ஹபீஸ் சயீத்துக்கு சிறை தண்டனை: அமெரிக்கா வரவேற்பு

பதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2020 16:40

இஸ்லாமாபாத்,

   பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டி வழங்கியதற்காக ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஐந்தரை வருடம்  சிறை தண்டனை வழங்கியுள்ளது. இதனை  வரவேற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயித். ஜம்மாத் உத் தவா இயக்கத்தின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இவர் மீது பல்வேறு பயங்கரவாத வழக்குகள் இருந்தன.

பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக ஹபீஸ் சயித் மற்றும் அவரது அமைப்பை சேர்ந்த 12 பேரை பாகிஸ்தான் அரசு கடந்த ஜூலை 17-ம் தேதி கைது செய்தது.

பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக 13 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்தது.

இந்த நிலையில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டிய வழக்குகளில் தொடர்புடைய ஹபீஸ் சயிதுக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து  உத்தரவிடப்பட்டது.

இரண்டு வழக்குகளிலும் மொத்தம் 11 ஆண்டுகள் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.இரண்டு வழக்குகளிலும் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஏக காலத்தில் சயீத் அனுபவிப்பார் என நீதிபதி உத்தரவிட்டார்.

பாகிஸ்தானின் இந்த முடிவை அமெரிக்க அரசு வரவேற்றுள்ளது.  இதுபற்றி தெற்கு மற்றும் மத்திய ஆசிய வெளியுறவு துறை உதவி செயலாளர் ஆலிஸ் ஜி. வெல்ஸ் கூறும்பொழுது,

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு அதன் குற்றங்களுக்கு பொறுப்பேற்க செய்ய நடவடிக்கை மேற்கொண்டது மற்றும் பயங்கரவாதத்திற்கு கிடைக்கும் நிதியை நிறுத்தும் சர்வதேச முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு உள்ளது ஆகியவற்றை வரவேற்கிறோம். 

ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிக்கு சிறை தண்டனை விதித்திருப்பது ஒரு முக்கிய முன்னேற்ற நடவடிக்கை என்று தெரிவித்து உள்ளார்.