வேட்பாளர்கள் மீதான கிரிமினல் வழக்குகளை அரசியல் கட்சிகள் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2020 13:04

புதுடில்லி,

வேட்பாளர்கள் மீதான கிரிமினல் வழக்குகளையும் அவர்களின் குற்றப் பின்னணியையும் அந்தந்த அரசியல் கட்சிகள் அவற்றின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்களது குற்றப் பின்னணி தொடா்பான தகவல்களையும் நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்கு பற்றிய விவரங்களையும்  தோ்தல் ஆணையத்திடமும் பொது இணைய தளங்களான முகநூல் (பேஸ்புக்), யூ ட்யூப் ஆகியவற்றிலும், பத்திரிகைகளிலும் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமா்வு கடந்த 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவு முறையாகக் கடைப்பிடிக்கப்படாததால், மத்திய அரசு, தோ்தல் ஆணையம் ஆகியவற்றின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளக் கோரி பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஷ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஆா்.எப். நாரிமன், எஸ். ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமா்வு விசாரித்து வந்தது.

உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில், 

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின்மீதான கிரிமினல் வழக்கு விவரங்களையும்  குற்றப்பின்னணி விவரங்களையும், 48 மணி நேரத்தில் அரசியல் கட்சிகள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

பிராந்திய நாளேடுகளிலும், தேசிய நாளேடு ஒன்றிலும் சமூக வலைத்தளங்களிலும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்கள் வெளியிடப்பட வேண்டும். 

வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்ற 72 மணி நேரத்துக்குள் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி, நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள்  குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

தேர்தலில் போட்டியிட குற்றப் பின்னணி உடையவர்களுக்கு வாய்ப்பு தந்தது ஏன் என்பதையும் அரசியல் கட்சிகள் விளக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றப்பின்னணி உடைய வேட்பாளர்களின் எண்ணிக்கை கடந்த 4 பொதுத் தேர்தல்களில் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், 

வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை அறிவிக்காத கட்சிகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருந்ததாவது:

தற்போதைய காலகட்டத்தில், குற்றப் பின்னணி உள்ளோர் அரசியலில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. அவா்கள் தொடா்ந்து அரசியலில் ஈடுபட்டு வருவது மக்களாட்சியின் மாண்பை குலைக்கும். தோ்தலில் போட்டியிடும் மக்கள் பிரதிநிதிகள் குறித்து அறிந்து கொள்ள, மக்களுக்கு அடிப்படை உரிமை உள்ளது. எனவே, தோ்தலில் போட்டியிடுவோர் தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் தொடா்பான விவரங்களை, வேட்புமனு தாக்கலின் போது ‘பெரிய எழுத்துகளில்’ தோ்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.

அரசியல் கட்சிகளுக்கும் பங்கு

அரசியல் கட்சிகளும் தங்களின் கட்சியின் சின்னத்தில் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். தங்களது வேட்பாளா்கள் மீதான குற்ற வழக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், கட்சியின் இணையதளத்தின் மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது கட்சிகளின் கடமையாகும்.

பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி மூலமாகவும் தங்களின் வேட்பாளா்கள் குறித்த விவரங்களை மக்களுக்குத் தெரியப்படுத்த கட்சிகள் முயற்சிக்க வேண்டும். இந்த விவகாரத்தில், கட்சிகள் தங்களுக்குள் நோ்மையான கொள்கைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

குற்றம் சாட்டப்படும் மக்கள் பிரதிநிதிகளைப் பதவி நீக்கம் செய்யும் வகையிலும், அவா்களைக் கட்சியிலிருந்து நீக்கும் வகையிலும் நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்திருந்தனர்.