தியாக தீபம்!

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2020

வேலுார் மாவட்டம், சேர்பாடி, அரசு நடுநிலைப்பள்ளியில், 6ம் வகுப்பு படித்தேன். என் தம்பிகள் இருவரும் அதே பள்ளியில் படித்தனர். காமராஜர், மதிய உணவு திட்டத்தை அமல் படுத்தியிருந்தார்.

அந்த உணவை, தம்பிகளுடன் சாப்பிடுவேன். தீவிர காங்கிரஸ் உறுப்பினரான என் தந்தை, இதை விரும்பவில்லை. எங்களிடம், 'ஒருவேளை கூட சாப்பிட வசதியில்லாத குழந்தைகள், பள்ளியில் மதிய உணவு உண்பது தான் தர்மம்...' என்று அறிவுரைத்து, தவிர்க்க சொன்னார்.

என்ன சொல்லியும் நாங்கள் கேட்கவில்லை.

இதனால் வருந்திய தந்தை, என் வகுப்பு ஆசிரியர் பிரகாசத்திடம், நிலைமையை விளக்கி, 'என் பிள்ளைகளுக்கு, மதிய உணவு அளிக்க வேண்டாம்...' என்று வேண்டினார்.

'தன் வயிறு நிறைந்தால் போதும் என்று நினைப்பவர் மத்தியில், அடுத்த குழந்தையின் வயிறு வாடக் கூடாது என்று எண்ணும் உங்கள் நல்ல மனம் ஆச்சரியப்படுத்துகிறது...' என்று கூறி சமாதானம் செய்தார் ஆசிரியர்.

தந்தையின் நியாயமான கோரிக்கையும், நல்ல எண்ணத்தையும் என்னிடம் பக்குவமாக எடுத்துரைத்தார்.

அவரின் அறிவுரை, பசுமரத்தாணியாய் நெஞ்சில் பதிந்தது. பள்ளியில் வழங்கிய மதிய உணவை தவிர்த்தோம்.

பெருந்தன்மையான என் தந்தையையும், அறிவுரைத்த ஆசிரியரையும் எண்ணும் போதெல்லாம் நெகிழ்கிறேன்!

–- கு.கோப்பெருந்தேவி, சென்னை.