கலைமாமணி வாமனன் எழுதும் ‘திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் 1918–2018’ – 103

பதிவு செய்த நாள் : 16 பிப்ரவரி 2020

பாரத தாய்க்கு ஏற்றதொரு பாமாலை!     

‘ரத்த திலகம்’  படத்தில், ‘பனிபடர்ந்த மலையின் மேலே’ பாடல் மிகவும் நீண்டு போகாமலும் கட்டுக்கோப்பாக அமையவும் கே.வி. மகாதேவன் பயன்படுத்திய உத்தி என்ன?

பல்லவி, அனுபல்லவி, சரணங்கள், அல்லது பல்லவி, அதைத் தொடர்ந்து வரும் சரணங்கள் என்ற அமைப்பில்  பாடலின் மெட்டை உருவாக்காமல், பல்லவி, அதை தொடர்ந்து வரும் தாளக்கட்டில் வராத பகுதிகள் என்று அமைத்துக்கொண்டார் மகாதேவன்.

இப்படி தாள ஆவர்த்தங்களில் வராமல் அமைந்த பாடல் பகுதியை, விருத்தம், தொகையறா, கஸல் என்று கூறும் வழக்கம் திரை இசைவாணர்கள் மத்தியில் இருந்தது (இந்த ‘கஸல்’, இந்தி மற்றும் உருதுவில் பாடப்

படுகிற  கஸலுடன் தொடர் புடையதாக இருந்தாலும், தாளக் கட்டில் வராத பகுதி என்பதற்கு மேல் அந்த பாடல் வகையறாவுடன் இதற்கு எந்த சம்பந்தமும் இல்லை....

பாடலின் பல்லவி, இரண்டு அடுக்குகள் இருப்பது போல் அமைந்தது.

அதில் வரும் முதல் அடுக்கு,

‘‘பனிபடர்ந்த மலையின் மேலே

படுத்திருந்தேன் சிலையைப் போலே

கனி தொடுத்த மாலை போலே

கன்னி வந்தால் கண் முன்னாலே’’ .

இதைத் தொடரும் இரண்டாவது அடுக்கு,

‘‘குனிந்து நின்ற முகத்தைப் பார்த்தேன்

குங்குமப்பூ நிறத்தைப் பார்த்தேன்

கனிந்து நின்ற கன்னம் பார்த்தேன்

கண்ணீரின் சின்னம் பார்த்தேன்’’ .

இவை இரண்டுக்கும் ஒரே மாதிரியான மெட்டை அமைத்தார் மகாதேவன்.

‘பனி படர்ந்த’ என்ற எடுப்பை, மேல் ஸ்தாயியில் (அப்பர் ஆக்டேவ்) வீரியத்துடன் மேல் பஞ்சமத்தைத் தொடும் வகையில் அமைத்தார் மகாதேவன். அது டி.எம்.எஸ்சின் குரல் தொடக்கூடிய எல்லை. பல்லவி தொடங்கப்படும் போதே கேட்பவர்களைக் கவர வேண்டும் என்பதற்கான ‘பளிச்’ ஆரம்பம் இது.

ஆனால் பல்லவி சொல்வது என்ன? பனிச்சிகரங்களில் ஒரு இந்திய போர்வீரன் பாரதத்தாயின் தரிசனம் பெறுகிறான் என்பதைத்தானே? இதைதெரிவிக்கும் வகையில்  பரிவும், பாசமும் காட்டும் படி ஸ்வரங்கள் கீழே இறங்கி வந்து, ‘கன்னி வந்தாள் கண் முன்னாலே’ என்பதில் நிலைகொள்கின்றன.

பின்னர் மீண்டும் மேல் ஸ்தாயி தொடக்கத்திலிருந்து இன்னொரு சுழற்சி, ‘குனிந்து நின்ற முகத்தைப் பார்த்தேன்’ என்பதிலிருந்து தொடங்கி, ‘கண்ணீரின் சின்னம் பார்த்தேன்’ என்பதில் முடிகிறது. ஒரு பாரதப்போர் வீரன் பாரதத்தாய்  கண்ணீர் சிந்தும் காட்சியைக் காண்கிறான் என்பதைப் பல்லவி நமது உணர்வில் அற்புதமாக நிறுவுகிறது!

தேசத்தாய் கண்ணீர் சிந்துகிறாள் என்பதைப் பார்த்தவுடன் தானும் கலங்கிப்போகிறான் போர்வீரன். ‘கலங்கினேன், துடித்தேன்’...என்று, உணர்ச்சிகரமாக இசையில் பேசுவது போன்ற தோரணை யில் அவன்  தன்னுடைய மனோ நிலையை வெளிப்படுத்துகிறான்.

தாள  ஆவர்த்தங்களில் வராமல், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில், சொற்களின் இணைவுக்கு ஏற்ப வருவதால் இவை பாட்டுடன் பேச்சின் தன்டுமையேடும் விளங்குகின்றன.

‘‘நீ அழுத நிலை அறிந்து

நிலவே அழுததம்மா

வானம் அழுததம்மா

வண்ண மலர் புலம்புதம்மா

கானம் அழுததம்மா

கானகமும் கலங்குதம்மா’’ என்று இந்த வகையில் பாடலில் வருவது, அவலச் சுவையைக் காவிய நடையில் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

கம்ப ராமாயணத்தின் அயோத்தியா காண்டத்தில், ராமன் காட்டுக்குப் போகவேண்டும் என்கிற போது, கம்பர் வெளிப்படுத்துகிற வார்த்தைகளை இவை நினைவுபடுத்துகின்றன. ‘‘ஆவும் அழுத, அதன் கன்று அழுத, அன்றலர்ந்த பூவும் அழுத, புனல் புள் அழுத, கள்ளொழுகும் காவும் அழுத....’’  என்று பொங்கி வரும் ராமாயண பாடலை ஒத்திருக்கின்றன கண்ணதாசனின் வரிகள்.

இத்தகைய காவியச்சுவை பீறிட்டு வருவது

போலத்தான் மகாதேவனும் இசையமைத்தார். அவற்றை உள்வாங்கி டி.எம்.சவுந்தரராஜன் பாடிய போது, அந்த உணர்ச்சிப்பெருக்கு சிவாஜியின் மிகச்சிறந்த நடிப்புக்கு வித்திடுவ தாக இருந்தது.

இத்தகைய தொகையறா வரிகள் வருத்தம் தோய்ந்தவையாக அமைந்தன என்றால், அவற்றைத் தொடர்ந்து வரும் வரிகள் உணர்ச்சிப்பிரவாகத்தின் உச்சநிலைக்குச் செல்கின்றன.

‘‘காரணத்தைச் சொன்னால்

காளை நான் உதவி செய்வேன்

வாரணங்கள் பூட்டி வந்து

வண்ணத்தேர் ஓட்டி வந்து

தோரணங்கள் ஆடுகிற

தூய நகர் வீதியிலே

ஊர்வலமாய் உன்னை

உடன் அழைத்து நான் வருவேன்,’’ என்று தேசத்தாய் மீதான தன்னுடைய ஆர்வத்தை தேசத்தின் புதல்வன் வெளிப்படுத்தும்போது,  மயிர்கூச்செறியும் வகையிலே மெட்டு களைகட்டுகிறது. இந்த வரிகளை, டி.எம்.எஸ் தன்னுடைய குரலின் மேல்நிலையில் (தாரஸ்தாயியில்) பாடும் போது போர்வீரனின் நெகிழ்ச்சியும் உற்சாகமும் தெளிவாக வெளிப்படுகின்றன.   இதை தொடர்ந்து போர்வீரன் அன்னையின் முகத்தில் ஒரு புன்முறுவலைக் காண்கிறான்.

முதல் முறையாகப் பாரதத்தாய் பேசுகிறாள். எல்லோரையும் உறவாக நினைக்கிற தன்னுடைய அன்பு நிலையை,  

‘அமைதி தேடி உருகி நின்றேன்

அன்பு வெள்ளம் பெருக கண்டேன்

இமயம் முதல் குமரி வரை என்

இதயத்தையே திறந்து வைத்தேன்’ என்று  பாரத மாதா கூறுகிறாள். இந்த ஜீவனுள்ள கூற்று, ‘பனி படர்ந்த மலையின் மேலே’ என்கிற பல்லவியின் மெட்டிலேயே அமைந்திருக்கிறது.

இந்த வகையில் பல்லவியின் மெட்டில் அமைந்த வரிகள், உணர்வுகளை வெளிப்படுத்தும் தொகையறா வரிகள் என்று மாறிமாறி வருகிற பாடல், இந்திய-, சீனா போரில் பாரதத்தின் நிலையை விளக்கவும் இந்தியர்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்கவும் உதவியது.

கண்ணதாசன் எழுதி மகாதேவன் மெட்டமைத்த இரத்தத் திலகத்தின் இந்த சிரஞ்சீவிப் பாடல், தேச பக்தியை வெளிப்படுத்தும் ஒரு சிகரப் பாடலாக அமைந்திருக்கிறது.  

(தொடரும்)