சியை அடைவதற்காள கட்டமைப் போடு இந்தியா இயங்கிக் கொண்டிருக்கிறது.

நாட்டின் பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடியாக  (5 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள்) உயர்த்த வேண்டுமென்ற இலக்கை எட்டுவது எளிதான வி‌ஷயமல்ல. அதே சமயம் அது எட்டக் கூடிய இலக்கு தான்.

நாட்டின் பொருளா தாரத்தின் மதிப்பு சுமார் ரூ.213 லட்சம் கோடியை (3 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள்) எட்டுவதற்கு 70 ஆண்டுகள் ஆகி உள்ளது. 

அந்த 70 ஆண்டுகளில் ஏன் இந்த நத்தை வேகம் என்று யாராவது கேள்வி கேட்டார்களா?

மிகப் பெரிய இலக்கை நிர்ணயித்து அதற்காக கடினமாக உழைப்பது மிகச் சிறந்த வி‌ஷயமாகும்.

இந்தியா போன்ற வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளுக்கு பல்வேறு சவால்களும் உள்ளன. நாட்டின் வரி விதிப்பு முறையில் சீர்திருத்தம் செய்ய முந்தைய அரசுகள் தயங்கின. ஆனால் வரி விதிப்பு முறையை மக்களை மையப்படுத்தியதாக  மாற்றியது பாஜக அரசுதான்.

வரி விதிப்புக்கு உட்பட்ட பலர் வரி செலுத்துவதை தவிர்க்க பல்வேறு வழிகளை கையாள்கின்றனர். இதனால் நேர்மையாக வரி செலுத்துவோரின் மீதான சுமை அதிகரிக்கிறது.

நாட்டில் 130 கோடி இந்தியர்களில் 2,200 பேர் மட்டுமே தங்களது ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் உள்ளதாக கணக்கு காட்டி உள்ளனர். 

வெளிநாடு சென்று திரும்பும் இந்தியர்கள் 3 கோடி பேரில் 1.5 கோடி பேர் மட்டுமே வரி செலுத்துகிறார்கள்.

எனவே வரி விதிப்புக்கு உட்பட்ட அனைத்து குடிமக்களும் நாட்டின் வளர்ச்சிக்காக வரி செலுத்த முன்வர வேண்டும். 

வரி செலுத்துவோரின் உரிமைகளை மதிக்கிறோம். வரி செலுத்துபவர்கள் எந்தவித துன்புறுத்தலுக்கும் ஆளாக மாட்டார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.